26 July, 2026
ராஜ் கௌதமன் எழுதிய காலச் சுமை
ராஜ் கௌதமன் எழுதிய "காலச் சுமை"
ஒரு வருடம் முன் 13.11.2024 நிகழ்ந்த நிகழ்வின் நினைவு.
மனைவி முனைவர் பரிமளா
மகள் டாக்டர் நிவேதிதா கோபிநாத் எம்.டி. UK.
காரைக்காலின் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பதவி கிடைத்ததாகவும் உடனே புறப்பட்டு வரும் படியும் நல்லதம்பி என்பவர் சிலுவை ராஜ்க்கு கொடுக்கும் தந்தியில் துவங்குகிறது கதை. தனக்கு நடந்த இன்டர்வியூ நினைவுக்கு வருகிறது. சுவாலஜி படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கியும் ஏன் தமிழ் எம். ஏ எனக் கேட்கிறார் அதிகாரி. தமிழ் மீது உள்ள அடங்காத ஆர்வம் னு சொன்னா தனக்கே சிரிப்பு வந்தாலும் வரும் என்று இரண்டு பாடங்களும் பிடிக்கும். ஆனால் சவேரியார் கல்லூரியில் சுவாலஜி எம்.ஏ இல்லாததால் தமிழில் சேர்ந்தேன். எப்படி ஆனாலும் சவேரியார் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது தான் முக்கியமான காரணம் என்கிறார். அது எஸ் ஸி கோட்டா. ஏழெட்டு பேர் தான் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறார்கள். அதில் சிலுவைக்கு அதிக மதிப்பெண். அதிகாரி தானும் ஒரு சவேரியன் தான் என்கிறார். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.
தந்திகொடுத்த நல்லதம்பி யார்?
"நல்லதம்பி துலுக்கப்பட்டி என்னும் ஊரின் ஸ்டேஷன் மாஸ்டர். பக்கத்து ஸ்டேஷன்ல ரயில் புறப்பட்டாச்சுன்னா அதை பத்திரமா தன் ஸ்டேஷன்ல இருந்து அனுப்பி வைக்கிற வரைக்கும் மனுசன் பம்பரமாச் சுற்றுவார். ரயில்வேயில மட்டும் எட்டு மணி நேரம் டூட்டின்னா அம்புட்டு நேரமும் டூட்டி பார்க்கிறவங்க அங்கிட்டு இங்கிட்டு நகர முடியாது. அது ஒரு தனி உலகம்.வர்ர உத்தரவை சரியா புரிஞ்சுக்கிடணும் முடிவெடுக்கணும். செயல்படணும்.
ஒரு சின்ன தவறு நடந்தாலும் போச்சு. மறுநாள் நாடு பூராவும் பேப்பர்ல போட்டோவோட செய்தி வரும். வேலை நீக்கம். ரயில்வே மந்திரி ராஜினாமா. "
இதை வாசித்ததும் எனக்கு ரயில்வேயில் பணி புரியும் நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். அவர்கள் பணிச் சுமையும்.
சிலுவை பாளையங்கோட்டை சென் சேவியர்ஸ் காலேஜில் படித்து ஆசிரியர் வேலைக்குத் தான் கலந்து கொண்ட நேர் முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு கதை செல்கிறது. பக்கத்து கல்லூரி johns பரிதாப நிலைமை. காரைக்கால் கலைக் கல்லூரி. பால் வடியும் முகம் சிலுவை ராஜுக்கு.
Ouche Rane தமிழில் வாசிச்சா அவுச்ச ராணி. நல்லா இருக்காது. ரோல் நம்பர் வாசித்துங்கடந்துடலாம்னு பார்க்கிறால். மாணவர்கள் கத்தி ரகளை பண்ணுறாங்க. எல்லோரையும் பேரை வாசிங்கன்னு. French spelling. For usha rani.rubber பாம்பு.
Deputy warden
மின்னல் கொடி கள்ளச் சாவி தயார்.
" பசங்க மொழிப் பாடத்துக்கு வருவதே ஜாலியா இருக்கத் தானாம். ஏம்னா இதுல நாற்பது மார்க் எடுத்தாலே போதும் . பாஸ் பண்ணினா போதும். தமிழ் மொழிப் பாடத்துல பாஸ் பண்ண வாத்தியாரே தேவையில்லை. பஜார் நோட்ஸ் போதும்." என்கிறார்.
காரைக்காலில் வேலை கிடைத்த சிலுவை அங்கேயே வேலை பார்க்கிற ஒரே காரணத்தாலேயே தன் இனத்தைச் சேர்ந்த பொன்னம்மாவை திருமணம் செய்கிறார். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடி அமர்கிறார்கள். வீட்டு ஓனரம்மா நேரடியாக
" நீங்க என்ன வர்ணம் " கேட்கிறார்.
சிலுவை "நாங்க கிறிஸ்டியனுங்க" என்கிறார்.
அப்போ
" காரைக்கால் பெரிய கிராமம். அதனால இப்படி வர்ணத்தை முகத்துக்கு நேராகக் கேட்பது இயல்பாக இருக்கிறது. பெரு நகரம்னா சாதியப் பத்தின விசாரணை அமுக்கடியாக இருக்கும்.
"ஓஹோ! அவர் உங்க ரிலெடிவ்வா" ன்னு கேட்பாங்க. அது தானே நாகரீகம்"
இந்த புத்தகம் எழுதி இருபது வருடங்கள் இருக்கும். இப்போ நம் மனச்சாட்சியை நாம் கேட்டுக் கொள்வோம். வளர்ந்திருக்கிறோமா??
சிலுவை பாண்டிச்சேரியில் பணி புரியும் தன் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் காரைக்காலுக்கு மாற்றல் வாங்கி வருவது சுலபம் என் நினைத்து பெற்றோரிடம் சொல்ல திருமணமும் நிச்சயமாகிறது. அந்த திருமண வீட்டில் மணப்பெண்ணின் தாய் வீட்டைச் சேர்த்தவர்களை நன்கு கவனித்து மாப்பிள்ளை வீட்டார் பசித்திருப்பார்களே என்பதைக் கூட சிந்தாக்காதவர்களாய் இருக்கிறார்கள். கோபத்தில் நிற்கப் போகும் திருமணம் கடைசியில் நடந்தே விடுகிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் புது வீட்டில் குடியேற கொண்டு சென்ற பொருட்கள் என் திருமணத்தை நினைவுபடுத்தியது.
சிலுவையிடம் ப்ளாட் ஒண்ணு சல்லிசா விலைக்கு வருது வாங்கிப் போடுங்கன்னு ஒருவர் சொல்லும் போது எனக்கு ஆறுக்கு மூணடி போதும் என நக்கலாகச் சொல்வார். பின்னர் வாடகைக்கு வீடு தேடும் அவலத்தின் போது தான் தான் செய்த தவறு புரியும். என்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை விதம் விதமாய் கேட்பார்கள். தான் ஆரம்பத்தில் இருந்த கிறிஸ்தவ மதம் என்பதைச் சொல்லி தப்பிப்பார். மதத்தில் ஒரு பிடிப்பு இல்லாமல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியது போல எனக்குத் தோன்றியது.
ஆடு, கோழி, மீன் என ஒவ்வொன் றையும் எப்படி வாங்குவது என விலாவரியாக சொல்லி இருப்பார். கதையின் சிறப்பே ஒவ்வொரு இடத்திலும் நம்மை நிறுத்தி பொருத்திப் பார்ப்பது தான். அதுவும் எனக்கு ரொம்பத் தோன்றியது.
தன் மனைவியை பிரசவத்துக்கு சேர்த்திருக்கும் போது பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்வார். ஹோட்டலில் சர்வர் "பொரிச்ச மீனுன்னா ஷீலா தான்" என்கிறார். சிலுவைக்கு செம்மீன் படக் கதாநாயகி ஞாபகத்துக்கு வருகிறாள். எங்க பக்கம் சீலா மீனுன்னு தான் சொல்வோம். ஆனால் சில இடங்களில் அதை ஷீலா மீனாக்கி விடுகிறார்கள்.பல இடங்களில் கதையோடு என்னால் ஒன்றிப் போக முடிந்ததற்குக் காரணம் திருமணமான ஆரம்ப காலங்களில் நானும் நாகர்கோயிலில் இருந்தது தான்.
குழந்தையை பார்க்க வந்த சிலுவையின் அப்பா குழந்தை கண் திறந்தே பார்க்காமலிருப்பதைப் பார்த்து கொஞ்சுவது போல " உங்கப்பனுக்கு இருக்கிற அதே பிடிவாதம். அவனுக்கு காரைக்கால்ல தான் கல்லறை என்பார். பச்ச பிள்ளையை கையில் வச்சுகிட்டு பேசுற பேச்சு. இப்படியும் சில மனிதர்கள்.
நாங்குநேரி அருகில் உள்ள நம்பி மலைக்கு நண்பர்களோடு சிலுவை போகும் போது தன் ஊருக்கு பக்கமுள்ள அத்தி ஓடையும் அங்குள்ள மரங்களும் ஞாபகத்துக்கு வரும்.
" அந்த பாரம்பரிய மரங்களைத் தனது இரண்டு கைகளாலும் அணைக்க முடியாமல் அணைத்து முத்தமிட்டு சிலுவை கிறங்குவதுண்டு. இயற்கையின் வசீகரத்துக்கு முன் நாம் பெண்களாகவோ குழந்தைகளாகவோ மாறி விடுகிறோம் என்று சிலுவை சொல்லுவான். அதாவது மென்மையாகி விடுகிறோம் என்பதைத் தான் இப்படிச் சொல்கிறார் என நினைக்கிறேன்.
சிலுவை குடும்பம் ஊர் வந்து சேர்ந்த அன்று எல்லோரும் சந்தோஷமாக சமைத்து உண்டு இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்திலேயே சிலுவை அவன் பெண்டாட்டி ஊரில் இடம் வாங்கி இருப்பது தெரிந்ததும் அவன் அம்மா தெரு மண்ணை வாரி எடுத்து வீசி " நீ நல்லாயிருப்பியா? விளங்க மாட்ட!" ன்னு கரிச்சுக் கொட்டுவதும் அதனாலோ என்னவோ ஒரு வருடம் கழித்து சிலுவையின் இளைய மகள் ஜுரத்தில் படுத்தவள் இறந்து போவதும் துயரம்.
நான் என் சிறு வயதில் இப்படி மண்ணை வாரித் தூற்றி பெற்ற பிள்ளைகளையே சாபமிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைத் தொடர்ந்த சிலுவையின் மகளின் இறப்பு அவரைக் குடும்பத்திலிருந்தே பிரித்திருக்கும்.
ரசித்த வரி.
"சிலுவை முதுகுக்குப் பின்னே அவன் சுயநலக்காரன், குடிகாரன் போல அவனைப் பற்றிய தீர்ப்புகள் குஷியாக பவனி வருவது அவனுக்குத் தெரியும். தான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று நிரூபிக்க அவசியமில்லை என்பது சிலுவையின் எண்ணம்"
நாம் படித்துக் கொள்ள வேண்டிய பாடம் இது.
சிலுவை வேலை செய்த இடத்தில் கோட்டாவில் அவர் துணைப் பேராசிரியராக வந்ததை பெரிசாச் சொல்லும் போது சிலுவையின் எண்ணமாக ஆசிரியர் சொல்வது நம்மை சிந்திக்க வைக்கிறது.
" பணம் , பெரிய இடத்து சிபாரிசு, செல்வாக்கு, உயர்ந்த சாதி உறவுகள், அரசியல் தொடர்பு இதெல்லாம் தான் மெரிட்"
உண்மை. மெரிட் என்பது தேர்வு மதிப்பெண் மட்டுமில்லாமல் இதெல்லாம் சேர்ந்தது தானே!!
காய்கறிக் கடையில் தாம் பேரம் பேசும் போது விலையைக் குறைக்காத சமயம் புரபசர் எப்படி ஏமாத்துவார் என்றும் அதைப் பெருமையாக தன் மனைவியிடம் சொல்லும் போது அவள் பாராட்டாமல் " ஒரு புரபசர் செய்யும் காரியமா இது" ன்னு திட்டுவான்னு சொல்வார். எளியவர்களிடம் பேரம் பேசுவதும் பெரிய மால்களில் கேட்டதைக் கொடுப்பதும் இன்று கூட நடந்து கொண்டு தானே இருக்கிறது.
புதைக்கப் போன இடத்துல திடீர்னு மழை ரொம்ப பெய்து மழைத் தண்ணீர் பட்டதுல மயக்கம் தெளிந்து குழிக்குள்ள இருந்து முண்டி வந்து அதனால் "குழிமுண்டாம் "னு பேர் எடுத்த கதையை சிலுவையின் சம்சாரம் சொல்ல ஊருக்கு ஊர் ஒரு குழிமுண்டான் கதை உலவுவது சிலுவைக்கு ஞாபகம் வருகிறது. நீங்க சொல்லுங்க. இப்படி இறந்ததா நினைச்சு புதைக்கப் போன இடத்துல பிழைத்து வந்தவர்கள் கதை ஏதும் உங்களுக்கு ஞாபகம் வருதா?
சிலுவையின் அப்பா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். சிலுவையின் திருமணத்தின் போது அவன் மாமனார் வீட்டில் தன் குடும்பத்தை சரியாய் மதித்து நடத்தவில்லை என்பதால் சாகும் வரை அவர்கள் வீட்டுப்படி மிதிக்காதவர். சிலுவையின் மச்சினன் திருமணப் பத்திரிகையை ஒரு கவரில் போட்டு அவர்களுக்கே திருப்பி அனுப்பியவர். சிலுவையின் முதல் மகள் பிறந்ததைப் பார்க்க வந்த இடத்தில் உனக்கு சமாதி காரைக்கால்ல தான்னு " நகைச்சுவை" யாக சொன்னதாகச் சொன்னவர். இப்போ புரிஞ்சிருக்குமே. பார்ட்டி எப்படிப்பட்டவர்னு. இப்படி ஒரு ஆளை எல்லோரும் கடந்து தான் வந்திருப்போம்.
அவர் பல திசைகளிலும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதால் காரைக்காலில் ஒரு பெரிய வீடு கட்டி எல்லோரும் ஒண்ணா இருக்கலாம் என்று சிலுவை சொன்னதும்
"ராஸ்கல் உன் தயவில நாங்க ஜீவிக்கணுமா? கஞ்சிக்கில்லாமச் செத்தாலும் சாவோமே தவிர ஒன்ன மாதிரி நன்றி கெட்ட பய கிட்ட வந்து கையேந்துவோம் என்று நினைத்தாயா? நீ என்னடா எங்களுக்கு வீடு கட்டறது? நான் கட்டப் போறேண்டா மெத்த வீடு" என்கிறார்.
இப்படி கொதிநிலையிலேயே இருக்கும் மனிதர்களுடன் காலம் கடத்துவது என்பது எந்நேரமும் கொதி கலனுக்குள் குடியிருப்பதைப் போன்றது.
" செத்துப் போயிடுவோமோங்கிற பயத்துல அன்னைக்கி கையெடுத்துக் கும்புட்டு கண்ணீர் வடிச்ச மனுசனுக்கு இப்போ பொழச்சுக்கிடலாம்கிற தெம்பு வந்ததும் ஆளப் பிடிக்க முடியல.
மாற மாட்டாங்க. கடைசி வரை மாறவே மாட்டாங்க.
கோயில்களில் கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடுபவர்களைப் பற்றி எழுதுகிறார். ரொம்பவே ஆபாசமான நடனம். இப்படி ஒரு பக்கம் கவர்ச்சியையும் ஆபாசத்தையும் ஆதரித்துக் கொண்டு இன்னொரு பக்கம் தன் ஆண் நண்பருடன் ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஒரு பெண் தான் கற்பழிப்புக்கு காரணம் என்று பேசுகிறார்களே இந்ம முரண் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.
சிலுவையின் நண்பர் மூர்த்தி புத்தக விற்பனை செய்பவர் குடிக்கு ஆட்பட்டு தொழில் நடத்த முடியாமல், கந்து வட்டிக் காரர்களிடம் கழுத்தைக் கொடுத்து மீள முடியாமல், அமிழ்ந்து போவதை வாசிக்கும் போது இது புத்தக வியாபாரத்துக்கு மட்டுமல்ல எந்த ஒரு தொழில் செய்தாலும் அதன் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தனி மனித ஒழுக்கம் மட்டுமே காரணமாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறார்.
காரைக்கால் நாகூர் போன்ற இடங்களில் நடக்கும் தந்தூரி விழா பற்றி சொல்கிறார்.்சமீபத்தில் போய் வந்தோம். காரைக்கால் அம்மையாரைப் பற்றி ஆராய்ச்சி செய்து சிலுவை எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் கண்ணகி கதையும் காரைக்கால் அம்மையார் கதையும் ஒத்திருந்த்தை எழுதி இருந்தார். யாரும். ஒத்துக் கொள்ளவில்லை. சமண மதத்தை ்சேர்ந்த பெண்ணின் கதையுப் ஒரு சைவச் செட்டி பெண்ணின் கதையும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று எப்படி ஒத்து கொள்ள முடியும.
அந்த அந்த வயசுல அதைப் பற்றித் தானே பேச முடியும்னு சொல்லி இருப்பார். சின்ன பசங்க விளையாட்டை பற்றியும், விடலைப் பசங்க நடிகைகள் பற்றியும் வாலிபர்கள் வேலை கல்யாணம் பற்றியும், குடும்பஸ்தர்கள் சொத்து பத்து ணம்பளம் பிள்ளைகள் பற்றியும் வயதானவர்கள் நோய் நொடி மாத்திரை பற்றியும். சூப்பர்ல
பெரும்பாலானவர்கள் ஏன் கடவுள் நம்பிக்கை வைத்திருக்காங்கன்னா தாங்க முடியாத பிரச்னை வரும் போது காப்பாத்தும்னு ஏதோ ஒரு சக்தியை பிடிச்சுக்கிட்டாவது தப்பிச்சிடலாம்னு தான். பலருக்கு இந்த நம்பிக்கை இல்லாது பொகும் போது குடி போதைன்னு சிக்கி சீரழிந்து போகிறார்கள். பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த சிலுவை போராடி உயரத்துக்கு வந்தும் பழையபடி குடித்து தெருவில் கிடந்ததை வாசித்த போது உண்மையிலேயே என் வேதனை சொல்ல முடியாதது. ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு நட்பை இறுப்பற்றிக் கொண்டிருந்தால் ஒரு வேளை தப்பித்திருக்கலாமோ என்ற ஆதங்கம் எழுந்தது நிஜம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!