Bio Data !!

30 August, 2021

 தனிமை


முதியவர்க்கு மட்டுமல்ல தனிமை


பெரும்படை கொண்டு முன்னேறும் முரட்டு பெருவேந்தனுக்கு தன் பாதிப்படை அழியும் போது கிளம்பும் ஒரு தனிமை.

அப்பப்பா அம்மம்மா பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி என கூட்டுக் குடும்பமாய் வாழுமிடத்தில் ஒரு குடும்பம் தனித்துப் போனாலும் கிளம்பும் ஒரு தனிமை.

தனிக்குடும்பமாகவே இருந்தாலும் ஒரு பெண் பிள்ளை திருமணமாகிப் போனதும் கிளம்பும் ஒரு தனிமை.

திருமணமான பெண் பிரசவத்துக்கு வந்து திரும்பும் போது பேரப் பிள்ளைகளின் அழு குரல் நின்று கிளம்பும் ஒரு தனிமை.

பிள்ளைப் பிராய பள்ளித்  தோழி ஒருத்தி தந்தையின் வேலை மாற்றத்தால் பிரிந்து போனால் கிளம்பும் ஒரு தனிமை.

இறுதி வரை துணையிருப்பேன் என்று கரம் பிடித்த கணவனோ மனைவியோ நடு வழியில் தவிக்க விட்டு பிரிந்து போனாலோ , இறந்து பிரிந்தாலோ கிளம்பும் ஒரு தனிமை. 

இவ்வளவுக்கும் பின் தான் பெற்ற பிள்ளைகள் வரவேயில்லையே என முதுமையில் கிளம்பும் ஒரு தனிமை.

ஆனால் நாம் முதுமையின் தனிமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து துவண்டு போகிறோம். 

துவண்டு போகும் நேரத்தில் நம்மை தூக்கி விடவே ஆன்மீகம். நான் மேலே சொன்ன  தனிமையில் வாடும் வகையினருக்கு நாம் துணையிருப்போம். மீண்டு வர கரம் கொடுப்போம்.

25 August, 2021

 "வாருங்கள் படிப்போம்" என்னும் குழுவில் நேற்று பவா செல்லத்துரை அவர்களுடன் ஒரு ஸூம் மீட்டிங் நடத்தினார்கள். எனது மாலை இத்தகைய நிகழ்வுகளால் மணம் பெறுகிறது. 


பவா செல்லத்துரை கதை சொல்லியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர். அவர் எழுத்தாளர், கதைசொல்லி, நடிகர் என பல வேடங்களை ஏற்பவர். அவர் சொன்னது "எந்த கலை வடிவமும் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தால் நீர்த்துப் போகும். எந்த art form ம் உச்சத்தில் இருக்கும் போது நிறுத்தி விட வேண்டும்" என்றார். 

40 வருடங்களாக தொடர் வாசிப்பில் இருப்பதாக சொன்னார்.அனேகமாக ஜெயகாந்தனின் எல்லா கதைகளையும் வாசித்திருப்பதாக சொன்னார். 

தான் எத்தனை கதைகளை சொல்லி இருந்தாலும் ஒரு சிலரது கதைகளை சொல்ல முடிந்ததில்லை என்றார். உதாரணமாக லா.ச.ரா, நகுலன், மௌனி போன்றவர்கள். ஜெயமோகன், பிரபஞ்சன், ஜெயகாந்தன் போன்றவர்களுடைய கதைகள் சொல்வதற்கு எளிதானது என்றார். 

நிகழ்ச்சி நடத்தியவர் கதையின் முடிவையும் சொல்லி விடுகிறீர்களே வாசிப்பவர்களின் ஆர்வத்தை குறைத்து விடாதா என்று கேட்டார். ஒவ்வொருவருடைய வாசிப்பும் தனித்துவமானது.  கதை சொல்வதை கேட்பது ஆர்வத்தைக் குறைக்காது என்றார். இதில் எனது எண்ணம் துப்பறியும் கதைகள் போன்றவை தான் முடிவைத் தெரிந்து கொண்டால்  ஆர்வத்தை குறைக்கலாம். ஆனால் அது கூட என்னைப் போன்றவர்கள் முடிவைத் தெரிந்து கதை வாசிக்கும் போது எழுத்தாளன் அந்த முடிவுக்கு கதையை எவ்வளவு அழகாக நகர்த்தி செல்கிறார் என்று ரசிப்போம். 

ஒவ்வொரு கதை ஒவ்வொருவரோடு நெருக்கமாக கனெக்ட் ஆகும். உதாரணமாக ஒரு தந்தையை இழந்தவர் ஒரு கதையில் தந்தையின் இழப்பு வரும் இடத்தில் ஒன்றிப் போவார். மற்றவர்கள் எளிதாக கடந்து போவார்கள். பவா தன் தலை மகனை மூன்றரை வயதில் விபத்தில் பலி கொடுத்திருக்கிறார். இவர் சொல்லும் ஒரு கதையில் இதை ஒத்த ஒரு நிகழ்வு வந்த போது கதை கேட்டுக் கொண்டிருந்த  இவர் மனைவி கேட்க முடியாமல் அழுது கொண்டே அந்த இடத்தை விட்டுப் போனதாக சொன்னார். தாய் மனம் அல்லவா? 

நான் நோ சொல்லத் தெரியாதவன் என்கிறார். "நான் வாசகர்களோடு இருக்கும் போது மீனின் துள்ளலை உணர்கிறேன். இது நீரிலிருந்து கரையில் எடுத்து விட்ட மீனின் துள்ளல் அல்ல. நீருக்குள் இருந்து உல்லாசமாக உயரே எழுந்து நீருக்குள் வீழும் மீனின் துள்ளல். கடவுளின் கைகளில் இருப்பது போல் உணர்கிறேன்" என்றார்

எழுதுபவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். "பயணம் என்பது வெளி நாட்டுப் பயணம் அல்ல. உங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் தங்கி இரவில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி வானத்து அழகை ரசிக்கும் அனுபவத்தை உணருங்கள்" என்றார். ஆனால் பெண்களுக்கான் பயணம் துயரமானது. துணை வேண்டும். அனுமதி வேண்டும். "தனிமையில் பயணிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்யவான்கள் "  என்றார். எனக்குத் தோன்றியது ஒத்த மனமுடையவர்களுடன் ஒத்த ரசனையுடையவர்களுடன் செய்யும் பயணம் பாக்கியமானது. 

நம் பிள்ளைகள் நம் வாழ்வின் நீட்சியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்களை தனித்துவமாக வளர விடுங்கள் என்றார். இவர் கதை சொல்லி ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. மீண்டும் கதை சொல்லத் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.

30 July, 2021


#இது ஒரு நீண்ட பதிவு. கண்டிப்பா வாசிங்க. ஒரு மன நிறைவும் தைரியமும் கிடைக்கும். நான் Guarantee.

 *********

நான் எனக்கு அறிமுகமாகும் அருமையான மனிதர்களை உங்களுக்கும் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறேன். படத்தில் இருப்பவர் எனது தோழி. கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் Hello FM "நிலா முற்றம் "என்னும் நிகழ்ச்சி நடத்தியது. அதில் நானும் பேசினேன். இவர்களும் பேசினார்கள். நான் பேசிய விதம் பிடித்து Hello FM யிடம்  என் தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்பு கொண்டார்கள். ஒரே அலை வரிசையில் இருந்ததால் நட்பு பலப்பட்டது.  


கொஞ்ச நாட்களுக்கு பிறகே தெரிந்தது இவர்கள் கண் பார்வையை நடு வழியில் தொலைத்தவர்கள்  என்பது. அது வரை தானாக சொல்லவுமில்லை. நான் கண்டு பிடிக்கும் படி பேசியதுமில்லை. இரண்டு பையன்கள் பிறக்கும் வரை நல்ல பார்வையோடு என்னைப் போலவே வாசிப்பில் அதிக ஈடுபாடு கொண்ட சுபாஷினி பார்வை இழந்த போது பெரிதும் வருந்தியது தான் இனி புத்தகங்கள் வாசிக்க முடியாதே என்பதற்கு தான். தன் பார்வை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிய போது ஒரு பதற்றம் வந்தாலும்  மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் சரியாகத் தான் இருக்கிறேன் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 


எவ்வளவோ மருத்துவர்களைப் பார்த்து இருக்கும்  பார்வையையாவது தக்க வைத்துக் கொள்ள போராடி இருக்கிறார்கள். இனி பார்வை திரும்ப வழியில்லை என்ற பதிலையே பெற்றிருக்கிறார்கள். ஒரு நாளில் பார்வை முழுமையாக பறி போனது.   ஆனால் தன்னம்பிக்கை இழக்கவில்லை இந்த பெண்மணி. தன்  காரியங்களை தானே பார்த்துக் கொள்வதோடு அவர்கள் கணவன் நடத்தும் ஹோட்டலுக்கு தேவையான  பொடி வகைகளையும்   வீட்டிலிருந்தே பணியாட்கள் துணையோடு தயாரித்து அனுப்புகிறார்கள் இதற்கு நல்ல வரவேற்பு. அழகாக உடை உடுத்துவார்கள். 


சுய சார்பு உள்ளவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். புடவையின் நல்ல பக்கம் கெட்ட பக்கம் தெரிந்து கொள்ள இடுப்பில் சொருக வேண்டிய இடத்தில் டெய்லரிடம் லேசாக மடித்து தைத்து வாங்கிக் கொள்கிறார்கள்.(அவர்களின் சுய சார்பு பற்றி தனியாகவே ஒரு பதிவு போடும் அளவுக்கு விஷயங்கள் சொன்னார்கள்) தான் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வை தானே சிந்தித்து அதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். 


ஒரு வித தயக்கத்தில் பார்வை போன பிறகு வீட்டை விட்டு எங்கேயும் போகாமல் இருந்தார்கள். நான் பழகத் தொடங்கிய பின் அவர்களை ரொம்ப தைர்யப்படுத்தி அவர்கள்  கணவரிடம் அழைத்து வரச் சொன்னேன். ஒரு தோழியின் வீட்டு நிகழ்ச்சிக்கு போனோம். நிகழ்ச்சி முழுவதும் உடன் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டேன்.  அதன் பின் தைர்யம் பெற்று இன்று பல இடங்களுக்கு தன் கணவன் மகன்கள் உதவியோடு போய் வருகிறார்கள். ஒரு முறை உறவினர்களோடு குற்றாலம் போய் வந்தேன் என்று சொன்ன போது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்.  


இவர்களின் கூடுதல் திறமை கவிதை எழுதுவது. கவிதையின்  வார்த்தைகளை மனதிலேயே சேர்த்து கோர்த்து  ஒரு கவிதை வடிவத்துக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். பின்  கணவன் அல்லது மகன்களிடம்  இந்த கவிதை இவர்கள் சொல்ல சொல்ல எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். 


பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நான் ஏதோ ஒரு விஷயம் சொல்வதற்காக எழுத்தாளர் வண்ணதாசனை அவர்களை  போனில் அழைக்க அவர் அம்பைக்கு ஒரு உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறேன். என்றார். அன்று சுபாவிற்கு பிறந்த நாள். "அவர்கள் கண் பார்வை இழந்தவர்கள். கவிதையில் ஈடுபாடு உடையவர்கள் அவர்களை நேரில் வந்து உங்களை சந்திக்கச் சொல்லலாமா?  அது அவர்களுக்கு நான் கொடுக்கும் பிறந்த நாள் பரிசாக இருக்கும் "எனக் கேட்க உணர்ச்சி வயப்பட்ட வண்ணதாசன் அவர்கள் தானே சென்று சந்தித்தார். உற்சாகமாக அவர்கள் கொடுத்த நோட்டில் சுபா "எழுதி" இருந்த கவிதைகளை வாசித்து பாராட்டி இருக்கிறார். இதை விட சிறந்த ஒரு பிறந்த நாள் பரிசை நான் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. 


இன்று வரை எதிர் நீச்சல் போட்டு உற்சாகமாக தன்னை வைத்துக் கொண்டிருக்கும் அற்புத மனுஷி எழுதிய கவிதைகள் இரண்டு இங்கே. 

சருகுகள் உதிர்கின்றன

தளிரும் முற்றா இலைகளும் உதிர்கின்றன.

உயிரின் அருமை தெரியவா?

வெட்டியானின் வறுமை போக்கவா?

இறைவனின் சாபமா?

இயற்கையின் கோபமா?

விடை தெரியாமல்

காத்திருக்கின்றோம்

நம்பிக்கையுடன்

                  *******

வாழ்க்கை தேவைக்காகவே வாழ்ந்தால் அலுப்பாகும்

ஆசைக்காகவும் வாழ்ந்தால்

அழகாகும்.

பிறருக்காகவே வாழ்ந்தால்

சலிப்பாகும்

நமக்காகவும் வாழ்ந்தால் 

சுவாரஸ்யமாகும்.

கடந்த காலத்தை 

எண்ணாமல்

வருங்காலத்துக்காக

கலங்காமல்

இந்நொடி வாழ்வோம்.

வாழ்வதற்கே வாழ்க்கை.

                      ******

இன்றும் இவர்கள் கணவனும் மகன்களும் இவர்களை குறைவு பட்டவர்களாகவே எண்ணாமல் நடத்துவதால் இவர்களும் இயல்பான ஒரு பெண்ணின் வாழ்க்கையை நடத்த முடிகிறது என்று மகிழ்வோடு  சொன்னார்கள்.

02 July, 2021

 Bynge இல் லாசரா அவர்கள் எழுதிய "உத்ராயணம்" என்னும் சிறுகதை வாசித்தேன். உடனே ஒரு உத்வேகம் எழுந்தது. அவருடைய எல்லா கதைகளையும் வாசித்து அத்தனை சொற்களையும் பொக்கிஷமாய் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 எனக்கு ஒரு பாக்கியம் இருக்கிறது. வாசித்தவுடன் அவருடைய அருமை மகனுடன் ஒரு conversation வைத்துக் கொள்வேன். இதோ அண்ணன் சப்தரிஷியும் நானும் பேசிக் கொண்டது. 

நான்: அண்ணன் இன்று லாசரா எழுதிய உத்ராயணம் வாசித்தேன். அதில் கண்ணன் னு குறிப்பிடுவது உங்களைத் தானா?

அண்ணன்: ஆமா. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் தரேன். அதுவும் லாசராவின் கதைகளைச் சொல்லும் ரம்யா கண்டுபிடித்த சொன்ன விஷயம். அவர் எழுதும் கதைகளில் பாசிட்டிவ் காரெக்டர்களுக்கு அதிகம் தன் பிள்ளைகளின் பெயரையே பயன்படுத்தி இருக்கிறார். நெகடிவ் காரெக்டர்களுக்கு பெயர் இல்லாமல் அவன் அவள் என்றே எழுதி இருக்கிறார். 

நான்: இதை இனி கவனத்தில் இருத்தி வாசிக்கிறேன் அண்ணன்.

அண்ணன்: உங்களுக்கு இந்து தத்துவங்களில் ஆர்வமிருப்பதால் இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். எங்க அப்பா புருவம் திக்கா நீண்டு வளர்ந்து இருக்கும். அது போல் பீஷ்மரின் புருவமும் இரண்டு பக்கமும் நீண்டு வளர்ந்து தொங்கி போர் புரியும் போது தொந்தரவாய் இருக்குமாம். அதனால் இரு போர் வீரர்கள் இரண்டு புறமும் அம்பினால் புருவத்தை தூக்கிப் பிடித்து அவர் போர் செய்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்களாம். 

நான்: interesting ஆன விஷயம் அண்ணன்.

இப்போ ஏன் இந்த விஷயத்தை அண்ணன் சொல்றார் உத்ராயணம் வாசிச்சு பாருங்க புரியும்.

இப்போ உத்ராயணம் கதையில் நான் ரசித்த வரிகள்:

"இது வரை ரெண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக் கொண்டாச்சு. காஞ்சாச்சு. ஆனால் உடல் வாணலியாய் பொரிகிறது. இனி மேல் ஈரம் பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசு தான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா?"( மார்பில் சளி நிறைந்து இருமும் போது ஏற்படும் சத்தத்தை மார்பில் கொலுசு என்கிறார்) 

" இது குறைக்கிற நாயுமல்ல. கடிக்கிற நாயுமல்ல. நாய்களில் ஊமை உண்டோ?" (அட ஆமால்ல! நாய்களின் முக்கிய அடையாளமே குறைப்பு தானே! வாய் பேச முடியாத குறைக்க முடியாத நாய்கள் உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?)

"நாங்கள் எங்கே பேசிக்கிறோம். எங்களைப் பிணைக்கும் மௌனச் சரடே எங்கள் பேச்சென்றால் நாங்கள் நிறையப் பேசுகிறோம்"

"இரவு வேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கையில் விட்டுச் செல்லும் நுறைத் துளிகள்.பொரியும் முத்துக் கொதிகள்"

கல்வித் தெய்வம் அவரோடு கை கோர்த்துக் கொண்டு வார்த்தைகளை வாரிக் கொட்டி இருக்கிறது. முத்துக்களாய் அவை கதைகள் எங்கும் ஜொலிக்கின்றன.

30 May, 2021

 # சிறுகதை "மனச் சிதைவு"

அவள் தன் மனம் சிதைவடைந்து கொண்டிருக்கிறது என்பதையே அறியாதிருந்தாள். தன் தோழி ஒரு முறை சொன்னது லேசாக உறுத்தினாலும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தன் தோழியிடம் "என்னன்னே தெரியலப்பா. இப்பல்லாம் பீரோவைத் திறந்தாலே ஏன் இவ்வளவு வாங்கி சேர்த்து வைத்திருக்கிறோம்னு வெறுப்பா வருது" ன்னு அவள் சொன்ன போது " உன்னை சின்ன வயதில் இருந்தே எனக்குத் தெரியும். உடை உடுத்துவதில் அதீத ப்ரியம் கொண்டவள் நீ. ரொம்ப பிடிச்ச விஷயத்தில் திடீர்னு வெறுப்பு வருதுன்னா அது டிப்ரஷனின் சிம்ப்டம் ஆச்சே" என்று போற போக்கில் சொன் னாள் தோழி. அதை அவளும் மறந்து விட்டாள். தோழியும் மறந்து விட்டாள். 

இல்லை என்றால் அந்த கொடுமையின் உச்சத்துக்கு போகாமல் காத்திருக்கலாம். 

அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து கொண்டே வந்தது. துள்ளல் நடையோடு தன் வயதை மறந்தவளாய் நடமாடிக் கொண்டிருந்தவள் தன் வேகம் மறந்தாள். "எதுக்கு இந்த வயதில் இவ்வளவு உற்சாகம்" என்று கொஞ்சம் பொறாமையோடு சலித்துக் கொண்டிருந்தவர்கள் கூட என்னவோ ஏதோவென வருத்தப்படத் தொடங்கினார்கள். 

எந்நேரமும் மனதுக்குள் ஒரு அச்சம். அஞ்சா நெஞ்சக் காரி அவள். ஆனால் இப்போதோ தூங்கி எழும் போது நெஞ்சுக்குள் புறா படபடக்கிறது. அலுவலக வேலையில் ஒரு தெளிவின்மை. தனக்குள் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள். எதனால் என்பது புரியவில்லை. இறுதியாய் தனக்கு ஏதோ மிகப் பயங்கரமாய் ஒரு வியாதி வந்து விட்டது என்று முழுமையாய் நம்பத் தொடங்கினாள். தன் நிறம் குறைந்து கருமை அடைந்து கொண்டிருப்பதாய் நம்பினாள். அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள்.

 தன் மூக்கை உடலாய் கொண்டு  இரு கன்னங்களிலும் ஒரு கருப்பு பட்டாம்பூச்சி தன் இறக்கை விரித்து அமர்ந்திருப்பது போல் தோன்றியது. நொடிக்கு ஒரு தடவை தனக்கு இருப்பதாக நினைக்கும் அறிகுறிகளுக்கு என்ன வியாதி இருக்கலாம் என இணையத்தில் தேடினாள். ஒவ்வொரு முறையும் அது பயங்கரமான வியாதியின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்தது கூடுதலாய் அருவருப்பான படங்களுடன். 

இதைக் கண்டதும் அவள் மனம் மேலும் சிதையத் தொடங்கியது. தன் கற்பனையின் வீர்யம் தாங்காமல் அவள் ஒரு நாள் அலறிய போது அவள் கணவன் அவள் காலிலேயே விழுந்தார். "வீட்டில் இருக்கும் பிள்ளைகளை பயமுறுத்தாதே! கொஞ்சம் பொறுமையாய் இரு" என்று அமைதிப் படுத்தப் பார்த்தார். நடக்கவில்லை. 

அன்று அவள் கணவர் டீவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். அவளோ அவர் காலடியில் அமர்ந்த படி தன் செல்லில் உள்ள கேமராவில் தன் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள். "முன்னால இந்த இடம் இவ்வளவு சொறசொறப்பா இருக்காதே. இவ்வளவு கருமையா இருக்காதே" அப்போது டீவியில் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். "கொரோனா வியாதிக்கு  சிகிச்சை எடுத்துக் கொண்டதில் சிலருக்கு கருப்பு பூஞ்சை என்னும் வியாதி வருகிறது என்பது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது" அந்த வியாதி வந்த சிலரின் புகைப்படங்கள் காட்டப்பட்டன. 

நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் செல் போனின் காமராவில் தன் முகத்தை பார்த்தாள். அங்கே கருப்பு பூஞ்சை மெல்ல மெல்ல படரத் தொடங்கி இருந்தது. இரு கன்னங்களில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி மெல்ல விஸ்வரூபம் எடுத்தது. "வீல்" என அலறிய படியே மயங்கிச் சரிந்தாள். அவர்கள் குடும்ப டாக்டர் அறிவுரைப்படி ஒரு சைக்யாட்ரிஸ்டிடம் அழைத்து வந்திருந்தார்கள். அவர் சொல்லிக் கொண்டிருந்தார் " மனம் என்பது ரொம்ப அருமையான ஒன்று. அது சிதைவதென்பது ஒரு நாளில் நடப்பதில்லை. தான் வாங்கும் அடிகளை கொஞ்சம் கொஞ்சமாய் தாங்கிக் கொண்டிருக்கும். ஒரு மென்மையான பொழுதில் நொறுங்கத் தொடங்கும். 

தொடக்கத்திலேயே எங்களிடம் வந்து விட்டீர்கள் என்றால் சரிப்படுத்துவது சுலபமாக இருந்திருக்கும். மொத்தமாக சிதைந்த நிலையில் அழைத்து வந்திருக்கிறீர்கள். முயன்று பார்ப்போம். " என்றார். மூன்று வருடங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தார். தான் கொடுக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னார். 

அது வரை தான் தனது என்று சுயநலமாய் இருந்த கணவர் ஒரு வீட்டின் தலைவி அதிர்ந்து போனால் மொத்த குடும்பமே அதிர்ந்து போகும் என்பதை புரிந்து அவள் மேல் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். முழுமையாக இயல்புக்கு வந்த அவள் அதே துள்ளல் நடையோடு தன் காரியங்களை செய்யத் தொடங்கினாள். டீவியில் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். "உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்து கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டது. உலக மக்கள் அமைதியாக தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். வாண வேடிக்கைகளோடு கொரோனா ஒழிப்பை மக்கள் கொண்டாடினர்"