Bio Data !!

14 November, 2026

சு. தமிழ்ச்செல்வியின் தொப்புள் கொடி

நாவலின் பெயர் : தொப்புள் கொடி. ஆசிரியர் : சு. தமிழ்ச்செல்வி பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். விலை : 220 ரூபாய் முதல் பதிப்பு : டிசம்பர் 2025 சு. தமிழ்செல்வி என் ஆதர்ச பெண் எழுத்தாளர். ஏழைப் பெண்களின் அவலத்தை அவர் அளவுக்குச் சொல்ல இதுவரை ஒரு சிலரே இருக்கிறார்கள் என நினைக்கிறேன் . இவரது "அளம்" "கீதாரி " போன்ற நாவல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நமக்கு அக்கரையாய் சொல்லிக் கொடுக்கும். தாய்க்கும் மகளுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு . தன் தந்தையுடன் தன்னையும் விட்டுவிட்டு வேறொரு ஆண் மகனுடன் ஓடி விட்ட தாயின் பாசத்துக்கு ஏங்கும் மகள் மலர்கொடி . மலரோடு வாசுகி , காந்தி இவர்களும் பொம்மை செய்யும் தொழில் செய்கிறார்கள் . பணத் தேவையை முன்னிட்டு ஏழு நாளும் வேலைக்கு வரும் மலர் சம்பளம் வாங்கும் போது , விடுப்பு எடுத்துக் குறைவான சம்பளம் வாங்கும் வாசுகி தன் தாயின் நோய்க்கு பார்க்க வேண்டியது இருப்பதால் ஒரு சட்டை துணி கூட வாங்க முடியாதிருக்கும் நிலையை சொல்லி வருந்தும் போது பணம் கொடுத்து உதவுகிறாள். இதுதான் , எளியவர்களின் ஏழ்மையை கோடிட்டு நம்மை கவனிக்க வைப்பது தான் ஆசிரியரின் தனிச்சிறப்பு என்கிறேன். வாசுகியின் அப்பா உப்பு வியாபாரி . என் வீட்டு வழியாக கல் உப்பு விற்கும் ஒருவரிடம் உப்பு விற்று எவ்வளவு கிடைத்து விடும் என்று கேட்ட பொழுது அவர் இந்த ஒரு மூடை உப்பும் விற்றால் 400 ரூபாய் கிடைக்கும் என்றார் . ஒரு மூட்டை உப்பை விற்க எவ்வளவு நாள் ஆகும் ? சைக்கிளில் ஊரெல்லாம் சுற்று கிறார் . வாசுகியின் அப்பா ஒரு நாளைக்கு சைக்கிள் வாடகை பத்து ரூபா கொடுக்கணும். ஒரு நாள் ஆற்று வெள்ளத்தோடு வந்த சைக்கிளை பார்த்ததும் வாடகை மிச்சமாகுமே என்ற ஆசையில் தண்ணீருக்குள் சாட சுழலில் மாட்டி இறந்து போகிறார் . மறக்குமா இந்த காட்சி வாழ்நாளுக்கும் ? வெள்ளரிக்காய் போன்ற பொருட்கள் சில்லறை வியாபாரம் செய்யும் மங்களத்து கிழவிக்கும் , தாயால் கைவிடப்பட்ட குழந்தையாக வளர்ந்து எந்த வித குறிக்கோளும் இல்லாமல் ரயில் தண்டவாளத்தை ஒட்டியே நடந்து வந்து சேர்ந்து கொண்ட மலர்க்கொடிக்கும் இடையேயான அன்பு அவ்வளவு அழகாக நெய்யப்பட்டு இருக்கிறது . "தொப்புள் கொடி" ஒரு பட்டுச் சேலை என்றால் அதன் ஜரிகை முந்தானை தான் இந்த உறவு. மலர்கொடிக்கும் அவள் கணவன் மாயவனுக்குமான அன்பு எல்லாம் அதன் பிறகு தான் . மங்களத்து கிழவி ஒரு தாய்க்கிழவி் . மலர் அஞ்சலையின் இரண்டு பெண் குழந்தைகளை அவர்கள் பெற்றவர்கள் இறப்புக்கு பின் தத்தெடுத்து வளர்த்து பள்ளியிலிருந்து மருத்துவப் படிப்புக்கு சேர்ப்பது வரை கதை சொல்லும்போது மலருக்கும் மாயவனுக்கும் குழந்தை உண்டாகவே இல்லையா? வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தார்களா என்று எழும் கேள்வியை நமக்கு கொஞ்சம் நீட்டிக்க வைத்து அதற்கான பதிலை சொல்கிறார் ஆசிரியர் . "கற்றாழை" " அளம் " வாசித்து இருக்கிறீர்களா ? ஏழ்மையின் விவரிப்பு ஆசிரியருக்கு மிக இயல்பாக வருவது . அளம் கதையில் கண்ணுக்குள் கடித்துக்கொண்டிருக்கும் எறும்பை எடுப்பதைப் பற்றி சொல்வார்கள் . அதே போல கற்றாழையில் சாணி வேலையில் இரு கைகளும் திளைக்கும் நேரத்தில் தான் , தலையில் அரிப்பு ஏற்படுவதை அழகாக விவரித்து இருப்பார் . இப்படித் தானே சிறுவயதில் இரு கைகளிலும் மருதாணி பூசி " அம்மா இங்கே சொரிந்து விடுங்கள் " என்று தலையை அங்குமிங்கும் காட்டி அப்படியும் போதாமல் முழங்கையால் தலையை தேய்த்துக் கொள்வோம் . அந்த அளவு நுட்பம் மிகுந்த , பல வருடங்கள் ஆனாலும் கருத்தை விட்டு அகலாத அளவு உள்ள காட்சி தான் தொப்புள் கொடியில் வரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் சைக்கிளை எடுக்க முயன்று. வாசுகியின் அப்பா உயிரை விடும் காட்சி . பொம்மை செய்யும் வேலையில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் அளவுக்கு கதை நாயகி மலர்க்கொடி உயர்வதும் பின் திடுக்கிடும் முடிவெடுத்து அதன்படி நிறைவாய் வாழத் தொடங்குவதும் கதையை அழகாக முன்னகர்த்திச் செல்ல உதவுகிறது. பெண்களின் வலி உணர்ந்தெழுதும் ஒரு சில எழுத்தாளர்களுள் தமிழ்ச்செல்விக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு . பெண்கள் அதிகம் விரும்பும் கதை

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!