21 April, 2023
நாவலின் பெயர் : மலரும் சருகும்
ஆசிரியர் : டி. செல்வராஜ்
NCBH பதிப்பகம்.
விலை : ₹200
இவர் எழுதிய "தோல்" என்னும் நாவல் 2012 இல் சாகித்ய அகடமி விருது பெற்றது. தோல் பதனிடும் தொழிற்சாலையில் உழைப்பவர்களின் துன்பங்களைப் பற்றிய நாவல் .
"மலரும் சருகும் " நாவலின் முதல் பதிப்பு 1966 இல் வெளி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்கு முன். நல்ல வரவேற்பு இருப்பதால் இன்று வரை பதிப்பிக்கப்படுகிறது. இதை தலித் படைப்பிலக்கியத்துக்குள் கொண்டு வரவும் முடியவில்லை. நிராகரிக்கவும் முடியவில்லை என்கிறார் ஆசிரியர். அந்த காலத்தில் வலு மிகுந்தவர் வலுவற்றவர்களை எப்படி எல்லாம் ஏய்க்கிறார்கள் என்பதை கதை சொல்கிறது. ஏய்ப்பவர்களில் ஜாதி பாகுபாடு இல்லை. அதனால் ஆசிரியர் இப்படி சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.
அந்த கால கதையாதலால் ஜாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போல் தோன்றுகிறது. ஆனால் அன்று நடைமுறை அது தானே. ஒவ்வொரு பெயரோடும் அவரது ஜாதிப் பெயரும் இணைந்து வரும். அதனால் நம் மனதை அந்த காலத்தில் இறுத்தி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் நடக்கிம் நிகழ்வுகள் கண்டு மனம் கொந்தளிக்கும்.
" மறக்குடி வழியே பள்ளப்பய செருப்பைக் கழட்டாம போவானா" என்ற வரியில் வார்த்தைக்கு வார்த்தை அந்த காலத்தின் வன்மம் தெரிக்கிறது.
அதே போல ஒரு குடும்பத்துக்குள் திருமண காரியத்துக்காக மதம் மாறிய ஈசாக் , தன் தந்தை இன்னும் ஆதி மதத்தில் இருந்தாலும் , அவர் நம்பிக்கைகளை மதிப்பதை பார்க்கும் போது அந்த கால நாகரீகம் உயர்வாகத் தோன்றுகிறது.
மாடசாமிக் குடும்பன் தன்னைக் கடிந்து கொள்ளும் பேரனிடம் " மேல் குலத்தவங்களைக் கண்டதுமே என்னை அறியாமலேயே தலைத் துண்டு இடுப்புக்கு வந்திடுது கை இரண்டும் நெஞ்சிலே குவிஞ்சிடுது" என்கிறார். பேரன் மோசேயின் தைர்யத்தையும் தன்மான உணர்வையும் பார்த்து மாடசாமிக்கு பூரிப்பு பொங்குகிறது.
வேலாண்டி என்னும் ஆடு மேய்க்கும் சிறுவனை பாத்திமா பீவி தன் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்வதை படிக்கும் போது நாம் அன்று முதல் இன்று வரை பெண் குழந்தைகள் அளவுக்கு ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் இருக்கிறோமே என்னும் பதைப்பு ஏற்படுகிறது.
கிழவனின் நிலத்தை அடமானம் வைத்து கொடுத்த பணத்தில் வேலாண்டி மகன் நகரத்தில் வித விதமாய் விலையுயர்ந்த உடை வாங்கி உடுத்தி வசந்தி என்னும் பெண்ணை மயக்க முயல்வதை வாசிக்கும் போது இத்தகைய பொறுப்பற்ற பிள்ளைகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
ஊர்க்குடும்பன் வீட்டு விஷயம் ஒன்று பஞ்சாயத்துக்கு வருகிறது. அப்போது அவர் " என் வீட்டுக்குப் பெண் கொடுத்தவங்க விவகாரம். எம் பையனுக்கும் இதிலே பங்கு உண்டு. நான் தலையிட்டா குடும்பன் ஓரவஞ்சமா பேசுதாண்ணு பேர் வரும்" என்று சொல்லி ஒதுங்குகிறார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம் இது.
அடிமைப் பட்டுக்கிடந்த எளிய சமுதாயம் ஒன்றின் சில குருத்துகள் எதிர்ப்பு குரல் கொடுக்கின்றன. வெற்றி பெற்றதாக காட்டப்படவில்லை எனினும் இன்றைய பல மாற்றங்களுக்கு தொடக்க புள்ளி இவை தானே.
நம் நூலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு புத்தகம்.
16 April, 2023
புத்தகத்தின் பெயர் : மூன்றாம் பிறை. தமிழில் : கே வி சைலஜா .
இது மம்மூட்டி அவர்களின் வாழ்வு அனுபவம்.
வம்சி வெளியீடு .
விலை 130 ரூபாய்
கேரளாவில் வைக்கத்துக்கு பக்கத்தில், "செம்பு " என்ற கிராமத்தில் , இஸ்மாயில் , பாத்திமா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார் மம்முட்டி. சட்டக் கல்லூரியில் படித்தவர். மலையாளம்மலையாளம் , தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,ஆங்கிலம் (அம்பேத்கார் பற்றிய படம்) போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது முதல் படம் "வில்காணுண்டு சொப்பனங்கள்" . தமிழில் "கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது" இவர் சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் பலமுறையும் பெற்று இருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய "பத்மஸ்ரீ" பட்டம் பெற்றவர்.
தமிழ் படுத்திய கே.வி. ஷைலஜா கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். வம்சி புக்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்துகிறார். கணவர் பெயர் பவா செல்லதுரை. நாம் அனைவரும் அறிந்தவரே தான். மகன் வம்சி. மகள் மானசி.
முகமது குட்டி என்று மம்மூட்டிக்கு வைக்கப்பட்ட பெயர் மம்முட்டியாக மாறி இருக்கிறது . அவருக்கு அந்த பெயர் பிடிக்காததால் அதை மறைத்து ஒமர் ஷரீஃப் என்று கல்லூரியில் சொல்லியிருந்திருக்கிறார் . அதை ஒரு மாணவன் கண்டுபிடித்து விட, அவரை அனைவரும் மம்மூட்டி என்று அழைக்க தொடங்கி இருக்கிறார்கள் அதில் இருந்து அவர் மம்முட்டியானார். அவரது மூன்றாவது படத்தில் நடிக்கும் போது பி.ஜி. விஸ்வாம்பரன் என்பவர் இவர் பெயரை சுஷில் என்று மாற்றி அடைப்புக் குறிக்குள் மம்முட்டி என்று போட்டிருந்திருக்கிறார். ஆனால் அடைப்புக் குறிக்குள் இருந்த பெயரே நிலைத்து விட்டது.
ரொம்ப வெளிப்படையாக, பெண்களைப் பொருத்த வரை , மலையாளிகளின் மன நிலையை ஒத்துக் கொண்டு்ள்ளார். ஒரே மேடையில் அமிதாப் பச்சனோடு அமர்ந்திருந்த போது, அவர் வயதுக்கு ஏற்ப, பெண்களுக்கு எழுந்து மரியாதை செய்த போது தான் தன் மனநிலை இவருக்கு புரிந்திருக்கிறது. இதை நினைக்கும் போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு மேலிட தன்னைத் திருத்திக் கொள்ள முயல்வதாக வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார்.
ரதீஷ் என்ற நண்பனின் மரணம் பற்றி சொல்லும் போது "தவறுகளுக்குப் பிராயச் சித்தம் கேட்க ஒரு வாய்ப்பினைக் கூடத் தராமல் மரணம் ஏன் எங்கேயோ தாகத்துடன் காத்திருந்தது" என்று வருகிறது. நல்ல மொழி அழகு. இது மொழி பெயர்ப்பின் போது சேர்ந்த அழகா எனத் தெரியவில்லை. இப்படி ரசிக்கத் தக்க பல இடங்கள்.
அடுத்து புத்தகத்தின் தலைப்பான மூன்றாம் பிறை என்று ஒரு கட்டுரை. ஆசிரியர் ஷைலஜா தன் முன்னுரையில் சொல்லி இருக்கிறார் , இந்த தலைப்பை வைக்கும் முன் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் அனுமதி கேட்டதாகவும், அவர் அனுமதித்து "மூன்றாம் பிறையில் தான் நல்ல விஷயங்கள் செய்வார்கள். மூன்றாம் பிறை கண்ணுக்குத் தெரியாது சட்டென்று மறைந்துவிடும் . ஆனால் மிக முக்கியமானது" என்று சொன்னதாக எழுதி இருக்கிறார். இந்த கட்டுரை எனக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது . முதிய தம்பதியர் இடையே ஏற்பட்ட விவாகரத்து வழக்கு பற்றிய ஒரு கட்டுரை. மனதை நெகிழ வைத்தது. விவாகரத்து என்ற விஷயத்தில், சம்பந்தப்பட்டவர் தவிர மற்றவர்கள் எவ்வளவு அதிகம் பங்கு எடுக்கிறார்கள் என்பதை உணர் வைத்த கட்டுரை.
உயிர் காத்த ராணுவ வீரர் பற்றிய கட்டுரை ரட்சகன்.
வீட்டிலிருப்பவர்களுக்கு இனிமையான நினைவுகளாக மாற விருந்தினர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் "விருந்தினர்கள்" கட்டுரை.
வேலைப் பளுவைக் காரணம் சொல்லி வாக்களிக்காமல் இருந்து ஜனநாயகத்தை குறை சொல்வது கோழி முட்டையை நன்றாக அடை காத்து அன்னப்பறவை பொரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது என்று சொல்லும் "லஞ்சத்தின் வேர்" என்ற கட்டுரை.
இப்படி பல சுவாரஸ்யமான கட்டுரைகள் நிறைந்த புத்தகம்.
22 February, 2023
நாவலின் பெயர் : தளிர்
ஆசிரியர். : நஸீமா ரசாக்
மெட்ராஸ் பேப்பர் பதிப்பகம்.
விலை : ரூ 310/-
ஆசிரியரின் உலகம் குழந்தைகளால் சூழப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு படிப்பும் சத்தான ஆரோக்கியமான உணவும் கொடுப்பது போலவே உணர்வுகளும் எண்ணங்களும் செழுமையாக ஆக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்த புத்தகம் குழந்தைகளின் உலகுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும் என்று நம்புவதாக சொல்கிறார் . அழைத்துச் செல்கிறது.
கதை தொடங்கும் போது துபாயின் சான்ட் சின்றோமோடு தொடங்குகிறது. அதை ராஜஸ்தானில் அனுபவித்தவள் என்ற வகையில் ஆரம்பமே என்னை விறுவிறுப்பாக உட்கிரகித்துக் கொண்டது.
அங்கே வார விடுமுறை வெள்ளி . அன்று கூலி வேலைக்கு நாடு விட்டு நாடு வந்திருக்கும் பலரும் சில இடங்களில் கூடுவார்கள் . காசு செலவு செய்து வேறு எங்கும் செல்ல முடியாததால் பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் புல்வெளிகளில், சாலைகளுக்கு நடுவில் இருக்கும் புல்வெளிகளில் நிறைந்து விடுவார்கள் என்கிறார். தன் குடும்பம் முன்னேற தம் வாழ்வை பலியாக்கும் ஒரு குழு நம் கண் முன் வருகிறது.
பல நாடுகளிலும் இருக்கும் கல்லூரி தோழிகள் ஸ்கைப்பில் இணைந்து பேசுகிறார்கள். தங்கள் குழந்தைகளோடு அவர்கள் சந்திக்கும் முரண்பாடுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நல்ல ஐடியாவாக தோன்றுகிறது கல்லூரி தோழிகளிடம் நம் பிள்ளைகளின் குறைகளைப் பற்றி பேசுவதில் ஈகோ இருக்காது .
பர்வீன் கதையின் நாயகி அவள் வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து, தனது தோழிகளுடன் தொடர்பில் இருந்து, இளம் குழந்தைகளுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கிறார் ஒவ்வொரு பெண்ணும் நாம் பர்வீன் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கதாபாத்திரம் .
குளிர் மாதங்களில் அமீரகம் நோக்கி புலம் பெயர்ந்து வரும் பறவைகள் பற்றிய விவரிப்பு வரும்போது நமக்கும் ஒரு சரணாலயத்தில் இருக்கும் உணர்வு வருகிறது. கடலில் குளிப்பதில் இருக்கும் புத்துணர்ச்சி பாலைவன மணலிலும் இருக்கிறது என்கிறார்கள் .
"சில நேரங்களில் பெற்றோர்களின் தவிப்பு கடுமையான கண்காணிப்பாக மாறும் போது அது பிள்ளைகளுக்கு வேதனையை தந்து விடுகிறது" உண்மைதான் சமூக வலைதளங்களில் குழந்தைகளை சூறையாடும் கயவர்களும் இருப்பதால் இது அவசியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்
கதையில் 124 வது மாடியில் இருப்பதாக வந்தது இத்தனை உயரம் ஆடிகள் எப்படி கட்டுறாங்க என்ற ஆச்சரியமும் துருக்கியில் நடந்த நிகழ்ச்சியின் ஞாபகமும் ஒருசேர எழுந்தது அந்தக் கட்டடத்தில் மொத்தம் 142 மாடிகள் என்கிறார் .
கதை முடியும் வரை நம்மையும் துபாயிலேயே இருத்தி வைத்துக் கொள்கிறார் ஆசிரியர். தாய்மை ததும்பும் கதை வாசிப்பதற்கு இதமாகத் தான் இருக்கிறது.
07 February, 2023
புத்தகத்தின் பெயர் : ஐந்து நெருப்பு
ஆசிரியர் : ஜெய மோகன்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்.
விலை : ரூ 280/-
ஆசிரியர் தனது பன்னிரண்டாவது வயதில் இருந்து எழுதி வருகிறார். இவர் எழுதிய “ரப்பர்” என்னும் நாவல் அமரர் அகிலன் விருது பெற்றது. இன்னும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் நூறாண்டு நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் இலக்கிய முயற்சி என்று பாராட்டப் பட்டது. மஹாபாரதத்தை “வெண்முரசு” என்ற பெயரில் உலகின் பெரிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக எழுதி இருக்கிறார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இது ஒரு சிறு கதைத் தொகுப்பு. இதைப் பற்றி ஆசிரியரே சொல்வது. “ தன்னை சமூக உறுப்பினன் என்று உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னைத் தனி மனிதனாக உணர்கிறது. தன் நலத்தை தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறி செல்கிறது. அவ்வண்ணம் மீறிச் செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திய நிறைவு அது. குற்றத்தின் தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை”
மொத்தம் பத்து சிறுகதைகளின் தொகுப்பு. இதில் தலைப்புக்குரிய “ஐந்து நெருப்பு என்னும் கதையை வாசிக்கும் போது கண்ணுக்கு முன் பார்ப்பது போலவே இருந்தது. பொதுவாகவே சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் கண் முன் நிகழ்வது போலவே இருக்கும். ஆனால் இதில் இன்னும் சிறப்பு ஏதோ தெரிகிறதே என்று பார்த்தால் இந்த கதையை அடிப்படையாக வைத்துத் தான் சிம்பு நடித்த “ வெந்து தணிந்தது காடு” என்னும் படத்தை எடுத்திருக்கிறார்கள். அந்த திரைப்படத்தின் திரைக்கதை ஜெயமோகன் அவர்கள் தான். அதில் எரியும் முள்ளுக் காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் இளைஞன் வீட்டுக்கு வந்து படுக்க முடியாமல் தவிக்கும் போது அவன் தங்கை ஒவ்வொரு முள்ளாக எடுத்து மஞ்சள் தடவும் போது கண்ணீர் வரும்.
அத்தனை கதைகளிலும் காவல்காரர்களின் பங்கு உண்டு. “பிறசண்டு” என்னு,ம் முதல் கதையில் வயதானவர் ஒருவர் இரவில் எழுந்து வரும் போது உள்ளே மாடிப்படியில் அமர்ந்திருக்கும் திருடன் அவர் வீட்டு மனிதர் என்று நினைத்து கேட்கும் கேள்விக்கும் அமைதியாக பதில் சொல்வதும் பின் மாட்டிக் கொண்ட பிறகு காவல் நிலையத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கு,ம் சம்பாஷணையும் நகைச்சுவை நிறைந்தது.
சுக்ரன் என்னும் கதையில் “ அழகப்பன் ஜெயிலு விட்டு வந்ததுமே டிபி வந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலே செத்தான். அப்பல்லாம் ஜெயிலுக்கு போனாலே டிபி வந்திரும்” என்று வருகிறது. இன்று அது மாறி இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் ரசித்தது. பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் மனிதர்களின் பெயர்களையும் நினைவு வைத்து காவல் அதிகாரிகளுக்கு குற்றவாளிகளை பிடிக்க உதவும் ஒரு முதிய ஓய்வு பெற்ற காவலர் சொல்வது” பேருகளை ஒரு தடவைக்கு பத்து தடவை சொல்லிக்கிடுவேன். அப்டியே மனசிலே பதிஞ்சிரும். நான் இதெல்லாம் பெயரா நினைச்சுக்கிடுறதில்லை. அப்டியே முகங்களா உயிருள்ள ஆட்களா, நான் நேரிலே பழகினவங்களா நினைச்சுக்கிடுவேன்” ஒரு கதையை வாசிக்கும் போது கூட தொடக்கத்தில் வரும் பெயர்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு நாம் சந்தித்த நபரோடு தொடர்பு படுத்தி கொண்டால் கதையோடு ஒன்ற உதவும்..
இழை என்றொரு கதை. சர்க்கஸில் பணி புரிபவர்களைக் களமாகக் கொண்ட கதை. சஸ்பென்ஸ் கடைசி வரை அழகாக நகர்த்தப் பட்டு இருக்கிறது.
விருந்து என்ற கதையில் தூக்குத் தண்டனைக் கைதி சாமிநாத ஆசாரியிடம் அவர் சாகு முன் நாமும் ரெண்டு வார்த்தை பேசி விட வேண்டும என்ற ஆசை எழுவதை தவிர்க்க முடியாது.
ஏழாம் கடல் என்ற கதையில் பிள்ளைவாளுக்கும் வியாகப்பனுக்கும் உள்ள நட்பு வித்தியாசமானது. ஆனால் கதை முடிவின் காரணம் விளங்கவில்லை. பிள்ளைவாள் கிடைத்த முத்தை பற்றிய விஷயத்தை ஏன் நண்பனிடம் சொல்லவே இல்லை.
இது தவிர “ ஏழாவது” “அறமென்ப”” “கூர்” “ பேசாதவர்கள்” என நான்கு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதமான கதைக்கரு. ஆசிரியரிடம் ஆயிரமாயிரம் கதைக் கருக்கள் இருக்குமென்று தோன்றுகிறது.
03 February, 2023
“ராங்கி” என்றொரு தமிழ்படம் நெட்ப்ளிக்ஸில் பார்த்தேன். படத்தின் ஹீரோ த்ரிஷா. ஆம் படத்தின் முக்கிய கதாபாத்திரம் த்ரிஷா தான். ஏ.ஆர்.முருகதாஸின் கதைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் : M. சரவணன். சோஷியல் மீடியாவின் ஆபத்தை அப்பட்டமாக சொல்லும் படம். ஆனால் சோஷியல் மீடியாவில் இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் ஆபத்தை சொல்லும் படம்.
ஆன்லைன் மீடியாவில் ரிப்போர்ட்டராக பணி புரியும் தையல் நாயகி.யாக த்ரிஷா கலக்கி இருக்கிறார். அவள் அண்ணன் மகள் சுஷ்மிதா பள்ளி மாணவி. அவளுக்கு முக நூல் கணக்கு கிடையாது. ஆனால் அவள் உடன் படிக்கும் மாணவி தான் அழகாக இல்லாததால் தனக்கு நண்பர்கள் அதிகம் முக நூலில் இல்லை என சுஷ்மிதாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி ஒரு கணக்கு தொடங்கி தன்னுடன் சாட் செய்பவர்களுடன் அத்து மீறி நடந்து கொள்கிறாள். சாட் செய்யும் நண்பர்களில் ஒருவன் அவளுடைய ஆடை இல்லா முகம் இல்லா படத்தை அவள் தந்தைக்கு அனுப்ப தனது மகள் படம் என்ற அச்சத்தில் அந்த விபரீத விஷயம் த்ரிஷா வுக்கு தெரிவிக்கப் படுகிறது. அந்த காரியத்தை மிகவும் துணிச்சலாக கையாள்கிறார் தையல் நாயகி. ஒரு நிலையில் “ நான் லோக்கல்ல ஒரு பிரச்னையை உன்னிடம் கொண்டு வந்தால் அதை இன் டர்நேஷனல் பிரச்னையாக்கி விட்டாயே என்று அண்ணன் ஆதங்கப் படுகிறார்.
முக நூலின் ஆபத்தை மிக அழுத்தமாகவும் அதிலும் முக்கியமாக பெண்கள் எத்தகைய மன தைரியத்துடன் கையாள வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். பெண்களின் பிரச்னையையும் உலக அரசியலையும் அழகாக கொண்டு இணைத்திருக்கிறார்கள்.
வித்தியாசமான முயற்சி. த்ரிஷா கதா நாயகி. கதாநாயகன் படத்தில் இல்லை. இடையிடையே இப்படிப் பட்ட துணிச்சலான முயற்சியும் தேவையாகத் தான் இருக்கிறது. த்ரிஷா நடிப்பில் முதிர்ச்சியும் சண்டைக் காட்சிகளில் சுறுசுறுப்பையும் காட்டி இருக்கிறார். வறண்ட பாலைவனத்தில் தீவிரவாதக் கும்பலோடு இருக்கும் ஆலிம் மனத்தில் முகிழ்க்கும் மென் காதலும் அது அவனுக்கு கொடுக்கும் பரவசமும் அழகாக காட்டப் பட்டு இருக்கிறது.
பெண்களை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தும் நியாயமற்ற முறை மாற வேண்டும். அதற்கு இது போல் பல படங்கள் வர வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)

