Bio Data !!

29 September, 2026

ஹபீபி தமிழ்த் திரைப்படம்

"ஹபீபி " திரைப்படம் தியேட்டரில் வெளியிடப்படும் போதே முக நூலில் நல்ல வரவேற்பு. நான் தற்போது சோனி லைவில் பார்த்தேன். இயக்குநர் : மீரா கதிரவன். முக்கிய நடிகர்கள் : கார்த்திக் ராஜா ( நடிகர் தனுஷின் அப்பா. ஏன் சார் இவ்வளவு நாள் நடிக்க வரல? ) மற்றும் பலரும் புதியவர்களே. மகேஷ் முத்துசாமி அவர்களின் ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சி. கதையில் யூசுப்பின் மகளாக வரும் இஸ்மத் பானு "வெப்பம் குளிர் மழை" திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எடுத்து திறம்படச் செய்தவள். திரையுலகம் குறிப்பிட்ட நிறம், உயரம் பருமனெல்லாம் பார்க்காமல் திறமை பார்த்து வாய்ப்பு கொடுக்கத் தொடங்கினால் நலம். ஒரு இஸ்லாமிய சமூகம் சார்ந்த கதை. குடும்பத்துக்காக வெளிநாடு போய் சம்பாதிப்பவர்கள் அவர்களில் அதிகம். களம் நெல்லைப் பகுதியைச் சார்ந்தது. எங்கள் பேச்சுத் தமிழில் அன்பும் நெருக்கமும் வழியும். தறி நெய்தல் இந்தப் பகுதி இஸ்லாமிய மக்களின் ஒரு வகை கைத்தொழில் . கதை நாயகனின் குடும்பமும் தறி நெய்பவர்கள் தான். ஏழ்மையான குடும்பம். அந்தப் பகுதியின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வெளிநாடு சென்று சம்பாதிக்கத் தொடங்கியதும் அவர்கள் வீட்டுத் தறி செயல் நிறுத்துகிறது. கதாநாயகனின் தந்தை யூசுப்பின் தம்பி வெளிநாடு் சென்று இவர்கள் குடும்பமும் முன்னேறத் தொடங்குகிறது. வெளிநாடு சென்று குடும்பம் முன்னேறுவதற்காக செய்யும் அந்தத் தம்பதிகளின் தியாகம் மிக அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. மனைவியை தனியே விட்டு வெளிநாடு செல்லும் கணவரின் வலியை பார்வையிலேயே உணர்த்திய சாச்சாவும் அவர் மனைவியும் கதைக்கு வலுவூட்டிய கதா பாத்திரங்கள். யூசுப்புக்கும் அவரது இந்து நண்பருக்கும் இடையேயான நட்பும் அற்புதமாக நெய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவுக்கும் இடையே சொல்லப்பட்டு இருப்பது தான் யூசுப்பின் மகன் அபு தாகிரின் காதல் கதை. பள்ளியில் மௌனமாகக் காதலிக்கும் அபு தன் நண்பனிடம் "அந்த புள்ளைக்கு என்னைப் பிடிக்குமான்னு தெரியல. ஆனா எனக்கு அந்தப் புள்ளைய பிடிக்கும்கிறத எப்படியாவது சொல்லிறணும்." என்பான். காதலைத் தெரிவிக்க ஆண்கள் எடுக்கும் அந்த மௌன முயற்சியே பெண் பிள்ளைகளை காதல் கொள்ளச் செய்து விடும். ஆனால் அபுவின் நண்பர்கள் காதல்ல உள்ள பிரச்னைகளைச் சொல்லி விட்டு விலகச் சொல்லும் போது " அந்த புள்ள தான் என்னைப் பாக்குது. நான் எங்கல அந்தப் புள்ளைய பார்க்கிறேன். " என்பான். இதுவும் ஆண்கள் தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் சமாளிக்கும் வித்தை தான். ஆணின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் சாட வேண்டிய இடத்தையும் தவற விடவில்லை இயக்குநர். தனுஷ் அப்பா இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு யூசுப் கதாபாத்திரம் கன கச்சிதமான பொருத்தம். Tailor made character. ஒரு இஸ்லாமிய ஆணின் மென்னுணர்வுகளை அவ்வளவு அழகாக பிரதிபலிக்கிறார். தலை முறை தலை முறையாக பார்த்து வந்த தொழில் முடிவடையும் வேதனையை அந்தக் காட்சியில் கஸ்தூரி ராஜா அவர்கள் மிகச் சரியாக நமக்குள் கடத்துகிறார். முக்கியமா ஒண்ணு சொல்லணும். ஒரு கதாபாத்திரத்தின் பெயர் Rufina. எங்க அப்பா்என்னை அழைப்பது போலவே Rufi னு சொல்லும் போது படம் அவ்வளவு பிடித்து விட்டது. இது வரை யாரும் பார்க்காம விட்டிருந்தா பார்த்திடுங்க.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!