11 June, 2025
# ரயில் பயணங்களில்
இந்த தலைப்பு என்னை நாற்பதாண்டுகளுக்கு முன் கொண்டு விட்டுத் திரும்பியது.
அப்போ எனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்து, என் கணவர் வேலைக்குச் சென்று, இரண்டாவது குழந்தையும் வயிற்றில்.
அம்மா இன்னும் என் கணவருடன் சுமுகமாகவில்லை. அப்போ நாகரகோவிலில் நான் இருந்தால் வயிற்றில் குழந்தையுடன் முதல் குழந்தையைப் பார்ப்பது படினம் என்பதால் பாளையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கணவர் கேரளாவில் இருந்து வரும் போது மட்டும் அங்கே போவேன். மற்ற நேரங்களில் அம்மா வீட்டில் இருப்பேன்.
அங்கிருந்து நாகர்கோயிலுக்கு தினம் ரயிலில் பயணம். பல இடங்களிலிம் பணி புரிபவர்கள் ஒன்றாக வந்து சேர்வார்கள். ஒரே பெட்டியில் ஏறி விடுவோம். அமர்க்களம் தான். நான் மட்டும் தான் திருமணமாகி வயிற்றில் குழந்தையோடு. ரொம்ப நல்லா கவனிச்சுக்குவாங்க.
என் பெண் பிறந்தது ஜனவரி 19. அக்டோபர் 31 ஒரு முக்கியமான தினம் . ஆம் அன்னை இந்திராவை சுட்டுக் கொன்று விட்டார்கள். ஒரே பரபரப்பு. மாலை ரயில் ஓடுமோ என மதியமே எல்லோரும் கிளம்பி ஸ்டேஷன் வந்திடுங்கன்னு சொல்லிட்டாங்க. நான் ஆட்டோவில் போகிறேன். அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் அரை மணி நேரம் பயணம். ஆட்டோவை கலகக்காரர்கள் வழி மறிக்கிறார்கள். புள்ளத்தாச்சின்னு சொன்னபடியேஆட்டோக்காரர் பத்திரமா கொண்டு ரயில் சேர்க்கிறார்
நெல்லை சென்று சேர்ந்து விட்டோம். பஸ் எல்லாம் நிறுத்தி விட்டார்கள். மறு நாள் நவம்பர் 1 நாகர கோயிலுக் கு முதன் முதலாக ரயில் விட்ட தினம். கொண்டாடுவதற்காக தோவாளை என்னும் இடத்தில் பூ கேட்டிருந்தோம். அவர்கள் கொடுத்து விட்ட பூக்குவியலை அப்படியே கூடையோடு பஸ் ஸ்டான்டில் வைத்து விட்டு நடக கத் தொடங்கினோம். அங்கிருந்து எங்க வீட்டுக்கு அரை மணி நேரம் நடக்கணும்.
முத்து என்றொரு நண்பர் வங்கி ஊழியர் உடன் வந்தார். வீட்டில் எங்க அம்மாவிடம் என்னை ஒப்புவித்து "இப்போ தான் அப்பாடான்னு இருக்குது" என்றபடி வீட்டிற குச் சென்றார்.
மறக்க முடியாத ரயில் நட்புகள்
10 June, 2025
Su sheela Sujeeth மராத்தி படம்
Su sheela su jeeth
இயக்குநர் : இரண்டு மராத்தி பிலிம்ஃபேர் விருதுகளும், ஒரு தேசிய விருதும் பெற்ற பிரசாத் ஓக்.
முக்கிய கதாபாத்திரங்கள் : சோனாலி குல்கர்னி, ஸ்வப்னில் ஜோஷி, ராஜேந்திர ஷிசத்கர்.
பாடல்களும், படப்பிடிப்பும் அருமை.
இது ப்ரைமில் உள்ள ஒரு மராத்திப் படம். மலையாளப் படங்களைப் போலவே மராத்தியிலும் நுணுக்கமான பிரச்னைகளை கையாண்டு , மிக ஆழமாக, அழகாக ஆராய்ந்து படம் எடுப்பார்கள். இதுவும் அத்தகைய ஒரு படம் தான்.
சந்தேக புருஷன். அவன் சந்தேகத்துக்கு ஒரு காரணம் இருக்கிறது. மனைவி திருமணத்துக்கு முன் ஒருவரைக் காதலித்தது கணவனுக்குத் தெரியும்.
வேலைக்கு கிளம்பும் நேரம் பாத்ரூம் பைப்பை சரி செய்ய வருபவர் மனைவியின் பழைய காதலனைப் போலவே இருப்பதால் இவர்கள் இருவரும் தனிமையில் என்ன செய்வார்கள் என்ற கணவனின் கற்பனையில் திரைப்படத்தில் சில காட்சிகளைப் புகுத்தி ஒரு டாக்குமென்ட்டரி மன நிலைக்கு நாம் போய் விடாமல் காக்கிறார்கள். நகைச்சுவைக்கும் வழி வகுக்கிறார்கள்.
இன்றைய பல வீடுகளில் ஆட்டோமாடிக் கதவு இருக்கிறது. அதனாலேயே அவசரத்துக்கு, அதாவது திறவுகோல் உள்ளே இருக்கும் போது கதவு மூடி விட்டால் திறப்பதற்கு நண்பர்கள் வீடுகளில் மாற்று திறவுகோல் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் வீட்டிலோ பாத்ரூமின் கதவு இவர்கள் இருவரும் உள்ளே இருக்கும் போது ஆட்டோமாடிக்காக மூடி விடுகிறது. பக்கத்தில் யாரையும் உதவிக்கு அழைத்து விட முடியாத படி 15 (அ) 20 மாடிகள் உள்ள உயரமான கட்டடம். பிரச்னைகளை ஆழமாக ஆராய்ந்து எடுப்பார்கள் என்று சொன்னது சரியாப் போச்சுதா?
ஒரு பிரச்னையை மையக் கருவாக வைத்துக் கொண்டு நிகழ்வுகளை அதைச் சுற்றி நகைச்சுவை கலந்து பின்னியும் இறுதியில் தொடர்பு கொள்ளுதல் ( communication) என்பது எவ்வளவு முக்கியமானது என்ற மிக அழகான வாழ்க்கைப் பாடத்தையும் சொல்லி முடித்திருக்கிறார்கள்.
படங்களுக்கு பெயர் வைக்கும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கரை காட்டலாமோ எனத் தோன்றுகிறது.
பாருங்கள். பலர் ரசிக்கலாம். ஒரு சிலர் திருந்தக் கூடச் செய்யலாம்.
09 June, 2025
#நாகூர் தர்கா & காரைக்கால் அம்மையார் ஆலயம்.
3 ஆம் நாள் காரைக்கால் அம்மையார் ஆலயம் & நாகூர் தர்கா
பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தொலைவில் காரைக்கால் இருக்கிறது. காரைக்கால் அம்மையாரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதால் அவர்கள் பெயர் கொண்ட ஆலயத்தை பார்க்க முடிவு செய்தோம். சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் முடிந்து உள்ளதால் புதிதாக பெயின்ட் அடித்து பள பளவென்று இருந்தது கோயில். 63 நாயன்மாரில் மொத்தம் மூன்று பேர் பெண்கள். இவர் அவர்களுள் ஒருவர். பெரிய சிவ பக்தை.
இவரது இயற் பெயர் புனிதவதி. இவர் காரைக்காலில் கிபி 300 யிலிருந்து 500 க்குள் பிறந்திருக்கலாம் என்கிறார்கள். பேரழகும் தெய்வீக அம்சமும் கொண்டவர். இவர் கயிலை மலையில் கைகளால் "நடந்து" சென்று சிவபெருமானைக் காண விரும்பியதால் சிவனே இவரை "அம்மையே " என அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் முக்தி பெற்ற இடம் திருவாலங்காடு. இவர் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வொன்றின் நினைவாக காரைக்காலில் மாங்கனித் திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. வேற எங்கேயும் அம்மையாருக்கு கோயில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
காரைக்காலில் வெளி நாட்டுப் பொருட்கள் கிடைக்கும் என ஆசைப்பட்டுத் தேடினேன். அவ்வளவு திருப்தியாக எதுவும் கிடைக்கவில்லை்
அடுத்த நாங்கள் சென்ற இடம் காரைக்காலில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள நாகூர். அங்கே உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா. இது நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள ரொம்ப பிரபலமான ஒரு இடம். சுபி துறவி சையத் சாகுல் ஹமீது அவர்களின் கல்லறையின் மேல் கட்டப்பட்டது. இங்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. நம் நட்பில் இருக்கும் நண்பர்களுக்காக அங்கேயும் சென்று ஒரு வீடியோ எடுத்திடுவோம்னு போனோம்.
என்னுடைய "chellanaikutti" என்னும் யூட்யூப் சானலில் பாருங்கள்.
மிக உயரமான தர்கா.
நெருக்கமான தெருவுக்கு நடுவில் இருக்கிறது. உள்ளே போகு முன் கை கால் கழுவி உள்ளே வரச் சொல்கிறார்கள். நம் காலடிகளை கழற்றி விட ஒரு இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
மயில் பீலியால் தலையை வருடி நம் பெயர்களைக் கேட்டு சில மந்திரங்கள் சொல்கிறார்கள்.
பசித்தவர்களுக்கு உணவளிப்பதாகச் சொல்லி பண உதவி கேட்கிறார்கள். விரும்பினால் கொடுக்கலாம்.
அழகான கண்ணாடி அலங்காரங்களால் மேற்கூரை அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அனைவரும் வெளிப்புறம் அமர்ந்திருக்க கருவறை போன்ற ஒரு அறைக்குள் ஆண்கள் செல்கிறார்கள். இரண்டு அறைகள் சாத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதை அங்கே வருபவர்கள் தொட்டுக் கும்பிட்டு செல்வதைப் பார்த்த நான் விவரம் கேட்டேன் அது இருவரை அடக்கம் செய்த இடம் என்று சொன்னார்கள். ஆண்டு தோறும் சந்தனக் கூடு என்னும் திருவிழா நடக்கிறது.
பக்கத்திலேயே தான் திருநள்ளாறு இருக்கிறது. ஹிந்துக்கள் சனிப் பெயர்ச்சி சமயங்களில் தரிசிக்கும் ஆலயம்.
இதைத் தவிர ஏடுகளை எடுத்து நம் முன் ஜென்ம பலன்களை சொல்லும் வைத்தீஸ்வரன் கோவிலும் அருகிலேயே உள்ளது.
காரைக்காலில் இருந்து பாண்டி திரும்பும் வழியில் சாலையை நோக்கிய படி பிரம்புக் கடைகள் இருக்கின்றன. ஏகப்பட்ட பிரம்பு சாமான்கள் வைத்திருக்கிறார்கள். பார்க்கலாம் . வாங்கலாம்.
நாளை சென்னை AVM Gardens பற்றியும் , St. Thomas Mount பற்றியும், புனித தேற்றரவு அன்னை ஆலயம், காரைக்கால் பற்றியும் சொல்கிறேன்.
08 June, 2025
# 2 ஆம் நாள் டேனிஷ் கோட்டை.
பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தூரத்தில் இருக்கும் இடம் காரைக்கால். பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி நாலு இடங்கள் சேர்ந்து பிரெஞ்சு யூனியன் பிரதேசம். மாகி, ஏனாம் இரண்டு இடங்களையும் வரிசையில் வைத்திருக்கிறேன். பார்த்து விட வேண்டும்.
காரைக்கால் போகும் வழியில் தரங்கப்பாடி என்றொரு இடம் உண்டு. இது மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது. அங்கே டேனிஷ் கோட்டை இருக்கிறது. சிறிய அளவில் தான் இருக்கிறது. அந்த காலத்தில் கடல் வழி கப்பலில் வரும் தளவாடங்களை இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள். கடலை நோக்கிய வண்ணம் இரண்டு பழைய கால பீரங்கிகளை வைத்திருக்கிறார்கள். பழைய காலப் பொருட்கள் , இப்பொழுது கடல் மேலேறி வந்து வந்து கோட்டையை நெருங்கி விட்டது. ஆனால் மற்ற கடற்கரைகளைப் போல கல் வேலி கட்டி மறிக்காததால், தாய்மடியில் குழந்தை குதூகலிப்பதைப் போல நீரோடு விளையாட முடிகிறது.
இங்கு தான் இந்தியாவில் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிட்டதாகச் சொல்கிறார்கள்.
கோட்டைக்கு போகும் வழியில் ஒரு வாயில் இருக்கிறது. அது அந்த கால அரண்மனை வாயிலை நினைவுபடுத்துகிறது. 1718 இல் கட்டப்பட்ட ஒரு. சர்ச் இருக்கிறது. பழைய கட்டடங்களை அப்படியே பழைமையோடு பாதுகாக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த வழியில் உள்ள கட்டடங்கள் எல்லாம் பெயின்ட் செய்யப்பட்டு புதிதாக இருக்கின்றன. . அதனால் பழமை மாறியது போல் தான் தெரிகிறது. பதிக்கப்பட்ட வருடங்களை வைத்துத் நான் முந்நூறாண்டு பழமையானது எனத் தெரிகிறது.
முன்தன் முதலில் பெண்களுக்கான செகன்டி கிரேட் டிரெயினிங் பள்ளி இங்கு தான் வந்ததாகச் சொல்கிறார்கள். கோட்டைக்குள் செல்ல ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். காலை பத்து மணி முதல் மாலை 5.45 வரை உள்ளே இருக்கலாம்.
மற்ற எல்லா பீச்களிலும் இருப்பது போல தள்ளு வண்டிகளில் மாங்காய் பத்தை, ஐஸ், போன்ற தின்பண்டங்களும் கிடைப்பதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை ரசிக்கலாம்.
கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடமாடிய மக்கள் கால் வைத்த இடங்களில் நாமும் வைத்திருக்கிறோம் என்பதே பரவச உணர்வைத் தரும்.
வாசிப்பதைப் போலவே கண்களுக்கும் விருந்து அளிக்க chellanaikutti என்னும் என் யூட்யூப் சானலில் பார்க்கலாம். எழுத்துக்களை நான் கொடுத்திருப்பது போலவே கொடுத்தால் வந்து விடும்.
நாளை காரைக்கால் அம்மையார் ஆலயமும், நாகூர் தர்காவும் பற்றிய தகவல் கள் தருகிறேன்.
05 June, 2025
# பயணக் கட்டுரை.
பயணங்கள் நம் மனதில் அடைந்து கிடக்கும் சோர்வெனும் ஒட்டடையை சுத்தம் செய்து மிச்ச வாழ்வை புத்துணர்வோடு கொண்டு செல்ல உதவும்.
பணியில் இருக்கும் வரை இதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இருந்ததில்லை. மத்திய அரசு அலுவலகத்தில் நாலாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் சென்று வரும் தொகையைத் தந்து விடுவார்கள். அப்படி ஒரு வசதி இருந்தும் நாங்கள் சென்றதில்லை. என் கணவருக்குப் பயணங்கள் பிடிப்பதில்லை. நானோ அலுவலகமே கதி என்றிருந்தேன்.
ஓய்வு பெற்ற பின் இருவர் மனமுமே கொஞ்சம் மாற்றம் அடைந்தது. வருடத்துக்கு இரண்டு முறை எங்கேயாவது சுற்றுலாவாக போய் வருவது என முடிவெடுத்தோம். ஒரு முறை பெங்களூர் சென்று மகள் குடும்பத்துடன் கொஞ்ச காலம் கழிப்பது. ஒரு முறை விடுமுறைக்கு மகள் குடும்பம் எங்கள் வீட்டிற்கு வருவார்கள் ஆக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரொட்டீன் வாழ்க்கையில் இருந்து மாற்றம் கிடைக்கும். அது மனதை உற்சாகமாக வைத்திருக்கும் என்று முடிவு செய்தோம்.
நல்ல பலன் கிடைத்தது. ஆரம்பத்தில் எனக்காக வந்த என் கணவர் போகப் போக அவரே எங்கே போகலாம் என யோசிக்கத் தொடங்கினார். பலரும் ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்த காரியம் தான் நாங்கள் ஓய்வு பெற்ற பின் தொடங்கினோம். Better late than never.
சமீபத்தில் ஒரு ஐந்து நாள் பயணம் சென்று வந்தோம். அதைப் பற்றி ஒரு பயணக் கட்டுரை எழுதலாம் என நினைக்கிறேன். மக்கள் விருப்பம் பார்த்து போய் வரும் இடங்களைப் பற்றியும் அங்கு நேர்ந்த நிகழ்வுகள் பற்றியும். எழுதுகிறேன்.
இந்த முறை பார்த்த இடங்கள் சென்னை, பாண்டிச்சேரி, தரங்கம்பாடி,காரைக்கால் , நாகூர், வேளாங்கண்ணி. நான் பொதுவாகவே கடவுள் நம்பிக்கை உடையவள் ஆதலால் தேவாலயம் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இந்த முறை ஒரு வித்தியாசமாக வேற்று மதத்திலும் இருக்கும் நம் நண்பர்களுக்காக ஹிந்து, கிறிஸ்டின், முஸ்லிம் என மூன்று மத நண்பர்களும் பார்ப்பதற்கான மத வழிபாட்டு தலங்களை கவர் செய்தோம். வீடியோக்களை என் யூட்யூப் சானலில் பதிவேற்றவும் உதவியது.
இன்னுமொரு வழக்கம் உண்டு. யார் வீட்டில் தங்கி இருந்து இடங்கள் சுற்றி பார்க்க செல்கிறோமோ அந்த குடும்பம் மகிழ்வோடும் ஆரோக்கியத்தோடும் இன்னல்கள் இன்றி வாழ வேண்டுமென ப்ரார்த்தித்து நான் செல்லும் சர்ச்களில் பூஜைக்கு கொடுப்பேன்.
அது அப்படி ஒரு மன நிறைவைத் தரும்.
இந்த முன்னுரையோடு நாளை டேனிஷ் கோட்டை பற்றி எழுதுகிறேன். தங்கள் கருத்தை பகிருங்கள். விமர்சனங்கள் தானே எழுத்தின் தரத்தைக் கூட்டும். எதிர் நோக்கி இருக்கிறேன்
Subscribe to:
Posts (Atom)
