Bio Data !!

09 July, 2012

"மறு பக்கம் " புத்தக விமர்சனம்

"மறு பக்கம் " ஆசிரியர் பொன்னீலன் சாஹித்ய  அகடமி விருது பெற்றவர்.

ஆசிரியர் பற்றி சில வரிகள் :
"அண்ணாச்சி" எனக்கு 1980 இல் அறிமுகமானவர்.. அழகிய முகத்தில் "மீசை " என்னும் கிரீடம் அணிந்திருப்பவர். அந்த பெரிய முறுக்கு மீசைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் குழந்தைத்தனம் தவழும் முகம்.. கலை இலக்கிய பெரு மன்றம் நடத்திய ஒரு பயிற்சி முகாமில் தான் அறிமுகம்.. உலகில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று .சொல்வார்கள். அப்படிப்பட்ட எழுவரில் என்னை போல் இருக்கும் மற்றொருவர் அண்ணாச்சியின் மூத்த மகள் அமுதா.. அதுவே அவருடன் என்னை இன்னும் இறுக்கி இணைத்தது.. 1972 இல் மறு பக்கம் நாவலுக்கான தகவல்களை தேடத் தொடங்கி .இருக்கிறார். இடையில் வேறு சில பணிகள் . கடந்த ஆண்டு புத்தகம் வெளியானது..

இனி நாவலை பற்றி :
18 , 19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த "தோள் சீலை " போராட்டத்தை பற்றி அறிந்த பொன்னீலன் அவர்கள் அதை பற்றிய தகவல்களை 1972 முதல் சேகரிக்க .தொடங்குகிறார் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி நூலகம்,, சென்னை கன்னிமரா நூலகம் இவருக்கு பேருதவி செய்கின்றன. அதையும் 20 ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்ட உருவாக்கப் போராட்டத்தையும் இணைத்து "மறு பக்கம் " என்ற இந்த நாவலை எழுதி  வெளியிட்டுள்ளார்

1982 இல் நடந்த மண்டைக்காடு மதக் கலவரத்தை தனியாக பார்க்காமல் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக பார்க்கிறார்.. இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன் உள்ள காலத்திற்கும்  பிந்திய கால கட்ட நிகழ்சிகளுக்கும் இடையேயான ஊடாட்டம் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் குழப்பமாக .இருந்தது அந்தந்த கால கட்டங்களின் கதா பாத்திரங்களின் பெயர்களை அழுத்தமாக பதித்துக் கொண்டதால் அவருடனேயே பயணிக்க முடிந்தது..

மண்டைக்காடு கலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ள வரும் சேது  தன் தாயை பற்றியும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறான். பள்ளி வாத்தியாரான தன் தந்தை பள்ளி மாணவியான தன் தாயை மணந்து கொண்டதால் அதைப்பற்றி வெளிப்படையாக யாரிடமும் விசாரிக்க முடியாமல் திணறுகிறான். தன் தாயைப் போன்ற ஜாடையுடைய ஒரு பெண்ணை பின் தொடர்ந்து விசாரிக்கும் போது  அவர் தான் தன்  சித்தி என்பதை யாருடைய உதவியும் இல்லாமல் கண்டு பிடிக்கும் இடம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.

கலவரத்துக்கு பயந்து மக்கள் கடலுக்குள் சாடும் பொது கிறிஸ்துவத்தில் மோயீசன் செங்கடலை பிளந்து ஜனங்களை காப்பாற்றியதை குறிப்பிட்டு அரபிக்கடல் ஒரு வேளை அடி பணிய மறுத்து விட்டதோ என்கிறார். இப்படி சில இடங்களில் ஆசிரியர் தன் கடவுள் நம்பிக்கையின்மையை தொட்டுச் செல்கிறார்.

மீனவர்களுக்கும் நாடார்களுக்குமான இனக் கலவரம் அப்படியே திசை திருப்பப்பட்டு இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான மதக் கலவரமாக மாற்றப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார். "கடலில்  தாழ்த்த " அழைத்து வருபவனை புத்திசாலித்தனமாக காப்பாற்றும் இடத்தில்  இரண்டு இனத்திலும் இளைஞர்கள் வேகத்துடனும் பெரியவர்கள் விவேகத்துடனும் வளைய வருவதை பார்க்க முடிகிறது.

வரலாற்று நிகழ்வுகளை  அழுத்தமாக பதிய வைத்த ஒரு நாவல் திடும்மென முடிந்தது போல் இருந்தது. இன மதக் கலவரத்துக்கு முடிவு ஏது அது தொடர்கதை தான் என்பதனால் இருக்கலாம். கொஞ்சம் பெரிய புத்தகம் தான் மிரண்டு விடாதீர்கள். வாசிக்க தொடங்கியதும் ஆசிரியரை அலைபேசியில் அழைத்தேன். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இருப்பதாகவும் நாவலை  முடித்து விட்டு பேசும் படியும் கூறினார். விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன். பிரார்த்தனையில் ஆசிரியருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் . எனக்கு இருக்கிறதே!!

18 June, 2012

பிரசவமான தாய்க்கான ஸ்பெஷல் உணவு.



ஏற்கனவே எழுதிய இரண்டு பதிவுகளின் தொடர்ச்சி தான் இது .
குழந்தைக்கு பாலூட்ட இந்த நாட்களில் தாய்க்கு அதிகப்படியான கவனம் எடுத்து உணவு அளிக்க வேண்டும்.

குறிப்பாக சில உணவு வகைகள் தாய்ப்பால் அதிகரிக்க ஏற்றவற்றை கீழே தருகிறேன். இவை தொடர்ந்து சாப்பிடா விட்டாலும் முதல் நாலைந்து மாதங்கள் சாப்பிட்டால் அதன் பின் நாம் எடுத்துக் கொள்ளும் தினசரி உணவே போதுமானது.

காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட வேண்டும்.
முக்கால் தம்ளர் பாலில் பத்து பெரிய  வட பூண்டுகளை மெல்லியதாக நறுக்கி போட்டு வேக வைக்க வேண்டும். பால் கால் பாகம் ஆகும் போது ரெண்டு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரைத்தூள் போட்டு இறுகி வரும் போது  இறக்கி வைக்கவும். சூப்பரா பால் கோவா போல இருக்கும். என்ன ஒண்ணு   பூண்டு மெல்லும் போது கொஞ்சம் கஷ்டம். பாப்பாவுக்காக இது கூட செய்யலைனா எப்படி?

காலை உணவு :
காலையில் ரஸ்க் அல்லது ப்ரெட் (இரண்டில் ரஸ்க் தான் சிறந்தது) ஒரு பெரிய டம்ளர் பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் பால் கொடுக்கிறோமோ அப்பொழுது எல்லாம் மதர்ஸ் ஸ்பெஷல் ஹார்லிக்ஸ் ஒரு   கரண்டி சேர்த்துக் கொடுப்பது நல்லது.

இந்த உணவு மலம் கட்டும் தன்மையுள்ளதால் நார்ச்சத்து மிகுந்த பழங்களை முக்கியமாக ஆரஞ்சு தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதிய உணவு:
மதிய உணவுக்கு சைவ வகையில் பாசிப்பருப்பு, பூண்டு, சுண்ட வத்தல், அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
                           சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு செய்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
                           சுண்ட வற்றல் குழம்பு வைத்துக் கொடுக்கலாம்
                           முட்டை சாப்பிடுபவர்கள் வழக்கமாக முட்டை குழம்பு செய்வது போல் செய்து தேங்காய் அரைக்கும் பொது அதனுடன் வறுத்த சுண்ட வற்றல் ஏழு (அ ) எட்டு வறுத்துப் போட்டு அரைக்கலாம்.
                           அசைவ உணவுக்காரர்கள் மீன் குழம்பு சேர்க்கலாம். அதிலும் "பிள்ளை சுறா " மீன் மிகவும் சிறந்தது. பிள்ளை சுறா மீன் பாலூட்டும் தாய் மார்கள் மட்டும் அல்லாமல் பெண்களுக்கு குறுக்கு வலி போன்ற வற்றிக்கும் நல்லது என்கிறார்கள் .
                          பிள்ளை சுறா "மீன்" மட்டும் அல்லாமல் கருவாடும் கொடுக்கலாம். கருவாட்டை, மிளகு சீரகம் அரைத்து குழம்பாகவோ, வெங்காயம் தக்காளி சேர்த்து வறுத்தோ கொடுக்கலாம்.
                          பொதுவாகவே குழந்தை பெற்ற தாய்க்கு புண் ஆற வற்றலைக் குறைத்து மிளகு அதிகம் சேர்க்க வேண்டும். சமையலில் நாம் சேர்க்கும் மஞ்சளும் நெய்யும் கூட புண்ணை  விரைவில் ஆற்றும்.
                         ஆட்டின் ஈரலை குழம்பு வைத்துக் கொடுக்கலாம். ரத்தம் ஊறும் . ஈரல் குழம்பு வைக்கும் போது  கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், சரியான நேரத்தில் இறக்கி விட வேண்டும். இல்லையென்றால் அது ஈரல் ரப்பர் ஆகி விடும்.

மாலை உணவு:
                        மாலையில் ஒரு உணவு கொஞ்சம் அதிகப்படியோ என்று நினைக்காதீர்கள். பாலூட்டும் தாய்க்கு பகாசுரப் பசி தான். பட்டர் பன்னும் ஒரு பெரிய தம்ப்ளர் பாலும் தினசரி கொடுக்க வேண்டும்.

இரவு உணவு :
                       இரவில் சாதம் கொடுப்பது தான் நல்லது. மதியம் வைத்த குழம்பை ஊற்றி எதோ ஒரு காய் வைத்துக் கொடுக்கலாம்.
                       இரவு 11 மணிக்கு மறுபடியும் ஒரு தம்ளர் பால் குடிக்க வைக்க வேண்டும்.
                       பாலூட்டும் தாய் இரவில் அதிகம் சோர்வு அடைவாள் .அதிலும் ஆண் பிள்ளை என்றால் சோர்வு இன்னும் அதிகம். அதிகாலை 4 மணிக்கு ஹார்லிக்ஸ் வெந்நீரில் கலந்து கொடுக்கவும். அந்த நேரத்தில் தாய்க்கு அது அமுதமாய் இருக்கும்.

                                       எனக்கு தெரிந்த அளவில் சொல்லி இருக்கிறேன். தெரியாதவர்களுக்கு பயன்படலாம். தெரிந்தவர்கள் விட்டுப் போனவை ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இதற்கு சம்பந்தமான முந்திய இரண்டு பதிவுகளை காண இங்கே செல்லவும்:


25 May, 2012

சுகமான பயணம் -II


சுகப் பிரசவத்திற்கு அனைவருக்கும் ஆசை தான் 
குழந்தை பிறந்திருப்பதாக சொன்னதும் முதல் கேள்வி நார்மலா? சிசேரியனா ? இன்று சிசேரியனே நார்மலாகிப் போனது ஒரு பக்கம்.
ஆனால் அறிவியலின் வளர்ச்சியால் மூன்றாம் நாளே எழுந்து உட்கார சொல்லி விடுகிறார்கள். அங்கேயும் கட் அண்ட் பேஸ்ட் தான். முன்பு ஆப்பரேஷன் செய்து குழந்தை பெற்றதன் அடையாளமாய் வயிற்றில் ஒரு பெரிய புழுத் தையலை சுமக்க வேண்டும். இன்று அப்படி இல்லை அடி வயிற்றின் ஒரு பக்கமாய் ஒரு ஒட்டலின்  அடையாளம் அவ்வளவு தான். ஆனால் அந்த தையலில் நீர் வைத்து புண்ணாகி விட்டால் தொல்லை.அதை தவிர்க்க குளிப்பதற்கு முன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி விட்டால் நீர் அதிகம் ஒட்டாமல் ஓடி விடும். மருத்துவர் சொல்லும் மருந்தையும் தவறாது தடவி வந்தால் தப்பித்து விடலாம் கூடுதல் வேதனையிலிருந்து


ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுத்தால் மூன்று நாட்களுக்கு தாய்க்கு சலைன் தான் ஏறும். சிலருக்கு அந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பதில்லை. இருந்தாலும் குழந்தையை தாயிடம் விடுங்கள் . வேற எதுவும் கொடுக்க  வேண்டாம் என்கிறார்கள்.   அழுது கத்தித் தீர்க்கும் குழந்தையை காணச் சகியாமல் நர்சிடம் கேட்டு டின் பால் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சங்கில் புகட்டினோம் திடீரென டாக்டர் வந்து பார்த்திட்டால் வாங்கிக் 
கட்டுவோம். "குடிக்க குடிக்க தான் வரும் . இந்தப் பால் குடுக்கிறதுக்கு யார் சொன்னா?" என்று கோபப்படுவார்கள். நமக்கு உதவி செய்த நர்சை காட்டிக் கொடுக்காமல் "பால் வரும் வரை குழந்தை என்ன செய்யும் என்று நம்முள் எழுந்த கேள்வியை உள்ளேயே அமிழ்த்தி அமைதியாய் 
நிற்க வேண்டும்.   இளங்காலை சூரியக் குளியலுக்காக நிற்கும் போது பக்கத்தில் விசாரித்தால் அங்கேயும் அதே கதை தான் என்று தெரிந்ததும் கொஞ்சம் மனம் தைரியம் அடையும் 
தொடர்ந்து குழந்தை முயற்சி செய்ய தாய்க்கும் இயல்பான உணவு கொடுக்க ஆரம்பித்ததும் பால் சுரக்கத் தொடங்கும். அதற்குள் பாட்டிலை பழக்கி விடாதீர்கள் குழந்தை தாயிடம் குடிக்க முரண்டு பிடித்து விடும். சங்கில் கொடுப்பது சர்க்கஸ் வித்தை தான். ஆனாலும் அது தான் நல்லது. 

பிறந்த ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு நாலே வேலை தான். பால் குடிப்பது, தூங்குவது, கக்கா , உச்சா போவது. ஆனால் அவர்களின் தேவையை சொல்ல அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி அழுகை தான். நாம் தான் எந்த அழுகை எதற்கானது என்று புரிந்த நடக்க வேண்டும். நாம் பொதுவாக அழுதாலே பசி என்று தான் புரிந்து கொள்கிறோம் கொஞ்சம் அக்கறையோடு கவனித்தால் ஒவ்வொரு தேவைக்கும் அதன் உடல் மொழி நமக்கு புரிந்து விடும். கக்கா போக தவிக்கும் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டு ஆட்டு
என ஆட்டி விட்டு "என்ன ஆட்டினாலும் தூங்குதா பாரு " என குறைப்பட்டால் சரியாக இருக்குமா? அதன் உடல் மொழி புரிந்து விட்டால் குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி ஒரு சீட்டில் ப்ரீ ஆக படுக்க போட்டால் அதன் வேலை சுலபமாய் முடியும் குழந்தையை சுத்தம் செய்து தொட்டிலில் போடுங்கள் ஐந்தே நிமிடங்களில் உறங்கி விடும்.

பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வழக்கம் அநேகம் பேரிடம் இல்லை. கண்டிப்பாக இடையிடையே தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறந்த சில மாதங்களுக்கு அடிக்கடி கக்கா போகும் அதனால் உடம்பில் உள்ள நீர் சத்தை சமன் செய்து கொண்டே இருக்க வேண்டும். பாலூட்டும் தாய் தன் உணவில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தால் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும்.  சேராத உணவினை மன உறுதியோடு தவிர்த்திட வேண்டும். சேரும் உணவினை பிடிக்கவில்லை என்றாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

(பாலூட்டும் தாய் உண்ண வேண்டிய உணவினை அடுத்த பதிவில் சொல்கிறேன் )


23 May, 2012

சுகமான பயணம்




இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எங்க வீட்ல குட்டி பாப்பா இருக்கிறதால நான் எழுதுவதும் அது சம்பந்தமாவே தான் இருக்கும் 
தாய்மை என்பது வரம் அதை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக் கூடாது.  காதல் திருமணம் இன்னும் பிற காரணங்களால் குடும்பத்தை பகைத்து தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய தாய்மைக் காலத்தில் தனிமையில் துயருறும் அன்பு உள்ளங்களுக்கு என் இந்த பதிவு உதவலாம். மற்றவர்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தால் ஸ்கிப் செய்து விடலாம்.

கர்ப்ப காலத்தில் நாம் சேகரிக்கும் சக்தி குழந்தை நல்ல எதிர்ப்பு சக்தியுடன் வளைய வர உதவும். எனவே அடிக்கடி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏழாம் மாதம் தொட்டே Mothers special ஹா ர்லிக்ஸ் குடிக்கத் தொடங்கலாம்.  குழந்தைக்கு பாலூட்டும் போது அதன் பலன் தெரியும்.
பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் வித்தியாசம் தெரியாமல் பெரியவர்கள் உடன் இல்லாத போது  பயப்பட நேரிடும். சாதரணமாக இளம் பெண்கள் பிரசவ வலி என்பது வயிற்றில் ஏற்படும் என்று எதிர்பார்த்து
அடி முதுகில் (குறுக்கு) ஏற்படும் வலியை அலட்சியப் படுத்த நேரிடலாம். உண்மையில் பிரசவ வலி என்பது குறுக்கில் தான் தொடங்கும். அது பொய் வலியாய்  இருக்கும் பட்சத்தில் கீழே சொல்லிய கஷாயம் குடித்தால் சரியாகி விடும். 
சாரண வேர், குறுந்தட்டி வேர், தலா 10 கிராம் வாங்கி வீட்டில் வைத்திருக்கவும். ஒரு பெரிய தம்ளர் நீரில் கொஞ்சம் சாரண வேர், குறுந்தட்டி வேர், கொஞ்சமே கொஞ்சம் சுக்கு மூன்றும் மிக்சியில் லேசாக பொடித்து போட்டு கொதிக்க வைத்து கால் தம்ளர் அளவு சுண்ட வைக்கவும். அந்த கஷாயத்தை வடித்து குடித்தால் பொய் வலி போயே போகும். தொடர்ந்து வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நலம்.

இன்று எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்து விடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கடின வேலைகள் குறைந்து விட்டது. அதுவே சுகப் பிரசவத்திற்கு வழியை தடை செய்கிறது. 
.      மாலையில் முடிந்த அளவு நடப்பது, தேய்ந்த விளக்குமாற்றால் (புதிய விளக்குமாறு குனிய வைக்காது)பெருக்குவது , துவைத்த துணிகளை குனிந்து நிமிர்ந்து அலசுவது என சின்ன சின்ன வேலைகள் செய்யும் போது  வயிற்றின் தசைகள் அசைந்து வயிற்றினுள் இருக்கும் குழந்தை திரும்பி சுகப் பிரசவத்துக்கான பொசிஷனுக்கு வர உதவும். 

ஒரு துளி கரு குழந்தையாய் உருவாகும் அற்புதத்தை சிந்திப்பவர்கள் யாரும் கடவுளை நம்பாமல் இருக்க மாட்டார்கள். மிகுந்த இறை பக்தியோடு கர்ப்ப காலம் என்னும் இந்த நெடும் பயணத்தை சுகமாய் முடித்து வைக்க பிரார்த்தனை செய்வது  அவசியம். 
மனதை தைரியத்தோடும், மகிழ்ச்சியோடும் வைத்திருங்கள். 

(  மழலையை மலர்ச்சியோடு வளர்ப்பது பற்றி அடுத்து சொல்கிறேன் )

10 May, 2012

ஒரு மஞ்சள் நிலவு !!



நகருக்குள் முக்கியமான இடத்தில் அந்த மருத்துவமனை.
இளங்காலை நேரம் 
அதைக் கடந்து செல்லும் பஸ்ஸில் பயணிப்பவர்கள் தலை எல்லாம் குடியரசு தின பரேட் போல் வலது புறம் திரும்புகிறதே என பார்த்தால் 
அந்த மருத்துவமனை உள்வாசல் ஓரம் ஒவ்வொரு பெண்மணியும் கையில் ஒரு சிறு துண்டும் அந்த துண்டின் மேல் மலர்ந்த புஷ்பமாய் சிசுக்களும்
இளங் காலை வெயிலிலிருந்து  கிடைக்கும் வைட்டமின் 'D'  சத்துக்காக அங்கு அப்படி ஒரு ஏற்பாடு .

என் மகள் என்னைப் போலவே மாநிறம் தான். என் கணவர் அவளை செல்லமாக "கருப்பட்டி' என்று அழைப்பார். அவள் சோர்வும் புன்சிரிப்புமாய் அவள் தந்தையை பார்க்க அவர், "   ஏ!! கருப்பட்டி ! எப்படி இவ்வளவு வெள்ளையாய் பாப்பா வந்துச்சு " என்றார் 
உடனே அவள் கணவர் " இப்போ தான் எல்லா பிள்ளையும் வெள்ளையா தானே பிறக்குது " என்றார். அவர் யதார்த்தமாக சொன்னாலும் எனக்கு ஒரு விஷயம் நெருடியது.   அங்கு வந்த நர்சிடம் 
"காலையில் இளம் வெயிலுக்காக வைத்திருக்கும் எல்லா குழந்தைகளும் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கிறார்களே" என்றேன். 
"ஆமாங்க , முந்தி எல்லாம் கர்ப்பிணி பெண்கள் சேலை கட்டி போவாங்க . சூரிய வெளிச்சம் வயிற்றில் பட்டு குழந்தைக்கு வேண்டிய சத்து கர்ப்பத்திலேயே கிடைத்து விடும். இப்போ தான் எல்லா பொண்ணுங்களும் சுடிதார்ல இருக்குது . சூரிய வெளிச்சம் எங்கே வயித்தில படுது. அதான் பிறந்த பிறகு தனியா கவனிக்க வேண்டி இருக்குது"
என்றார்கள். 
அது காரணமாக இருக்குமா ? அப்படி என்றால் வட இந்திய பெண்களின் பொதுவான உடையே சுடிதாராக தானே இருக்கிறது. இருந்தாலும் பிறக்குமபோது மஞ்சள் நிலவாக இருந்த குழந்தை நாளாக நாளாக இயல்பான நிறத்துக்கு வரும் போது அவர்கள் சொல்வதும் சரிதானோ என்ற ஐயம் வரத் தான் செய்கிறது.