Bio Data !!

26 July, 2026

சரிதா ஜோ எழுதிய ஆகிருதி

"ஆகிருதி" புத்தக அறிமுகம் சிறுகதை தொகுப்பு : ஆகிருதி ஆசிரியர் :  சரிதா ஜோ. பதிப்பாளர் :  பாரதி புத்தகாலயம் . விலை. :  220 ரூபாய் . முதல் பதிப்பு : டிசம்பர் 2025  “ கதை சொல்லி முக்கிய கதாபாத்திரத்தின் தோளின்  மேல் கை போட்டபடி நின்று கொண்டு செல்வது போல் கதைகள் அமைந்திருப்பதால் கதைக்கு அருகில் செல்வது எளிதாக இருக்கிறது”  என்று அம்பை அம்மா அவர்கள் தன் வாழ்த்துரையில் சொல்லி இருக்கிறார்.  எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் “ எந்த மெனக்கடலும் இல்லாமல் வட்டார மொழியை  கையாண்டு இருக்கிறார் ஆசிரியர்”  என்கிறார். தொகுப்பிலுள்ள  அத்தனை கதைகளும் வட்டார வழக்குக்கும் கிராமிய சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டவை. அதனாலையே நமக்கு புத்தகத்தோடு ஒன்ற முடிகிறது  சரிதா  இதுவரை குழந்தைகளுக்கு இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார் .இவருடைய சிறுவர்களுக்கான புத்தகங்கள் ஆங்கிலம் குஜராத்தி மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.   முதன்முறையாக பெரியவர்களுக்கான சிறுகதைகளை எழுதி தொகுத்திருக்கிறார்.  அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  “ ஆகிருதி” என்னும் முதல் கதை வட்டார வழக்கில் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது.  மணப்பெண் கருப்பு என்றும் , வேறு பெண்ணை காட்டி ஏமாற்றி  இந்தப் பெண்ணை திருமணம் செய்து விட்டீர்கள் என்றும் உருவக்  கேலி செய்து தகராறு செய்யும் கணவனும்,  அதனால் வலி அனுபவிக்கும் பெண்ணும் தான் கதை மாந்தர்கள்.  துணிச்சலாக முடிவெடுக்கும் இந்தப் பெண் மூலம் ஒரு வழிகாட்டுதலை கதையில்  சொல்லி இருக்கிறார். இரண்டாவது கதையான “ வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகை” களில் சிவப்பு நிற செருப்பு போடும் சிலுக்காவை முன்னிறுத்துகிறார். ஒரு காலத்தில் ஆண்களில் பலரை ஈர்த்து வைத்திருந்த நடிகை சிலுக்கு,  இந்த பேர் வைப்பதற்கு ஒரு காரணமாய் இருக்குமோ என்று எண்ணும்படி இந்த பாத்திரம் படைக்கப்பட்டு இருக்கிறது.  ஒரு பெண் அழகாகவும்,  நாகரிகமாகவும் இருந்து விட்டால் பெண்கள் , தம்  கணவன் அவளால் ஆகர்ஷிக்கப்பட்டு விடுவானோ என்னும் பயத்தில் முந்திக்கொண்டு அவளுக்கு  “ பட்டம் “ கொடுத்து விடுவார்கள் .அப்படியானவள் தான் சிலுக்கா . ஆனால் குழந்தைகளை அவளுக்கும் , அவளை குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் அப்படிப்பட்ட சிலுக்காவுக்காக எழுதப்பட்ட கதை தான்  இது. “ வாக்கு”  மூன்றாவது கதை . ஒரு குழந்தை பள்ளியில்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறது. நிகழ்ச்சிக்கு முந்தின தினம் எல்லாவித அலங்காரங்களோடு  சோதனை முயற்சி செய்ய இருந்த போது   தன் தங்க ஜிமிக்கியை  வீட்டில் கழற்றி வைக்காமல் வந்தது தெரிகிறது. வேறு வழியில்லாமல் தன் பையில் வைத்து நிகழ்ச்சிக்குப் போட வேண்டிய பிளாஸ்டிக் கம்மலை போட்டுச் செல்ல வந்த பின் தான் தன் தங்க ஜிமிக்கி  தொலைந்து போனதை  அறிகிறாள்.  ஒரு பொருள் தொலைந்த உடன் அம்மாவிடம் ஓடி வந்து அழும் குழந்தைகள் ஒரு ரகம். தொலைந்ததையே மறைத்து சமாளிக்க முயலும் குழந்தைகள் ஒரு ரகம். இந்தக் கதையின் குழந்தை இரண்டாவது ரகம். தப்புக்கு மேல் தப்பாக செய்து தன் சித்தப்பாவையும் சேர்த்து திருடு போனதை மறைக்கப்  பார்க்கிறது. குழந்தைகளுக்குத் தவறை உணர்த்தாமலும் சித்தப்பா ஏமாற்றியதன் காரணத்தை வலுவாகச் சொல்லாததும் இந்தக் கதையின் குறையாகத் தோன்றியது.  “ தாயாதி பாத்தியம்” நான்காவது கதை. ஆறு மகன்கள் இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற பெருந்தனக்காரர் பழனிச்சாமி. அவரும் அவர் மனைவி ராசம்மாளுமாகச் சேர்ந்து நாற்பது ஏக்கர் சொத்து சேர்த்திருந்தார்கள். ராசம்மா பாம்பு கடித்து இறந்த பிறகு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுத்து  ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பழனிச்சாமி.  வயது ஏறி மறதி நோய் வந்த நிலையிலும்    ராசம்மாவை தேடும் அவர் பயணம் நின்ற பாடில்லை என்கிறார் ஆசிரியர். எதை மறந்தாலும்  அவர் மறக்காதிருந்த பேத்தி சித்ரா தான்  அவரைத் தேடி அழைத்து வருவாள். ஆலமரத்தின் கட்டையாக வெட்டி விடப்பட்ட விழுதுகள்,  மனிதாபிமானமற்ற உறவுகளுக்கு படிமமாக நன்கு பொருந்திப்  போனது .அந்த விழுதுகளோட கதை முடிகிறது. எனக்கு இந்த தொகுப்பில் மிகவும் பிடித்த ஒரு கதை. “கழுவாய்” ஜாதி, மதம் மாறி நடக்கும் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாத மக்களை அவர்கள் நம்பும் விடயங்கள் மூலமே மனம் மாற்றும் நேர் மறை சிந்தனை மிகு கதை. “ஆலா” என்றொரு கதை. நித்யா தன் கிராமத்தில் இருக்கும் ஆல மரத்தை நெருங்கிய தோழியாக நினைத்து ஆலா என்றழைத்து வளர்ந்து வரும் போது கிராம வளர்ச்சிக்காக அந்த ஆல மரம் வெட்டுப்பட்டுக் கிடப்பது யானை ஒன்றை பாகம் பாகமாக வெட்டிக் கிடத்தியது போல் உள்ளது என்கிறார். அருமையான மனதைக் கீறும் படிமம். ஆல மரங்கள் பல கதைகளிலும் தன் விழுதுகளை அசைக்கின்றன.  “தாபந்தம்” கதைகளின் பெயர்களின் தேர்வில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டது தெரிகிறது.  தன் அக்கா மகன் மாதவன் மேல் அளப்பரிய அன்பு கொண்ட கோவிந்தன் தன் அடி மனத்தில் உறைந்திருந்த  ஜாதி வெறியால் எப்படி தன் மருமகனை தான் சாகும் வரை பார்க்காமல் பிரிகிறார் என்பதைச் சிவப்பு சாட்டையை சொடுக்கிச்  சொல்லும் கதை. ஆகச் சிறந்த கதை  “ வீடிலிகள் ” இறுதிக்  கதை. பெண்கள் அனேகமாக அனைவரும் தம்மோடு பொருத்திப் பார்க்கும் கதை. அதிலும் முக்கியமாக முளையில்  கட்டிய மாடாக , கயிற்றின் நீளம் தரும் சுதந்திரம் ஒரு மாயையாகத் தோன்றுவது அனேகமாக அனைத்துப் பெண்களுக்குமாய் இருக்கும். தகப்பன்,  கணவன்,  மகன் என வேறுபாடு இல்லாமல் அத்தனை பேரும் ஆண் என்ற வலுவான பிடியைத் தளர விடுவதில்லை. என்று மாறும் பெண்களின் இந்த நிலை. தன் பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டுமே பெண்களுக்கு உரிமையானதாக இல்லை. முக்கியமான முடிவிகள் எடுக்கும் உரிமையை ஆண்கள் தன் கை வசமே வைத்திருக்கிறார்கள் என் பதைச் சொல்லும் கதை. ஆகிருதி செழிப்பான மொழி வளத்தோடும், கதைக்கருவோடும் வெளி வந்திருக்கிறது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!