12 November, 2023
Bigg Bosd 7 poornima maya controvercy
பிக் பாஸ் பற்றி நான் ரிவ்யூ போடலைன்னாலும் தினமும் பார்ப்பேன். பலரும் இவ்வளவு நாளும் அது scripted programme. என்ன செய்யணும்னு எல்லாம் சொல்லிடுவாங்கன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. பல பங்கேற்பாளர்களே நான் scripted னு நினைச்சு போனேன் ஆனா அப்படி இல்லைன்னு சொன்னாலும். சொல்றவங்க அதை தொடர்ந்து கிட்டுத் தான் இருந்தாங்க. எனக்கு என்ன சந்தேகம்னா அப்போ அவர்கள் மாயா, பூர்ணிமா குரூப்பை ஏன் கழுவி ஊத்தறாங்க. அவர்களும் அவர்களுக்கு சொல்லப்பட்டதைத் தானே செஞ்சிருப்பாங்க. இப்படியும் இல்லாம அப்படியும் இல்லாம மாத்தி மாத்தி பேசுறதைத் தான் புரிஞ்சுக்கவே முடியல.
எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருது. ஒரு உறவுக்காரப் பெண் எங்க அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆதங்க ப் படுவாங்க . எங்க வீட்டுக்கு வர மாட்டேங்கிறீங்க. எங்களை மதிக்க மாட்டேங்கிறீங்கன்னு. எங்க அம்மா விசேஷ வீடுகளுக்கு வரவே பயந்தாங்க. பார்த்ததும் முதல் அரை மணி நேரம் திட்டு வாங்கணுமேன்னு. நான் இதற்கு முடிவு கட்ட நினைத்தேன்.
ஒரு திருமண வீட்டில் இப்படியே ஆரம்பித்தாங்க. நான் கேட்டேன். "பெரியவங்க சின்னவங்களை வந்து பார்க்கணுமா? சின்னவங்க பெரியவங்களை வந்து பார்க்கணுமா??" நான் ஏதோ வில்லங்கமா கேட்கிறேன்னு அவங்க பதில் சொல்லல.
நானே தொடர்ந்தேன். பெரியவங்க சின்னவங்களை வந்து பார்க்கணும்னா உங்க ஊர்லயே தனியா இருக்கிற என் தங்கையை நீங்க எத்தனை தடவ போய் பார்த்திருக்கிறீங்க. இல்ல சின்னவங்க தான் பெரியவங்களை போய் பார்க்கணும்னா நீங்க எத்தனை தடவை எங்க அம்மாவை வந்து பார்த்தி்ருக்கிறீங்க. ரெண்டுல ஒண்ணு தெளிவா இருங்க. பார்க்கிற நேரமெல்லாம் குறை சொல்வதையும், யாரா இருந்தாலும் எங்க வீட்டில வந்து எங்களைப் பார்க்கணும்னு எதிர்பார்க்கிறதையும் நிறுத்துங்கன்னு சொன்னேன். அதோட குறை சொல்வது முடிவுக்கு வந்தது. ஒண்ணு சொன்னாலும் நன்றாய் சொல்லி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரணும்.
அதே தான் இங்கேயும் scripted னு நம்பினால் சந்தோஷமா சீரியல் பார்க்கிற மாதிரி பாருங்க. இல்லைன்னா உள்ளே இருப்பவர்கள் சாம்பிள் மனிதர்கள் என்று சந்தோஷமா பாருங்க. நான் காரியவாதியான விசித்ரா அர்ச்சனாவுடன் போடப்போகும் சண்டைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
# Big Boss7
06 November, 2023
#திருமண கலாசார மாற்றங்கள்.
லட்சுமி ராஜரத்தினம், ஜோதிர் லதா கிரிஷா போன்ற பெண் எழுத்தாளர்கள் அவர்கள் காலங்களில் பெண்களின் திருமணம் நடப்பது எவ்வளவு சிரமமானது என்பதை கதைகளில் சொல்லி இருக்கிறார்கள். அது நல்லது. இல்லையென்றால் காலம் மாறிய பின் அப்படி ஒன்று இருந்தது என்பதே தெரியாமல் போய் விடும் அபாயம் உண்டு.
அலங்காரம் செய்து, பெண் பார்க்க வருபவர் கால்களில் விழுந்து, நமஸ்கரிப்பது. அவர்கள் முடிவு சொல்லும் வரை அவரையே கணவனாக நினைத்து கனவு காண்பது, அது இல்லையென்றானதும் அடுத்தவர் . இது தொடர்கதையாக இருந்தது.
அதுவும் ஒரு நாலைந்து பெண் குழந்தைகள் இருந்தால் நெட்டையோ குட்டையோ சம்மதிச்சிடு என்று மூத்த பெண் குழந்தைகளை வற்புறுத்துவது. மூத்த பெண் சம்பாதிப்பவளாக இருந்தால் " உனக்கு எப்படியும் மாப்பிள்ளை கிடைச்சிடும் என்று அவர்களை வைத்துக் கொண்டே இளையவர்களை திருமணம் செய்து கொடுத்து கடைசியில் உழைத்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விடுவது. இது ஒரு காலம்.
அடுத்து, பெண்களில் பாதிக்கு மேல் உழைக்கத் தொடங்கி தனக்கு வேண்டாம் என்று நினைப்பவரை அழுத்தமாக மறுக்க முடிந்த காலம். குடும்ப முன்னேற்றத்துக்கு அவளால் உதவ முடிகிறது என்பதாலேயே அவளைக் கொஞ்சம் கூடுதலாய் மதிக்கத் தொடங்கினார்கள். அப்போதும் கூட நீ சம்பாதிப்பதில், உன் செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள உன்னை அனுமதிப்பதே, நான் உனக்கு காட்டும் பெரும் கருணை, என்று நடத்தியவர்களும் உண்டு. இந்த சமயத்தில் காதல் திருமணங்கள் கொஞ்சம் அதிகரிக்கத் தொடங்கின. . சம்பாதிக்கும் பெண் இருந்தால் குடும்பத்துக்கு நல்லது என தன்னுடன் பணி புரியும் பெண்ணையே பலர் காதலித்து மணந்தார்கள். தன் மகன் காதலிக்கும் பெண், வேற்று மதம் ஜாதி சார்ந்திருந்தாலும் அவள் சம்பாதிக்கிறாள் என்பதாலேயே அவளை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள். இந்த காலத்திலும் காதலுக்கு எதிரிகள் சிலர் பெற்ற பிள்ளைகளையே கொன்று கொண்டும் இருந்தார்கள்.
அடுத்து ஒரு கால கட்டம். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை என்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் போதும். நான் உனக்கும் சேர்த்து சம்பாதிக்கிறேன் என்று பெண்களின் மன நிலை மாறியது. அங்கே மாறத் தொடங்கியது ஆண்களின் மனம். தன் மனைவி தன் குழந்தைகளுக்காக உழைக்க வேண்டியது தனக்கு மட்டும் கடமையில்லை. தன் பொறுப்பு இல்லை. முடிந்தால் செய்வேன். இல்லையென்றால் மனைவி பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்ற பொறுப்பற்ற மனநிலை வந்து விட்டது. அதுவே பல விவாகரத்துகளுக்கும் வழி வகுத்தது. என் மேல் அன்பு காட்டாத உன்னை, தவறுகள் செய்தும் உன்னை , சகித்து வாழ அவசியமில்லை என்று பெண்களின் மன நிலை மாறிப் போனது. இதனாலேயே பல குழந்தைகள் ஒற்றை பெற்றோருடன் வாழும் நிலை ஏற்பட்டது. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. அது இல்லாமல் பெற்றோர் பிரியும் போது அதை குழந்தைகளால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சகித்து சேர்ந்திருந்திருக்கலாமே என்பது தான் பெரும்பான்மையோருடைய எண்ணமாக இருக்கிறது. ஏனென்றால் சமூகத்தில் குழந்தைகள் சந்திக்கும் அழுத்தங்கள் அப்படிப்பட்டவை.
இப்போ அதற்கும் அடுத்த நிலை. விவாகரத்தை தவிர்க்க நான் வாழ்ந்து பார்த்து விட்டு ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற மனநிலை. Living together. இது ரொம்ப ஆபத்தானது. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்கள் தான். ஏனென்றால் ஆண் தனக்கென உரிமைப்பட்ட ஒருத்தியிடம் மட்டுமே அதிகாரம் காட்டுவான். ஆணவமாய் நடந்து கொள்வான். எத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தாலும் திருமணமாகி கணவன் என்றானபின் அவன் நடவடிக்கை மாறித் தான் போகும். அது தனிப்பட்ட ஒருவரின் குண நலன், வளர்க்கப்பட்ட முறை சார்ந்தது. சிலர் லிவிங் டுகெதரில் குழந்தை பெற்றுக் கொள்ளாமலாவது இருக்கிறார்கள். சில முட்டாள்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் குழந்தையும் பெற்று அந்த குழந்தைகளையும் சிக்கலுக்கு உட்படுத்துகிறார்கள்.
ஒரு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாய் இருந்தது. இப்போ தலை கீழாகி ஆண் பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பது பிரம பிரயத்தனமாய் இருக்கிறது.
சமுதாயத்தில் ஆணும் உயர்த்தியில்லை. பெண்ணும் உயர்த்தியில்லை. இருவரும் சமமே என்ற எண்ணம் வந்து பரஸ்பரம் புரிதல் இருந்தால் மட்டுமே நாம் பாரம்பரியமாக காத்து வரும் குடும்பம் என்ற அமைப்பு சிதையாமல் இருக்கும்.
அதற்கான முயற்சியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். சிதைப்பது எளிது. மறு உருவாக்கம் மிகக் கடினம்.
05 November, 2023
புத்தகத்தின் பெயர் : அன்புள்ள அம்மாவுக்கு.
ஆசிரியர் : லட்சுமி ராஜரத்தினம்.
இது மூன்று குறுங் கதைகளின் தொகுப்பு.
சில நேரம் லைட் ரீடிங் தேவைப்படும். இது அந்த வகையைச் சார்ந்தது.
முதல் கதை அன்புள்ள அம்மாவுக்கு.
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் பாடுகளைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு இந்த புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு ஏழை அப்பாவுக்கு நான்கு பெண் குழந்தைகள். ஒவ்வொருவர் திருமணமும் ஒவ்வொரு விதமாய்.
பெற்ற தாய் தந்தையாகவே இருந்தாலும், பணம் தரும் பிள்ளைகளுக்கு இடையே வேறுபாடு காட்ட வைத்து விடுகிறது. அது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. தனக்குத் தருபவர்களை குளிர வைத்துக் கொண்டால் தானே, தருவது தடங்கலின்றி வரும். இது ஏழ்மை நடத்தும் நாடகம்.
கதையில் ஆரம்பத்திலிருந்தே பிறருக்காகவே வாழும் ப்ரீதா. சுய நலம் மிகுந்த குழந்தைகளை துணிச்சலாய் ஒதுக்கும் போதும் வாழ்க்கை அதே பிறர் நலம் தொடரவே வழி காட்டுகிறது.
எனக்கு பிடித்த வரிகள்:
"மரணம் எப்பொழுது, எப்படி, எங்கே நிகழ்கிறது என்பது யாருக்காவது தெரியுமா? மனித உடல் காற்றடித்த பலூனா? அப்படியானால் யார் அதை இப்படி ரகசியமாக பிடுங்கி காற்றை வெளியே அனுப்புகிறார்கள்"
இரண்டாவது கதை : நெஞ்சம் எங்கே.
இது இரண்டாவது கதை. மலையின் மேல் பணி புரியும் சுந்தரின் மனைவி பாலா, தன் முதல் குழந்தை ரவியை தன் பெற்றவர்களிடம் விட்டு விட்டு, குழந்தை சத்யாவுடன் , சுந்தருடன் வாழ வந்த இடத்தில் , சத்யாவைத் தொலைத்து விடுகிறாள். அதன் பின் சுந்தர் தன் வேலையை உதறி ஊருக்கே வந்து விடுகிறான்.
ரவி நல்ல உயரமான , அழகான ஆண் பிள்ளையாக வளர அவனைப் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அவன் மேரியைக் காதலிக்க, சித்ராவை அவன் அப்பா மருமகளாக்க முடிவு செய்ய , காவல் அதிகாரி பணி கிடைத்த சோனாவும் ரவியை விரும்புகிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழி பிறந்து ரவி யாரைத் திருமணம் செய்கிறான. என்பது தான் கதை.
மூன்றாவது கதை : உனக்காக மட்டும்.
அது மட்டும் உங்களுக்காகவே. முதல் இரண்டு கதைகளும் நம் வாசிக்கும் ஆசையை தூண்டி இருக்கும். மூன்றாவது நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்.
16 October, 2023
நாவலின் பெயர் : 23 ஆம் படி
ஆசிரியர் : ரா.கி.. ரங்கராஜன்
வீ.கே. புக்ஸ் இன்ட்டர்நேஷனல்
முதல் பதிப்பு : 2012
விலை ரூ 100/-
இந்த கதை மிகவும் விறுவிறுப்பானது. பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்த நாவல் ஆதலால் பலரும் படித்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்போது தான் வாசிக்க வாய்த்தது.
தொல் பொருள் ஆராய்ச்சி செய்யும் டாக்டர் நாகலெச்சுமி முக்கிய கதா பாத்திரம். சிவ சங்கரன் என்னும் நண்பரின் அறிவுரைப்படி அந்த குழுவில் இணைகிறான் வேணு. புகைப்படக்காரரான கிருபாகரனின் மகள் மோனி மேல் காதல். ஆனால் மோனிக்கு வேணுவுக்குப் பிறகு அறிமுகமான கிஷோர் மேல் காதல்.
யார் யாருடன் இணைகிறார்கள் என்பது தான் கிளைக் கதை. தொல் பொருள் ஆராய்ச்சி தான் முக்கிய கதை. ஐந்து, ஆறாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த களப்பிரர்கள் பற்றிய ஆராய்ச்சி.
எனக்கு மிகவும் பிடித்த இடம் மட்டும் ஒரு சோற்றுப் பருக்கையாய்:
“ அவனுக்கும் எதுவோ ஒன்று சிலிர்த்தது. நீண்ட நெடும் பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையில் ஒரே ஒரு ரோஜாவாக இந்த மோனி சிரித்தாள். அந்த ரோஜா என்னோடு வராது. அதைத் தாண்டி என் பயணம் இருக்கிறது. பிரிந்து போகு முன் என்னிடமிருக்கும் கடைசிக் குவளை நீரை அந்த ரோஜாவுக்கு ஊற்றி விட்டுப் போகிறேன். நான் போன பின்னரும் அது சிரித்துக் கொண்டே இருக்கட்டும். “
இது தான் உண்மைக் காதல். சேர முடியாத போது தான் காதலித்த பெண்ணின் முகத்தில் ஆஸிட் வீசும் இந்தக் கால காதலுக்கும் அந்த காதலுக்கும் எவ்வளவு வேறுபாடு. கதையின் சுவாரஸ்யத்துக்காக கனவில் வருவது நிஜத்தில் நடப்பது போல் சொல்லி இருந்தாலும் கதையின் வேகம் அபாரம்.
09 October, 2023
நாவலின் பெயர் : சிவப்பு அங்கி
ஆசிரியர் : கோட்டயம் புஷ்பநாத்
தமிழில் : சிவன்
கலா நிலையம் பதிப்பகம்.
விலை : ரூ 210/-
முதல் பதிப்பு : 1999
சிவப்பு அங்கி அணிந்து வரும் லூசிபர் பேயின் அட்டகாசங்கள் தான் கதை. இரட்டை பிள்ளைகளான பிரான்ஸிஸ் , பர்னாண்டஸ் இருவரில் பிரான்சிஸ் ஒரு பாதிரியார். பர்னாண்டஸ் ஒரு பெண் பித்தன். லூசிபர் பற்றிய புத்ட்தகம் முதலில் பிரான்சிஸ் கையில் கிடைத்தாலும் பர்னாண்டசுக்கே வாசிக்க வாய்க்கிறது.
அதை வாசித்ததிலிருநநது உள்ளுக்குள்ளிருந்து ஒரு சாத்தான் வழிகாட்ட பர்னாண்டஸ் அதன் படி நடக்கிறான். நய வஞ்சகமாக தன் சகோதரன் பிராஅன்சிஸைக் கொன்று தான் பாதர் பிரான்சிஸாக நடிக்கத் தொடங்கி விடுகிறான்.
இந்த கதை வாசிக்கும் நாட்களில் OTTயில் மாவீரன் படம் பார்த்தேன்ன். அதிலும் கதா நாயகன் சத்யாவுக்கு ஒரு குரல் கேட்கும். இரண்டும் குரல்கள் தான். ஒன்று பிசாசின் குரல். மற்றொன்று சத்யாவை மாவீரனாக்க உதவும் குரல்.
ஏற்கனவே பெண்களின் விஷயத்தில் பலவீனனான பர்னாண்டஸை தன் திட்டத்துக்குப் பயன்படுத்துவது லூசிபருக்கு சுலபமான ஒன்றாக இருக்கிறது. பெண்ணை வசியம் செய்யும் திறமையைக் கொடுக்கிறது. ஆனால் பதிமூன்றாம் நாள் அநநத பெண்ணை தான் அனுபவித்து ரத்தம் குடித்துக் கொன்று விடுகிறது. ஆனால் இறப்பு இயல்பானதாக பிறருக்குத் தோன்றுகிறது.
இப்படியே ஒவ்வொரு பெண்ணாக வசியம் செய்வது தான் கதை. கதா நாயகன் ஒரு பாதராக வருவதால் கதை சர்ச், கல்லறை, சிலுவை என கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையே சுற்றி வருகிறது.
ஒவ்வொரு நிகழ்வும் நம்மில் திகில் வளர்த்து விறுவிறுப்பாக செல்லும் நாவல்.
சர்ச் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வின்செந்த் பாதரும் அவருக்கு உறு துணையாக வரும் ரவீநநதிரனும் தான் பைசாச வேலைகளுக்கு எதிராகப் போராடும் சக்திகள்.
இறுதியில் லூசிபர் பேய் வெற்றி கொண்டதா? தோற்றுப் போய் ஓடியதா?பர்னாண்டஸ் தான் பிரான்சிஸ் பாதரோட உருவத்தில் நடமாடிக் கொண்டிருந்தான் என்பதைக் கண்டு பிடித்தார்களா? அப்படி என்றால் பர்னாண்டசுக்கு தக்க தண்டனை கிடைத்ததா?
அறிந்து கொள்ள "சிவப்பு அங்கி" நாவலைத் தேடி படியுங்கள்.
Disclaimer :
நான் எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது. ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் நான் ரசிக்கும் விஷயங்களை என் நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வேன். வேறு எந்த சட்ட திட்டங்களுக்க்கும் கட்டுப்பட்டு நான் எழுதுவதில்லை. பதிவு எழுதும் போது என்னைப் போலவே வாசிப்பில் ஈர்ப்பு இருப்பவர்களை அது காந்தம் போல் இழுத்து வந்து என்னிடம் சேர்த்து விடும். அ்து பெரும் நிறைவு.
Subscribe to:
Posts (Atom)


