Bio Data !!

16 June, 2025

# தகப்பன் சாமி சிவப்பு ரெட், மேல் டாப் ல ஒரு சொற்றொடர். தகப்பனே சாமி தானே. எனக்கு எங்க அப்பாவை நினைச்சாலே பல எண்ணங்கள் குதித்துக் கொண்டி கிளம்பும். அப்போ நான் பதினொன்று படித்துக் கொண்டு இருக்கிறேன். அது தான் பள்ளி இறுதி ஆண்டு. இப்போ மாதிரி +2 இல்லை. எங்களுக்கு ஆறு பாடங்கள். தமிழ், ஆங்கிலம் , கணக்கு, அறிவியல் , சரித்திரம் & பூகோளம், எலக்டிவ் ( எனக்கு அதுவும் கணக்கு) என் வகுப்பு ஆசிரியை பிச்சம்மாள் மிஸ் எங்க அம்மவோட நெருங்கிய தோழி. வந்து எங்க அப்பாட்ட கேட்கிறாங்க." ASPP (assistant school pupil leader) தமிழ் மீடியத்துல எடுப்பாங்க. ரூஃபியை போடச் சொல்லலாம்னு நினைக்கிறேன். நல்லா சுறுசுறுப்பா இருக்குறா". அது வரை பள்ளியில் என்னை தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாத ஒருவர். என்னைப் புகழ்ந்து சொல்லவும் எனக்கு தலை கால் புரியல. உடனே எங்க அப்பா" வேணாங்க. படிப்பு டைவர்ட் ஆகிடும். அதை உட்கார்ந்து படிக்க வைக்கிறதே கஷ்டம்" என்று என் ஆசை பலூனை புஸ்ஸாக்கி விட்டார்கள். " நல்ல மூளை இருக்குது. உட்கார்ந்து படிக்க மாட்டேங்குதே" இது தான் அவங்க கவலையா இருக்கும். தேர்வு தொடங்கியது . ஆறு பாடங்களோடு தமிழ் ஆங்கிலம் இரண்டும் இரண்டு பேப்பர்களாக மொத்தம் எட்டு. பாதிக் கிணறு தாண்டி இருக்கிறேன். படிச்சு ( நாம படிக்கிற லட்சணத்துக்கு) உடம்பு சூடாகும்னு மாலையிலும் ஒரு தரம் குளிக்க சொல்வாங்க. குளிக்கும் போது காலில் தொடை பக்கமாக ஒரு நீர்க்கொப்பளம். எதுக்கும் அம்மாவிடம் சொல்லிடுவோம்னு கூப்பிட அவங்க பார்த்தால் வேறு ஒன்றிரண்டு இடங்களிலும். பதறிய படி அப்பாவிடம் சென்று " அம்மன் போட்டிருக்கிற மாதிரி இருக்குது என்று சொல்ல. அவரும் பார்த்து உறுதி செய்தார்கள். எனக்கு அதன் பாரம் புரியவில்லை. அம்மாவும் அப்பாவும் ஆடிப் போயிட்டாங்க. உடனே பிச்சம்மா மிஸ்ஸோட கலந்து ஆலோசிக்கிறாங்க. " அவள் எழுதிடுவான்னா பெர்மிஷன் வாங்கிடலாம்" னாங்க. எங்க அம்மாவும். உயர் பள்ளி ஆசிரியை தான். நான் தேர்வெழுதும் பள்ளியில் அவர்கள் தேர்வு சூப்பர்வைசர் வேறு ஒரு அறையில். ஒரு வருடம் வீண் செய்வதா? தோற்று விட்டால் என்ன செய்வது? பல யோசனைக்குப் பின் என்னிடம் கேட்டார்கள். நமக்கு எல்லாமே விளையாட்டுத் தானே. அதெல்லாம் எழுதிடுவேன்னு சொல்லிட்டேன். மறு நாள் உடம்பெல்லாம் கொப்பளம் போட்டுட்டுது. கண் இமைகளின் மேல் கூட. கண்ணிலிருந்து தண்ணீரா வடியுது. உடம்பு பலவீனமா இருக்குது. எழுத எழுத கை தளறுது. எனக்கு இடம் வாசலுக்கு அருகில் என்பதால் அது வரை காரில் கூட்டிப் போய் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் உட்கார வைத்து விட்டார்கள். என. கண் பார்வையில் படும் படி அப்பா . நான் சோர்ந்து தலை சாய்க்கும் போது கொண்டு வந்த ஹார்லிக்ஸ்சை ஆசிரியரிடம் கொடுத்து அனுப்பி குடிக்கச் சொல்வார்கள். பாடங்களை நான் படிக்க முடியாததால் அப்பாவும் அம்மாவும் மாடியில் இருந்த என்னருகே வந்து வாசிப்பார்கள். கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த நாளிலேயே படுத்துக் கொண்டே ஜெயித்தவள் நான். 😀. உன் முன் தைர்யமா இருந்து கீழே போய் அப்பா அழுவாங்கன்னு பின்னாளில் அம்மா சொல்வாங்க. அப்போ ரிசல்ட் மார்க் எல்லாம் வர நாளாகும். மார்க் வந்ததும் எங்க அப்பா என்னைத் தூக்கி ஒரு சுற்று சுற்றினாங்க. கணக்கில் 100/100. ஆங்கிலத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண். மொத்த மார்க் 486/600 . 81% அதன் பிறகு B Sc., B. ed., என படித்தாலும் அந்த பள்ளி மதிப்பெண்ணின் அடிப்படையில் கிடைத்த வேலை தான் தொலைத் தொடர்பு. 81% + 10% (டிகிரி முடித்ததற்காக) . வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் வந்தேன். ஒருவர் கிடைத்த வேலையில் சேராததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பின் அரசுத் தேர்வு எழுதி அதிகாரியும் ஆனேன். அந்த உயர்வைப் பார்க்க தகப்பன் சாமிக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை.

14 June, 2025

# ST. Thomas Mount

4 ஆம் நாள் பதிவாக இருந்தாலும் போனது முதல் நாளில். உறவினர் வீட்டுத் திருமணம் சென்னையில் ST. Thomas Mount இல். அவர்கள் CSI. அந்த சர்ச் மலை அடிவாரத்திலிருக்கிறது. மலை மேல் RC Church. நான் ஒரு வருடம் சென்னையில் டிரெயினிங்கில் இருக்கும் போது போயிருக்கிறேன். படி வழியாக ஏறி. இடம் கொஞ்சம் ஒதுக்குப் புறமாய் இருப்பதால் அங்கங்கே காதல் ஜோடிகள். இப்போ காலச் சூழ்நிலையால் கூடியிருக்கலாம். இல்லை மக்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால் குறைந்திருக்கலாம். தெரியவில்லை. நாங்கள் காரிலேயே மலை முகடு வரை சென்று விட்டதால் ஒரு பதினைந்து படிகள் மட்டும் ஏற வேண்டி இருந்தது. கடந்த மாதம் தான் பஸிலிக்காவாக (திருத்தலமாக ) போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்ச் இடித்துக் கட்டும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. மேலிருந்து நகரமும் வானூர்தி நிலையமும் பார்க்க கொள்ளை அழகாய் இருக்கும். அதுவும் இரவு நேரத்தில். மூன்று நிமிட வீடியோ என் chellanaikutti youtube channel இல் இணைத்திருக்கிறேன் பாருங்கள். அடுத்து ரிசப்ஷன் AVM Gardens vada palani. உள்ளே போகும் போதே மேலே உள்ள உலக உருண்டை என் பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் சென்றது. அப்பா தெரிந்தவர் மூலம் ஷூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்கள். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டிங் அலங்காரம் மட்டும். மஞ்சுளாவோடு படிகளில் ஏறி நடனம் ஆடுவார். அந்த இடம். இன்னொன்று ஜெய்சங்கர் நடித்த நூற்றுக்கு நூறு. அது ஷூட்டிங் பார்த்தோம். சலித்தோம். ஒரு வசனத்தை எத்தனை முறை ரீடேக். அப்பப்பா!! இப்பொழுது முன் பாதியில் காவேரி மருத்துவமனை இயங்குகிறது. பின் பாதியில் தான் பஃபே. நல்ல வேளையாக மழை இல்லை. புனித தேற்றரவு அன்னை ஆலயம் என்று ஒன்று காரைக்காலில் இருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பழமையான சர்ச். இந்த ஆலயத்தின் பெயர் அதிகம் கேள்விப்படாதது. 1739 இல் ஒரு சின்ன ஆலயமாக தொடங்கி இருக்கிறது. காரைக்காலில் லகட் ஹவுஸ், படகுத்துறை, பீச் என்று நேரம் கழிக்க இடங்கள் உள்ளன. வண்ணமடித்த படகுகள் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது வானவில் இறங்கி வந்து கடலில் நீந்துவது போல் இருந்தது. அழகை ரசிப்பவர்கள் தூசியும் துரும்பும் கூட அழகு தான். ஐந்தாம் பதிவு நான் ராஜஸ்தானில் பயணித்த போது நடந்த திடுக்கிடும் நிகழ்வை சொல்லி நிறைவு செய்கிறேன்

13 June, 2025

விமான விபத்து 12.6.2025

(அகமதாபாதிலிருந்து லண்டனுக்கு மதியம் 1.38 க்கு கிளம்பியது ஏர் இந்தியா விமானம். நான்கு நிமிடங்களுக்குள் எரிந்து கீழே விழுந்தது. அவசர வழி வழியாக குதித்துத் தப்பிய ஒருவரைத் தவிர 241 பேரும் மரணம். 😭) # விமான விபத்து.( 12.6. 2025) எல்லா பறவையும் சிறகை விரிப்பதைப் போலத் தானே நானும் விரித்தேன். சிறுவர்கள் கற்பனையில் கார் ஓட்டுவதைப் போலத் தானே உற்சாகமாய் மேலெழும்பினேன். ஒரு தாய் தன் கருவில் தாங்குவதைப் போலத்தானே அத்தனை பேரையும் கரை சேர்க்க நினைத்தேன். சில ஆண்டுகள் தனிமையில் வாடிய என் மகன் சந்தோஷமாய் தன் மனைவியோடும் மூன்று குழந்தைகளோடும் ஏறினானே. உலகத்திலிருந்தே விடை பெறப் போவதை அறியாத இரண்டு செல்வங்கள் "குட் பை இந்தியா" என உற்சாகமாய் விடை கொடுத்து ஏறினார்களே!! எல்லா நிலை மாற்றியும் இயங்க மறுக்கிறதே என சலிப்போடே தன் பயணத்தை தொடங்கினானே ஒருவன். உழைப்பாளர் தினமாக உற்சாகமாக இருந்தது போய் "மே தின அழைப்பு" அலமந்து போய் கொடுத்தானே என் செல்வம். என்னோடிருந்தவர்கள் மட்டுமின்றி "சிவனே" ன்னு நின்றவர்களையும் அல்லவா காவு கொடுத்து விட்டேன். மறைந்தவர்களின் குடும்பத்து உறவுகள் எப்படி மீளப் போகிறார்கள் இருந்தும் செத்தவர்கள் அல்லவா அவர்கள். ***( SOS னு அவசரத் தேவையில் இருப்பவர்கள் குரல் கொடுப்பதை அறித்திருக்கிறோம். "மே டே கால்" என்று ஒரு அறிவிப்பு இருக்கிறதாம். வேற வழியில்லை. நாங்கள் சாகப் போகிறோம் என விமான ஓட்டி அறிவிக்கும் அறிவிப்பாம் அது. அதைக் கொடுத்திருக்கிறார் விமான ஓட்டி. உற்சாகமாக புறப்பட்ட சில நொடிகளுக்குள் விமானத்தின் பழுது புலப்பட்ட அந்த நரக நொடி எப்படி இருந்திருக்கும்.) *** (விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் அங்கே இருந்த சிலரும் மரணம்)

11 June, 2025

# ரயில் பயணங்களில் இந்த தலைப்பு என்னை நாற்பதாண்டுகளுக்கு முன் கொண்டு விட்டுத் திரும்பியது. அப்போ எனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்து, என் கணவர் வேலைக்குச் சென்று, இரண்டாவது குழந்தையும் வயிற்றில். அம்மா இன்னும் என் கணவருடன் சுமுகமாகவில்லை. அப்போ நாகரகோவிலில் நான் இருந்தால் வயிற்றில் குழந்தையுடன் முதல் குழந்தையைப் பார்ப்பது படினம் என்பதால் பாளையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கணவர் கேரளாவில் இருந்து வரும் போது மட்டும் அங்கே போவேன். மற்ற நேரங்களில் அம்மா வீட்டில் இருப்பேன். அங்கிருந்து நாகர்கோயிலுக்கு தினம் ரயிலில் பயணம். பல இடங்களிலிம் பணி புரிபவர்கள் ஒன்றாக வந்து சேர்வார்கள். ஒரே பெட்டியில் ஏறி விடுவோம். அமர்க்களம் தான். நான் மட்டும் தான் திருமணமாகி வயிற்றில் குழந்தையோடு. ரொம்ப நல்லா கவனிச்சுக்குவாங்க. என் பெண் பிறந்தது ஜனவரி 19. அக்டோபர் 31 ஒரு முக்கியமான தினம் . ஆம் அன்னை இந்திராவை சுட்டுக் கொன்று விட்டார்கள். ஒரே பரபரப்பு. மாலை ரயில் ஓடுமோ என மதியமே எல்லோரும் கிளம்பி ஸ்டேஷன் வந்திடுங்கன்னு சொல்லிட்டாங்க. நான் ஆட்டோவில் போகிறேன். அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் அரை மணி நேரம் பயணம். ஆட்டோவை கலகக்காரர்கள் வழி மறிக்கிறார்கள். புள்ளத்தாச்சின்னு சொன்னபடியேஆட்டோக்காரர் பத்திரமா கொண்டு ரயில் சேர்க்கிறார் நெல்லை சென்று சேர்ந்து விட்டோம். பஸ் எல்லாம் நிறுத்தி விட்டார்கள். மறு நாள் நவம்பர் 1 நாகர கோயிலுக் கு முதன் முதலாக ரயில் விட்ட தினம். கொண்டாடுவதற்காக தோவாளை என்னும் இடத்தில் பூ கேட்டிருந்தோம். அவர்கள் கொடுத்து விட்ட பூக்குவியலை அப்படியே கூடையோடு பஸ் ஸ்டான்டில் வைத்து விட்டு நடக கத் தொடங்கினோம். அங்கிருந்து எங்க வீட்டுக்கு அரை மணி நேரம் நடக்கணும். முத்து என்றொரு நண்பர் வங்கி ஊழியர் உடன் வந்தார். வீட்டில் எங்க அம்மாவிடம் என்னை ஒப்புவித்து "இப்போ தான் அப்பாடான்னு இருக்குது" என்றபடி வீட்டிற குச் சென்றார். மறக்க முடியாத ரயில் நட்புகள்

10 June, 2025

Su sheela Sujeeth மராத்தி படம்

Su sheela su jeeth இயக்குநர் : இரண்டு மராத்தி பிலிம்ஃபேர் விருதுகளும், ஒரு தேசிய விருதும் பெற்ற பிரசாத் ஓக். முக்கிய கதாபாத்திரங்கள் : சோனாலி குல்கர்னி, ஸ்வப்னில் ஜோஷி, ராஜேந்திர ஷிசத்கர். பாடல்களும், படப்பிடிப்பும் அருமை. இது ப்ரைமில் உள்ள ஒரு மராத்திப் படம். மலையாளப் படங்களைப் போலவே மராத்தியிலும் நுணுக்கமான பிரச்னைகளை கையாண்டு , மிக ஆழமாக, அழகாக ஆராய்ந்து படம் எடுப்பார்கள். இதுவும் அத்தகைய ஒரு படம் தான். சந்தேக புருஷன். அவன் சந்தேகத்துக்கு ஒரு காரணம் இருக்கிறது. மனைவி திருமணத்துக்கு முன் ஒருவரைக் காதலித்தது கணவனுக்குத் தெரியும். வேலைக்கு கிளம்பும் நேரம் பாத்ரூம் பைப்பை சரி செய்ய வருபவர் மனைவியின் பழைய காதலனைப் போலவே இருப்பதால் இவர்கள் இருவரும் தனிமையில் என்ன செய்வார்கள் என்ற கணவனின் கற்பனையில் திரைப்படத்தில் சில காட்சிகளைப் புகுத்தி ஒரு டாக்குமென்ட்டரி மன நிலைக்கு நாம் போய் விடாமல் காக்கிறார்கள். நகைச்சுவைக்கும் வழி வகுக்கிறார்கள். இன்றைய பல வீடுகளில் ஆட்டோமாடிக் கதவு இருக்கிறது. அதனாலேயே அவசரத்துக்கு, அதாவது திறவுகோல் உள்ளே இருக்கும் போது கதவு மூடி விட்டால் திறப்பதற்கு நண்பர்கள் வீடுகளில் மாற்று திறவுகோல் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் வீட்டிலோ பாத்ரூமின் கதவு இவர்கள் இருவரும் உள்ளே இருக்கும் போது ஆட்டோமாடிக்காக மூடி விடுகிறது. பக்கத்தில் யாரையும் உதவிக்கு அழைத்து விட முடியாத படி 15 (அ) 20 மாடிகள் உள்ள உயரமான கட்டடம். பிரச்னைகளை ஆழமாக ஆராய்ந்து எடுப்பார்கள் என்று சொன்னது சரியாப் போச்சுதா? ஒரு பிரச்னையை மையக் கருவாக வைத்துக் கொண்டு நிகழ்வுகளை அதைச் சுற்றி நகைச்சுவை கலந்து பின்னியும் இறுதியில் தொடர்பு கொள்ளுதல் ( communication) என்பது எவ்வளவு முக்கியமானது என்ற மிக அழகான வாழ்க்கைப் பாடத்தையும் சொல்லி முடித்திருக்கிறார்கள். படங்களுக்கு பெயர் வைக்கும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கரை காட்டலாமோ எனத் தோன்றுகிறது. பாருங்கள். பலர் ரசிக்கலாம். ஒரு சிலர் திருந்தக் கூடச் செய்யலாம்.