Bio Data !!

18 July, 2026

# பயணக் கட்டுரை. பயணங்கள் நம் மனதில் அடைந்து கிடக்கும் சோர்வெனும் ஒட்டடையை சுத்தம் செய்து மிச்ச வாழ்வை புத்துணர்வோடு கொண்டு செல்ல உதவும். பணியில் இருக்கும் வரை இதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இருந்ததில்லை. மத்திய அரசு அலுவலகத்தில் நாலாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் சென்று வரும் தொகையைத் தந்து விடுவார்கள். அப்படி ஒரு வசதி இருந்தும் நாங்கள் சென்றதில்லை. என் கணவருக்குப் பயணங்கள் பிடிப்பதில்லை. நானோ அலுவலகமே கதி என்றிருந்தேன். ஓய்வு பெற்ற பின் இருவர் மனமுமே கொஞ்சம் மாற்றம் அடைந்தது. வருடத்துக்கு இரண்டு முறை எங்கேயாவது சுற்றுலாவாக போய் வருவது என முடிவெடுத்தோம். ஒரு முறை பெங்களூர் சென்று மகள் குடும்பத்துடன் கொஞ்ச காலம் கழிப்பது. ஒரு முறை விடுமுறைக்கு மகள் குடும்பம் எங்கள் வீட்டிற்கு வருவார்கள் ஆக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரொட்டீன் வாழ்க்கையில் இருந்து மாற்றம் கிடைக்கும். அது மனதை உற்சாகமாக வைத்திருக்கும் என்று முடிவு செய்தோம். நல்ல பலன் கிடைத்தது. ஆரம்பத்தில் எனக்காக வந்த என் கணவர் போகப் போக அவரே எங்கே போகலாம் என யோசிக்கத் தொடங்கினார். பலரும் ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்த காரியம் தான் நாங்கள் ஓய்வு பெற்ற பின் தொடங்கினோம். Better late than never. சமீபத்தில் ஒரு ஐந்து நாள் பயணம் சென்று வந்தோம். அதைப் பற்றி ஒரு பயணக் கட்டுரை எழுதலாம் என நினைக்கிறேன். மக்கள் விருப்பம் பார்த்து போய் வரும் இடங்களைப் பற்றியும் அங்கு நேர்ந்த நிகழ்வுகள் பற்றியும். எழுதுகிறேன். இந்த முறை பார்த்த இடங்கள் சென்னை, பாண்டிச்சேரி, தரங்கம்பாடி,காரைக்கால் , நாகூர், வேளாங்கண்ணி. நான் பொதுவாகவே கடவுள் நம்பிக்கை உடையவள் ஆதலால் தேவாலயம் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இந்த முறை ஒரு வித்தியாசமாக வேற்று மதத்திலும் இருக்கும் நம் நண்பர்களுக்காக ஹிந்து, கிறிஸ்டின், முஸ்லிம் என மூன்று மத நண்பர்களும் பார்ப்பதற்கான மத வழிபாட்டு தலங்களை கவர் செய்தோம். வீடியோக்களை என் யூட்யூப் சானலில் பதிவேற்றவும் உதவியது. இன்னுமொரு வழக்கம் உண்டு. யார் வீட்டில் தங்கி இருந்து இடங்கள் சுற்றி பார்க்க செல்கிறோமோ அந்த குடும்பம் மகிழ்வோடும் ஆரோக்கியத்தோடும் இன்னல்கள் இன்றி வாழ வேண்டுமென ப்ரார்த்தித்து நான் செல்லும் சர்ச்களில் பூஜைக்கு கொடுப்பேன். அது அப்படி ஒரு மன நிறைவைத் தரும். இந்த முன்னுரையோடு நாளை டேனிஷ் கோட்டை பற்றி எழுதுகிறேன். தங்கள் கருத்தை பகிருங்கள். விமர்சனங்கள் தானே எழுத்தின் தரத்தைக் கூட்டும். எதிர் நோக்கி இருக்கிறேன். ********** 2 ஆம் நாள் டேனிஷ் கோட்டை. பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தூரத்தில் இருக்கும் இடம் காரைக்கால். பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி நாலு இடங்கள் சேர்ந்து பிரெஞ்சு யூனியன் பிரதேசம். மாகி, ஏனாம் இரண்டு இடங்களையும் வரிசையில் வைத்திருக்கிறேன். பார்த்து விட வேண்டும். காரைக்கால் போகும் வழியில் தரங்கப்பாடி என்றொரு இடம் உண்டு. இது மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது. அங்கே டேனிஷ் கோட்டை இருக்கிறது. சிறிய அளவில் தான் இருக்கிறது. அந்த காலத்தில் கடல் வழி கப்பலில் வரும் தளவாடங்களை இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள். கடலை நோக்கிய வண்ணம் இரண்டு பழைய கால பீரங்கிகளை வைத்திருக்கிறார்கள். பழைய காலப் பொருட்கள் , இப்பொழுது கடல் மேலேறி வந்து வந்து கோட்டையை நெருங்கி விட்டது. ஆனால் மற்ற கடற்கரைகளைப் போல கல் வேலி கட்டி மறிக்காததால், தாய்மடியில் குழந்தை குதூகலிப்பதைப் போல நீரோடு விளையாட முடிகிறது. இங்கு தான் இந்தியாவில் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிட்டதாகச் சொல்கிறார்கள். கோட்டைக்கு போகும் வழியில் ஒரு வாயில் இருக்கிறது. அது அந்த கால அரண்மனை வாயிலை நினைவுபடுத்துகிறது. 1718 இல் கட்டப்பட்ட ஒரு. சர்ச் இருக்கிறது. பழைய கட்டடங்களை அப்படியே பழைமையோடு பாதுகாக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த வழியில் உள்ள கட்டடங்கள் எல்லாம் பெயின்ட் செய்யப்பட்டு புதிதாக இருக்கின்றன. . அதனால் பழமை மாறியது போல் தான் தெரிகிறது. பதிக்கப்பட்ட வருடங்களை வைத்துத் நான் முந்நூறாண்டு பழமையானது எனத் தெரிகிறது. முன்தன் முதலில் பெண்களுக்கான செகன்டி கிரேட் டிரெயினிங் பள்ளி இங்கு தான் வந்ததாகச் சொல்கிறார்கள். கோட்டைக்குள் செல்ல ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். காலை பத்து மணி முதல் மாலை 5.45 வரை உள்ளே இருக்கலாம். மற்ற எல்லா பீச்களிலும் இருப்பது போல தள்ளு வண்டிகளில் மாங்காய் பத்தை, ஐஸ், போன்ற தின்பண்டங்களும் கிடைப்பதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை ரசிக்கலாம். கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடமாடிய மக்கள் கால் வைத்த இடங்களில் நாமும் வைத்திருக்கிறோம் என்பதே பரவச உணர்வைத் தரும். வாசிப்பதைப் போலவே கண்களுக்கும் விருந்து அளிக்க chellanaikutti என்னும் என் யூட்யூப் சானலில் பார்க்கலாம். எழுத்துக்களை நான் கொடுத்திருப்பது போலவே கொடுத்தால் வந்து விடும். நாளை காரைக்கால் அம்மையார் ஆலயமும், நாகூர் தர்காவும் பற்றிய தகவல் கள் தருகிறேன். **"" 3 ஆம் நாள் காரைக்கால் அம்மையார் ஆலயம் & நாகூர் தர்கா பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தொலைவில் காரைக்கால் இருக்கிறது. காரைக்கால் அம்மையாரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதால் அவர்கள் பெயர் கொண்ட ஆலயத்தை பார்க்க முடிவு செய்தோம். சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் முடிந்து உள்ளதால் புதிதாக பெயின்ட் அடித்து பள பளவென்று இருந்தது கோயில். 63 நாயன்மாரில் மொத்தம் மூன்று பேர் பெண்கள். இவர் அவர்களுள் ஒருவர். பெரிய சிவ பக்தை. இவரது இயற் பெயர் புனிதவதி. இவர் காரைக்காலில் கிபி 300 யிலிருந்து 500 க்குள் பிறந்திருக்கலாம் என்கிறார்கள். பேரழகும் தெய்வீக அம்சமும் கொண்டவர். இவர் கயிலை மலையில் கைகளால் "நடந்து" சென்று சிவபெருமானைக் காண விரும்பியதால் சிவனே இவரை "அம்மையே " என அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் முக்தி பெற்ற இடம் திருவாலங்காடு. இவர் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வொன்றின் நினைவாக காரைக்காலில் மாங்கனித் திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. வேற எங்கேயும் அம்மையாருக்கு கோயில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். காரைக்காலில் வெளி நாட்டுப் பொருட்கள் கிடைக்கும் என ஆசைப்பட்டுத் தேடினேன். அவ்வளவு திருப்தியாக எதுவும் கிடைக்கவில்லை் அடுத்த நாங்கள் சென்ற இடம் காரைக்காலில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள நாகூர். அங்கே உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா. இது நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள ரொம்ப பிரபலமான ஒரு இடம். சுபி துறவி சையத் சாகுல் ஹமீது அவர்களின் கல்லறையின் மேல் கட்டப்பட்டது. இங்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. நம் நட்பில் இருக்கும் நண்பர்களுக்காக அங்கேயும் சென்று ஒரு வீடியோ எடுத்திடுவோம்னு போனோம். என்னுடைய "chellanaikutti" என்னும் யூட்யூப் சானலில் பாருங்கள். மிக உயரமான தர்கா. நெருக்கமான தெருவுக்கு நடுவில் இருக்கிறது. உள்ளே போகு முன் கை கால் கழுவி உள்ளே வரச் சொல்கிறார்கள். நம் காலடிகளை கழற்றி விட ஒரு இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். மயில் பீலியால் தலையை வருடி நம் பெயர்களைக் கேட்டு சில மந்திரங்கள் சொல்கிறார்கள். பசித்தவர்களுக்கு உணவளிப்பதாகச் சொல்லி பண உதவி கேட்கிறார்கள். விரும்பினால் கொடுக்கலாம். அழகான கண்ணாடி அலங்காரங்களால் மேற்கூரை அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அனைவரும் வெளிப்புறம் அமர்ந்திருக்க கருவறை போன்ற ஒரு அறைக்குள் ஆண்கள் செல்கிறார்கள். இரண்டு அறைகள் சாத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதை அங்கே வருபவர்கள் தொட்டுக் கும்பிட்டு செல்வதைப் பார்த்த நான் விவரம் கேட்டேன் அது இருவரை அடக்கம் செய்த இடம் என்று சொன்னார்கள். ஆண்டு தோறும் சந்தனக் கூடு என்னும் திருவிழா நடக்கிறது. பக்கத்திலேயே தான் திருநள்ளாறு இருக்கிறது. ஹிந்துக்கள் சனிப் பெயர்ச்சி சமயங்களில் தரிசிக்கும் ஆலயம். இதைத் தவிர ஏடுகளை எடுத்து நம் முன் ஜென்ம பலன்களை சொல்லும் வைத்தீஸ்வரன் கோவிலும் அருகிலேயே உள்ளது. காரைக்காலில் இருந்து பாண்டி திரும்பும் வழியில் சாலையை நோக்கிய படி பிரம்புக் கடைகள் இருக்கின்றன. ஏகப்பட்ட பிரம்பு சாமான்கள் வைத்திருக்கிறார்கள். பார்க்கலாம் . வாங்கலாம். *** 4 ஆம் நாள் பதிவாக இருந்தாலும் போனது முதல் நாளில். உறவினர் வீட்டுத் திருமணம் சென்னையில் ST. Thomas Mount இல். அவர்கள் CSI. அந்த சர்ச் மலை அடிவாரத்திலிருக்கிறது. மலை மேல் RC Church. நான் ஒரு வருடம் சென்னையில் டிரெயினிங்கில் இருக்கும் போது போயிருக்கிறேன். படி வழியாக ஏறி. இடம் கொஞ்சம் ஒதுக்குப் புறமாய் இருப்பதால் அங்கங்கே காதல் ஜோடிகள். இப்போ காலச் சூழ்நிலையால் கூடியிருக்கலாம். இல்லை மக்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால் குறைந்திருக்கலாம். தெரியவில்லை. நாங்கள் காரிலேயே மலை முகடு வரை சென்று விட்டதால் ஒரு பதினைந்து படிகள் மட்டும் ஏற வேண்டி இருந்தது. கடந்த மாதம் தான் பஸிலிக்காவாக (திருத்தலமாக ) போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்ச் இடித்துக் கட்டும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. மேலிருந்து நகரமும் வானூர்தி நிலையமும் பார்க்க கொள்ளை அழகாய் இருக்கும். அதுவும் இரவு நேரத்தில். மூன்று நிமிட வீடியோ என் chellanaikutti youtube channel இல் இணைத்திருக்கிறேன் பாருங்கள். அடுத்து ரிசப்ஷன் AVM Gardens vada palani. உள்ளே போகும் போதே மேலே உள்ள உலக உருண்டை என் பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் சென்றது. அப்பா தெரிந்தவர் மூலம் ஷூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்கள். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டிங் அலங்காரம் மட்டும். மஞ்சுளாவோடு படிகளில் ஏறி நடனம் ஆடுவார். அந்த இடம். இன்னொன்று ஜெய்சங்கர் நடித்த நூற்றுக்கு நூறு. அது ஷூட்டிங் பார்த்தோம். சலித்தோம். ஒரு வசனத்தை எத்தனை முறை ரீடேக். அப்பப்பா!! இப்பொழுது முன் பாதியில் காவேரி மருத்துவமனை இயங்குகிறது. பின் பாதியில் தான் பஃபே. நல்ல வேளையாக மழை இல்லை. புனித தேற்றரவு அன்னை ஆலயம் என்று ஒன்று காரைக்காலில் இருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பழமையான சர்ச். இந்த ஆலயத்தின் பெயர் அதிகம் கேள்விப்படாதது. 1739 இல் ஒரு சின்ன ஆலயமாக தொடங்கி இருக்கிறது. காரைக்காலில் லகட் ஹவுஸ், படகுத்துறை, பீச் என்று நேரம் கழிக்க இடங்கள் உள்ளன. வண்ணமடித்த படகுகள் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது வானவில் இறங்கி வந்து கடலில் நீந்துவது போல் இருந்தது. அழகை ரசிப்பவர்கள் தூசியும் துரும்பும் கூட அழகு தான். ஐந்தாம் பதிவு நான் ராஜஸ்தானில் பயணித்த போது நடந்த திடுக்கிடும் நிகழ்வை சொல்லி நிறைவு செய்கிறேன். **** ஐந்தாம் நாள் பதிவு. ஆனால் இது ராஜஸ்தானில் என் பயண அனுபவம். நாலு வருடங்கள் பிட்ஸ் பிலானியில் என் மகள் ப்ரொபஸராக பணி புரிந்தாள். " உன்னால் தானம்மா இவ்வளவு பெரிய ஒரு இடத்தில் என் பாதம் பதிக்க முடிந்தது" என பெருமையாக சொல்லி இருக்கிறேன். விடுமுறைக்கு எங்காவது கூட்டிச் செல்வாள். அங்கே நான் , என் மகள், அவள் மகன் மூன்று பேர் தான். பேரன் சிறுவன். டெல்லி ஆக்ரா சுற்றிப் பார்க்க கிளம்பினோம். பிலானியில் ரயில் நிலையம் கிடையாது. அங்கிருந்து ரயில் நிலையம் செல்ல காரில் ஒரு மணி நேரம் ஆகும். அங்கே எல்லா சீதோஷ்ண நிலைகளும் உக்கிரமாகத் தான் இருக்கும். நாங்கள் போனது நல்ல பனிக் காலம்.நடு இரவில் தான் டிரெயின். நாங்கள் வீட்டிலிருந்து இரவு பதினொரு மணிக்கு மேல் புறப்படுகிறோம். வழக்கமாக வரும் டிரைவர் வர முடியவில்லை என்று வேறு ஒருவரை அனுப்பி இருக்கிறார்.அதனால் அவர் எப்படி ஓட்டுவாரென்பது தெரியாது. போற வழியிலெல்லாம் பனி மூட்டம். பாதையே தெரியவில்லை. ஓட்டுநர் ஒரு குத்து மதிப்பா ஓட்டுறார். பாதைக்கு அஞ்சுவதா? பனிக்கு அஞ்சுவதா? புது ஓட்டுனருக்கு அஞ்சுவதா எனத் தெரியவில்லை. என் மகள் முன்னால் அமர்ந்து அவளுக்கு தெரிந்த ஹிந்தியில் ஓட்டுநருடன் உரையாடிக் கொண்டே வருகிறாள். பேரன் என் மடியில் உறங்குகிறான். நான் ஜெபமாலை உருட்டி ஜெபித்துக் கொண்டே. பாதி தூரம் போன நிலையில் திடீரென்று ஒரு லாரி வேகமாக எங்களைக் கடந்தது. பின் வேகம் குறைத்து எங்களுக்கு முன்னாலேயே சென்றது. அதன் பின்னாடி உள்ள விளக்கு வெளிச்சத்தில் ஓட்டுநர் சுலபமாக ஓட்டி விட்டார். நான் சொல்வதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். சரியாக நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இடது புறமாக ஓரங் கட்டி லாரி நின்று விட்டது. நன்றி சொல்லி உள்ளே ஓடினோம். அது சின்ன ஸ்டேஷன் என்பதால் கொஞ்ச நேரம் தான் நிற்கும். நாங்க புக் செய்திருந்தது ஏசி கம்ப்பார்ட்மென்ட். ஸ்வெட்டர் போட்டு தலைக்கு மப்ளர் போட்டு மூடி இருந்தாலும் பல் எல்லாம் டக் டகா டக டகாவென தந்தி அடித்துக் கொண்டிருக்கிறது. டிரெயின் வந்து நின்றது. கம்பார்ட்மென்ட்டின் இருபுறமும் கதவுகள் இறுக்க மூடி இருக்கின்றன. தட்டுகிறோம். திறக்க மாட்டேன் என்கிறார்கள். ஓடி அடுத்த கதவைத் தட்டுகிறோம். அவர்களும் திறக்கவில்லை. மறுபடி முதல் கதவுக்கே வருகிறோம். அப்போது ஒரு குரல் ' மேடம் இதர் ஆவோ( இங்கே வாங்க) " டிடிஆர் கதவைத் தட்டிய சத்தம் கேட்டு கதவைத் திறந்து அழைத்திருக்கிறார். எங்களுக்கு ரயிலின் சத்தத்தில் கேட்கவில்லை. பின்னாலேயே ஓடி வந்து அழைத்தார். உள்ளே ஏறி அவருக்கு நன்றி சொல்லி , அமர்ந்து "அப்பாடா" என்றோம். நான் என் மகளிடம் கேட்டேன் " இவ்வளவு தடங்கல்ல "ஒரு" இடத்துல பிரச்னை ஆகி இருந்தாலும் நாம தொலைஞ்சோம். எப்படிம்மா தைர்யமா இருந்த?" அவள் " அட போம்மா நீயே பயந்து கிட்டு இருக்கிற. இதுல நான் வேற பயத்தேன்னு தெரிஞ்சா அப்புறம் உன்னைச் சமாளிக்கிறது கஷ்டமா போயிடும். அதான் தைர்யமா இருந்த மாதிரி காட்டிக்கிட்டேன். வழக்கமா ஆகுற நேரத்துல ஒரு மணி நேரம் முன்னாடி கிளம்பினோம் ஆனா பனியினால டிரைவர் வண்டிய ஓட்ட முடியல. உருட்டுறார். டிரெயினை விட்டிருந்தா எங்கே போய் இடம் தேடி பஸ்சில போறது. ஸ்டேஷனுக்குள்ள போனதும் கார் போயிடுச்சு. டிரெயினுக்கு உள்ள ஏற முடியாம போயிருந்தா அடுத்து என்ன செய்றது" இவ்வளவும் யோசிச்சு கிட்டுத் தான் உன்னிடம் ஜோக் அடிச்சுகிட்டு இருந்தேன்னு சொன்னாள். என் தங்கமேன்னு மனசுக்குள் நெட்டி முறித்துக் கொண்டேன். எனக்கு மகன் இல்லாத குறையைத் தீர்ப்பவர்கள் என் இரண்டு பெண் குழந்தைகளும். எங்க அம்மா என்னைத் தைர்யமாக வளர்க்க , நான் என் பிள்ளைகளைத் தைர்யமாக வளர்த்து விட்டேன். இனி அவர்கள் பிள்ளைகளை அவர்கள் தைர்யமாக வளர்த்து விடுவார்கள். இப்படித் தானே நல்ல பண்புகள் தலை முறை தலை முறையாக கை மாற்றி விடப் படுகின்றன. என் எழுத்தை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்து ஒரு பயணக் கட்டுரையில் சந்திப்போம். வர்ர்ர்ரட்டா!! *******

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!