04 August, 2023
திரைப்படத்தின் பெயர் : எறும்பு
இயக்குநர் : G. சுரேஷ்
முக்கிய கதா பாத்திரங்கள் : சார்லி, சூசன் ஜார்ஜ், M.S. பாஸ்கர், ஜார்ஜ் மரியான்
இசையமைத்தவர் : அருண்ராஜ்
இந்த படத்தை அமேசானில் பார்த்தேன். படத்துன் பெயர் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் பார்ப்போமே என்று பார்த்தது நல்லதாகப் போயிற்று. இல்லை என்றால் ஒரு அருமையான படத்தை மிஸ் பண்ணி இருப்பேன்.
சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள்இல்லை.
கனிந்து உருகும் காதல் காட்சிகள் இல்லை.
பார்த்து ரசிக்க வெளிநாட்டு காட்சிகள் இல்லை.
ஆனால் படத்தில் அன்பு இருந்தது. மனிதம் தொலைத்த மனிதர்கள் வந்தாலும் குடும்பம் என்ற கட்டமைப்பின் உறுதியால் அதைக் கடந்து வந்த வலிமை தெரிந்தது.
பொதுவாகவே பலரிடம் எல்லோரும் இப்போ வசதியாகிட்டாங்க என்னும் ஒரு எண்ணம் இருக்கிறது. இல்லை ஏழ்மை இன்னும் அங்கங்கே உயிரோடு தான் இருக்கிறது என்பதை உணர்த்திய படம்.
சார்லி ஒரு ஏழைத் தொழிலாளி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்று. பெண் ஒன்று. அவரது இரண்டாவது மனைவி சூசன் . அவளுக்கு ஒரு கைக்குழந்தை. மூத்த மனைவி இறந்தாளா பிரிந்தாளா அந்த விவரத்துக்குள் அதிகம் போகவில்லை.
குடும்பம் கடும் பணச் சிக்கலில் இருக்கிறது. அம்மாவின் அன்பு கிடைக்காத தம்பிக்கு , அம்மாவாகவே மாறி அரணாய் காக்கும் அக்கா உறவு. வயதான காலத்திலும் குடும்ப சிக்கலைத் தீர்க்க தன் பங்கிற்கு உதவும் சார்லியின் அம்மா உறவு. கைக்குழந்தையோடு கணவனுக்கு உதவ கரும்புக் கொல்லைக்கு வேலைக்கு செல்லும் மனைவி உறவு.
படத்திற்கு பக்க பலமாய் இருப்பவர் ஜார்ஜ் மரியான். படத்தில் இவர் பெயர் சிட்டு. ஆகச் சிறந்த நடிப்பு. படத்தின் கதாநாயகன் இவர் என்றே சொல்லலாம். தான் வரும் ஒவ்வொரு சீனிலும் அசத்தி விடுகிறார். குழந்தைகளோடு குழந்தைகளாக முயல் வேட்டைக்கு தயாராகும் போதாகட்டும். காணாமல் போன உண்டியலை உரியவரிடம் சேர்ப்பிக்கும் காட்சியிலாகட்டும். நடிப்பில் ஒளிர்கிறார். அவரை திரைத்துறை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எறும்பு போல் சேர்த்து குடும்ப கடனை அடைப்பதைக் காட்டும் கதையாதலால் "எறும்பு" என்று பெயர் வைத்திருப்பார்களோ? பாருங்கள். அன்பின் இன்னொரு பரிணாமத்தைப் பார்க்கலாம்.
03 August, 2023
ஆடிப்பெருக்கு.
*****************
குற்றாலத்தில்
குதூகலமாய்
குளித்திருந்தோம்
குச்சியோடு வந்தார்கள்
காவலர்கள்.
ஆற்றங்கரையில்
அருகமர்ந்து
குளித்திருந்தோம்.
அழுக்கோடு
அரிப்பும் வந்தது
அதை விடுத்தோம்.
கடலாடி
களித்திருந்தோம்
ஆழிப்பேரலையில்
அதிர்ந்து போனோம்.
நதிக்கரையில்
நீராடி
நாகரிகம் வளர்த்தோம்
நதி சுருங்கி
வரியானது
நீர் தலைதெளித்து
முடித்தோம்
******
புத்தகத்தின் பெயர் : கடம்ப வனத்துக் குயில் பாகம் 2
ஆசிரியர் உதயணன்
யாழினி பதிப்பகம்.
விலை ரூ 352
[தொண்டி துறைமுகத்திலிருந்து கோஹினூர் வைரம் வெளி நாடு செல்லப் போகிறது என்று ஆருடம் சொல்லப்பட்டதால் மன்னர் தொண்டி துறைமுகத்துக்கு விரைகிறார். அங்கே என்ன நடந்தது என்பது பாகம் 2 இல்.]
இது பாகம் 1 இல் நான் முடித்திருந்த வரிகள்.
இனி……..
விச்சி மலையிலிருந்து ஒரு ஒற்றன் அராபியன் வேடத்தில் தொண்டிக்கு கோஹினூர் வைரத்தோடு வருகிறான். அங்கு ஒரு மரக்கலத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்ததால் சீந்துவாரின்றி கிடந்தது.
அராபியா என்ற ஒரு பெண்ணும் சல்லியன் என்னும் ஒரு சல்லிப் பயலும் அந்த மரக்கலத்தில் பயணம் செய்கிறார்கள். கோஹினூர் வைரத்தைத் தேடி கொங்கு மன்னர் ஒருவரும் மரக்கலத்தில் பயணிக்கிறார். இடை வழியில் தன் மரக்கலம் பாதிக்கப்பட்டதால் அங்கு வந்து சேருகிறால் கடம்பவனத்துக் குயில் என்னும் கொங்கு மன்னரின் அன்புக்குப் பாத்திரமானவள்.
அன்பு எப்படி பிறந்தது என்பதை மிக அழகாகச் சொல்கிறார் ஆசிரியர்.
“ காற்றும் காற்றும் கலப்பது போல நீரும் நீரும் கலப்பது போல மணமும் மணமும் கலப்பது போல மனமும் மனமும் கலக்கும் போது காதலாகிறது.
“கப்பல் வெள்ளி” என்று ஒரு சொற்றொடர் எனக்கு புதிதாய் அறிமுகமானது. வானத்தில் உள்ள சப்தரிஷி மண்டலம் என்ற நட்சத்திரக் கூட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயராக கதையில் வருகிறது. அதைப் பார்த்து திசையை அறிந்து கொள்வார்களாம்.
மரக்கலம் தடம் மாறி ஒரு தீவுக்கு சென்று விடுகிறது. அந்த தீவின் பெயர் சகோத்ரா. அந்த தீவு வாசிகள் மனித மாமிசம் உண்பவர்கள். தீவுக்கு செல்லும் முன்னேயே பெரிய பெரிய பறவைகள் பறந்து வந்து தாக்கும். தீவுத் தலைவனின் வர்ணனையே பயங்கரமாக இருக்கும். மனித மானிசத்தை உண்ணும் முறையை பயங்கரமும் கொடுமையும் நிறைந்த ஒரு விஷயத்தைத் தீவு வாசி ஏதோ சைவ விருந்து உண்ணும் முறையைச் சொல்வது போல சொல்வார்.
சகோத்ரா தீவின் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் கற்பனை நிறைந்தவையாக இருந்தாலும் ஒரு வித படபடப்போடு நம்மை வாசிக்க வைக்கும். உண்மையிலேயே கனிபால் என்னும் மனித மாமிசம் தின்பவர்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் அப்படிபட்டவர்கள் இருக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டதை உணர்வு பூர்வமாக உணர முடிகிறது.
கோஹினூர் வைரம் இன்னும் உரியவர் கையில் போய் சேரவில்லை.
நான் படித்து ரசித்தது:
“ நகைக்கும் நங்கைக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்.ஆகவே தான் நகைகள் நங்கையருக்கே பொருத்தமாக இருக்கின்றன. தங்கமும் வைரமும் தையலரை அலங்கரிக்கும் போது அழகாக ஜொலிக்கின்றன. “ என்றான் மன்னன்.
பாகம் 3 ம் தொடர்கிறது…….
06 July, 2023
எங்கள் இல்ல திருமணத்தில் ஒரு பெரிய தொகையை பறி கொடுத்திருக்கிறோம். அதை மிகக் கஷ்டப்பட்டு திருடியவனைப் பிடித்த பின் அந்த காவலர்களில் ஒருவர் என்னிடம் சொன்னது " உங்களுடைய ஒரு சின்ன அஜாக்கிரதை எத்தனை பேருடைய உழைப்பைப் பறித்திருக்கிறது பாருங்கள்" என்று.
இன்று அது ஞாபகம் வரக் காரணம் நான் பார்த்த ஒரு வெப் சீரீஸ்.
# kerala crime files.
இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முதல் மலையாள வெப் சீரீஸ். ஆண்கள் மட்டுமே இருக்கும் ஒரு அதிசய போஸ்டர். முக்கிய ரோலில் லால் மற்றும் அஜு வர்கீஸ்.
ஒரு பாலியல் தொழிலாளி கொலை செய்யப்படுகிறாள். கொன்றவனைக் கண்டுபிடிக்க மேலதிகாரிகளிடமிருந்தோ கட்சிகளிடமிருந்தோ அழுத்தம் இல்லை. ஆனாலும் காவல்துறை தன் குடும்பத்தை விட்டு விலகி ஆறே நாட்களுக்குள் கண்டு பிடிக்கிறது.
ஒருவர் காவல் துறை உயரதிகாரி (லால்) அவர் மனைவியைப் பிரிந்து இருக்கிறார். ஒரு வளர்ந்த மகள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவளுக்கு தன் நேரத்தை பங்கிடுகிறார்.
மற்றொருவர் புதிதாய் திருமணம் ஆனவர்.
ஒருவரின் மனைவி பிரசவ நேரத்தை நெருங்கிய நிலையில்.
இப்படி இருக்கும் பலரும் தம் பொன்னான நேரத்தை ஒதுக்கி கொலை செய்தவனை பிடிக்க அலைகிறார்கள்.
இதில் ஒரு சமயம் கொலைகாரனை பிடிக்க கூடிய சந்தர்ப்பம் கை அருகில் வந்தும் அவர்களின் கவனக் குறைவினால் சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறார்கள்.
கதாநாயகன் அஜு வர்கீஸுக்கு ஒரு காவலருக்கான உயரமில்லை. அதை ஈடு கட்ட முகத்தில் இறுக்கமான உணர்வுகளை கொண்டு வருகிறார். அதற்கு எதிர் மறையாய் புது மனைவியிடம் பேசும் போது முகத்தில் காதல் குறும்பின் நர்த்தனம்.
இறுதியில் கொலை காரனை பிடித்தார்களா? அவன் என்ன காரணத்தால் கொலை செய்தான் என்பதை அறிய வெப் சீரீஸ் சை பாருங்கள்.
கவிதைப் புத்தகத்தின் பெயர் : மனதின் சிறகுகள்
ஆசிரியர் : எம்.எஸ்.ஜெயலட்சுமி
நிவேதிதா பதிப்பகம்.
விலை ரூ 150-
முதல் பதிப்பு : 2023
ஆசிரியை ராஜபாளயம் நகரைச் சேர்ந்தவர். இது இவரது முதல் நூல். தமிழ் , தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் அறிந்த மொழி ஆசிரியர். “தாய்மை” என்னும் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை ஆற்றுவதுடன் கவுன்சிலிங்கும் செய்கிறார். மாணவர்கள் மத்தியில் நேர வங்கி, திறமை வங்கி, மனித நூலகம், மனிதம் போன்ற பல அருமையான வாழ்வியலை அறிமுகம் செய்திருக்கிறார். பால்ய வயதில் குறிஞ்சிச் செல்வர் திரு. கோதண்டம் திருமதி இராஜேஸ்வரி தம்பதிகள் அவர்கள் இல்லத்தில் நடத்திய திருக்குறள் வகுப்புகள் ஆரம்பித்து இன்று தனது நூல் வெளியாவது வரை முழுமையாக உறு துணை புரிவதாக நன்றியுடன் நெகிழ்கிறார்.
“பித்தம்
தலைக்கேறி
நீ
பின் தொடர்ந்து
வந்ததென்ன……”
எனத் தொடங்கும் கவிதை என்னை வியக்க வைத்தது. சமுதாயக் கட்டுக்குள் வளர்ந்து வந்தாலும் மனித மனத்தின் ஆசையை காற்புள்ளியாய் சொல்லும் கவிதை.
பிறிந்து வாழும் பெற்றோரின் குழந்தைகளை “ காற்றில் அல்லாடும் வாலறுந்த பட்டங்கள்” என்கிறார். ஆமாம் தானே?
இவரது கவிதைகளில் காதல் துள்ளும் வரிகளுமுண்டு.
“ வலிந்த காற்று
ஆவேசமாய்
மரங்களில் மோத
ஆலிங்கனச்
சிணுங்கலாய்
ஓவென எழும்
நட்டுவாங்கத்தில்……”
(சிணுங்கலும் ஓவென எழும் சத்தமும் ஒன்றுக்கொன்று முரணாய் இருக்கிறது. ஆசிரியரின் மனதின் எண்ண ஓட்டம் என்ன என்று கேட்டு பார்க்கணும்)
இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டி எழுச்சி கொடுக்கும் கவிதை ஒன்று.
“ தோல்வி
நிரந்தரமல்ல
கலங்காதே.
கால தாமதம்
ஆவதெண்ணி
வருந்தாதே.
அது காலம் தரும்
அவகாசம்.
இடைவெளியை
உனதாக்கு.
எழுந்து நட.
எரிமலையும்
அடங்கும்.
பாய்ந்து
புறப்படு.
பார் முழுதும்
உன் காலடியில்.
சின்ன சின்ன ஹைக்கூ கவிதைகளும் இடைஇடையே பூக்கின்றன.
“ முடிந்ததை
மறந்து விடு.
முடிந்ததைச்
செய்து விடு.”
“ஒற்றை
இலக்கு
மற்றதை
விலக்கு.”
அப்பாவை பற்றிய ஒரு கவிதை பெண் பிள்ளைகள் அத்தனை பேரையும் தம் தந்தையை நினைத்து ஏங்க வைக்கும்.
நான் மிகவும் ரசித்த வரி ஒன்று உண்டு.
“ அழுதரற்றும்
அத்தனை
தந்தைகளின்
அடி வயிற்றுத் தீ
அணைப்பேன்”
“ கல்லையும் கரைக்கும்
கடலளவு தொல்லைகள்.
சுமக்கும்
நம் சந்ததியினரை”
வறுமையை
வேருடன்
பூமியினின்று
கெல்லி எடுக்க
சூளுரைப்போம்”
போன்ற வரிகளில் ஆசிரியரின் சமுதாய அக்கறை தெரிகிறது.
ஒரு கவிதை இப்படி தொடங்குகிறது.
“ எல்லாப்
பக்கமும்
கிளை பரப்பி
விண் தொட
விளையும் விருட்சம்
இது”
ஆசிரியர் என் தோழி. நான் நன்கு அறிந்தவர்கள். இந்த வார்த்தைகள் அவர்களையே பிரதிபலிக்கிறது.
புத்தகம் நெடுக அழகு தமிழ் வார்த்தைகளை ரசித்தேன்.
//பசுந்தோகை வருடல்களாய்//
//திரவித்த திசுக்கள்//
//விம்மல்கள் வேதனையாய் வேடுகட்டும்//
// திகம்பரத் தீ நாக்கு//
.இரண்டு விஷயங்கள் மனதில் பட்டன. நாம் சில விஷயங்களை சிலவற்றோடு தொடர்பு படுத்திக் கொள்வதாலும் இருக்கலாம். சிறகு விரித்த பெண்ணின் நிறத்துக்கு கருமையை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது.
கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைப்பிட்டிருக்கலாம். அது வாசகரை கவிதையின் உள்ளிழுக்கும். மென் மேலும் நிறைய எழுத வேண்டும். விண் தொடும் விருட்சமாய் வளர வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)


