Bio Data !!

24 March, 2025

# சுட்டு விடும் நிஜங்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிள்ளை வாழாமல் தனித்திருப்பது இன்று நம் கண் முன்னே காணும் வருத்தமான நிஜம். குடும்பத்தில் ஆண்கள் பெண்களை அடிப்பதும், அராஜகம் பண்ணுவதும் அன்று வழக்கமாய் இருந்தது. தன் தாய் கஷ்டப்படுவதை பார்த்து வளர்ந்த பெண் குழந்தைகள் நாம் ஆரம்பத்திலேயே இடம் கொடுத்து விடாமல் துணிச்சலாய் இருக்க வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் எதிர்த்து நிற்பது இன்று பல விவாகரத்துகளுக்குக் காரணம் என்பது சுட்டு விடும் நிஜம் அன்று பெண் குழந்தைகள் கணவரையோ அவர் குடும்பத்தையோ குறை சொல்லி பெற்றவரிடம் வந்தால் "இது பெரிய விஷயமில்லை அனுசரித்து வாழ்" என்று சொல்லிக் கொடுத்தார்கள். இன்றோ " கண்ணின் மணி போல் நாங்கள் பிள்ளையை வளர்த்தது இவர்கள் கஷ்டப்படுத்தவா. முடிஞ்சா பாரு இல்லைன்னா வந்திடு " என்பது இன்றைய பெற்றோரின் போதனையாய் இருப்பதும் விவாகரத்துகளுக்கு ஒரு காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். வரவுக்கேத்த செலவு செய்யணும் என்பது போய் வானளவு ஆசை வளர்த்து திருமணத்தை ஹெலிகாப்டரில் நடத்துவோமா கப்பலில் நடத்துவோமா என்று யோசிப்பதும், தன் அளவில்லாத ஆசைகளை தீர்க்கக் கூடியவனையே திருமணம் செய்ய காத்திருப்பதும் திருமணமாகாத முதிர் கன்னிகளும் இளைஞர்களும் பலரிருக்கக் காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். திருமணமாகுமுன் தன் சகோதரிகள் திருமணத்துக்காகவும், தனக்குத் திருமணமான பின் தன் மனைவி மக்களுக்காகவும் உழைப்பது தன் கடமை என நினைத்து வாழ்ந்த தன் தந்தையர் கதை கேட்ட இளைஞர்கள் ஆரம்பத்திலேயே சுதாரிப்பதாய் நினைத்து பொறுப்பவர்களாய் மாறிப் போவதும் அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கு ஒரு காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது கணவன் சொல்வதையே வேத மந்திரமாய் நினைக்கும் பெண்ணை தாயாய் பார்த்து வளர்ந்த ஆணின், பொருளாதாரத்தில் தன்னைத் தாங்கிப் பிடிக்க வேலைக்குச் செல்லும் பெண் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதைப் புரிந்து கொள்ளாத, ஏற்றுக் கொள்ளாத ஈகோவும் பல விவாகரத்துக்களுக்கு காரணம் என்பதும் சுட்டு விடும் நிஜம். இப்படி சொன்ன சிலவும் சொல்லாத பலவும் சுட்டு விடும் நிஜங்கள்.

22 March, 2025

Amazon prime ல சுழல் பார்த்தேன். ஆமா சுழல் 1 பார்த்து ரொம்ப நாள் ஆகிட்டதால அதை மறுபடியும் பார்த்திட்டுத் தான் சுழல் 2 பார்த்தேன். கண்டிப்பா பாருங்க ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. பல விஷயங்கள் பிடித்திருந்தாலும் பிடிக்காத ஒண்ணு ரெண்டு விஷயங்களும் இருக்குது. அதையும் சொல்றேன். பிடித்த விஷயங்கள்: கோயில் திருவிழாவை மிகவும் சிரமப்பட்டு நிறைய பேரை வைத்து ஷீட் பண்ணி இருக்கிறாங்க. பாராட்டுகள். சூரசம்ஹாரம் நேரில் போய் பார்க்காத பலருக்கும் பார்த்த திருப்தி கிடைக்கும். வேஷம் கட்டியவர்கள் கடைசி நாள் ஏன் கடலில் முங்கி தன் வேஷம் கலைக்கிறாங்கங்கிறதுக்கான காரணம் ரொம்ப சூப்பர். தான் என்ற அகந்தை தானே பல பிரச்னைகளுக்கும் காரணமா இருக்குது. அதை வேஷத்தோடு சேர்த்து கரைக்கத்தான் என்கிறார்கள். அந்த தம்பி கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இரண்டிலும் கலக்கி இருக்கிறாங்க. கூடவே லாலும். கதிர் நடிப்பு underplay. வரம்பு மீறாத மெல்லிய காதல் இரண்டிலுமுண்டு. எடுத்துள்ள கரு மிகவும் வலுவானது. இன்றைய தேதிக்கு இன்றியமையாதது. சிறு குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல். நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்களால் தான் இது நடக்கிறது. அவர்களை நம்பி நாம் குழந்தைகளை விடுவதால். போட்டோகிராஃபி ரொம்ப அருமை. முக்கியமாக கடலில் படகில் வரும் சேஸ் மிக அருமையாக எடுக்கப்பட்டு இருக்கிறது. பிடிக்காத விஷயம். ஏற்கனவே ஆண்கள் படத்தில் நடத்தும் வன்முறை மிக அதிகமாக இருப்பதாக என்னைப் போன்ற பலர் எண்ணும் இச்சமயத்தில் இந்த சீரிஸில் பெண்கள் பெண்கள் மேலேயே நடத்தும் வன்முறை மிகவும் அதிகம். பெண்கள் பெண்களை நெஞ்சிலேயே எட்டி மிதிப்பதாக வரும் போது நமக்கு குலை நடுங்கி விடுகிறது. மொத்தத்தில் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டிய நல்ல வெப் சீரீஸ்

17 March, 2025

இரவானால் உன் கரங்களின் அணைப்புக்குள் கற்பனையாய் அடங்கி விடுகிறேன். புரண்டு படுக்க முடியாமல் நீ என்னைப் புறம் தள்ளுவதில்லை. பாரமாய் அழுத்துகிறேனென புலம்புவதுமில்லை. அணைப்பைக் கொண்டு கலவியில் முடிக்க என் அலுத்த உடலை அவசரப்படுத்துவதில்லை. அகால வயதில் கரு தாங்கி , அலமந்து கூனிக் குருகி பெண் மருத்துவரின் பார்வைக் குறுவாளின் பலி ஆக வேண்டியதில்லை. இரவானால் உன் கற்பனை அரவணைப்பில் அற்புதமாய் உறங்கி விடுகிறேன்.

06 March, 2025

#இயற்கையின் மனிதாபிமானம் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே இயற்கையின் மனிதாபத்தினால் தான். இந்த பதிவின் முடிவில் நீங்களும் என் கருத்துக்கே வந்து விடுவீர்கள். இயற்கை என்பது ஐந்து முக்கிய பகுதிகள் கொண்டது. அவை நிலம், நீர், காற்று, வானம், அக்னி. நிலம் தன் உடலை குலுக்கிக் கொண்டு கொஞ்சம் சரிந்தால் நிலச் சரிவு. இன்னும் கோபம் அதிகம் கொண்டால் பகலில் சரியாமல் இரவில் மக்கள் உறங்கும் போதே சரிந்து அப்படியே கபளீகரம் பண்ணும். நீர் :நிலம் தாய் என்றால் கடல் என்பது தாயின் தாய். அம்மம்மா. அவ்வளவு எளிதில் கோபப்படாது. தன்னிடம் வரும் பேரப் பிள்ளைகளிடம் அலை அலையாய் விளையாடும் அம்மம்மா கோபம் அதிகரித்தால் சுனாமியாய் வந்து மொத்தத்தையும் சுருட்டிச் செல்லும். வானம்: அந்த அம்மம்மாவின் தங்கையான சின்னப் பாட்டி மழை அன்பாய் மழை பொழியா விட்டாலும் சிக்கல். எக்கச் சக்கமாய் பெய்தாலும் சிக்கல்.இந்த மழையை சரியான அளவில் , நேரத்தில் தந்து நம்மைக் காப்பது வானம். சூறாவளியாய் காற்று அச்சுறுத்தாமலும் , அடர் நெருப்பாய் பரவி காடுகளைக் கூட விட்டு வைக்காமல் பஸ்பமாக்காமலும் நம்மைக் காக்கும் அப்பாவாய், அண்ணனாய் காற்றும் நெருப்பும். இப்போ சொல்லுங்க நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே இயற்கை மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதால் தானே. நாம் மனிதாபத்தோடு நடந்து இயற்கையை கோபப்படுத்தாமல் பாதுகாத்து நாமும் பாதுகாப்பாய் இருப்போம்.

04 March, 2025

பட்டாம்பூச்சி மென்னி திருகி

நெஞ்சுக்கும் வயிற்றுக்குமிடையே வட்டமிடும் பட்டாம்பூச்சியின் மென்னி திருகி இளங் காதலின் பரவசத்தை புதைத்து மூடிய மிதப்பில் என்னை யாருமினி ஏங்கி அழ விட முடியாது. உதடு பிதுக்கி புலம்ப விட முடியாது. கண்ணீர் முட்ட கலங்க வைக்க முடியாதென இறுமாந்திருந்தேன். தோற்றுப் போய் பட்டாம்பூச்சிப் படபடப்பு இளங் காதல் பரவசத்தை பிரசவிக்க உணர்ந்தேன் காதலென்பது முற்றாய் அழிக்க முடியா அணுக்களென.