10 January, 2022
21 December, 2021
07 December, 2021
#புத்தக விமர்சனம்
கதையின் பெயர் : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.
ஆசிரியர் : பெருமாள்
முருகன்.
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : ரூ
175/-
கையில் புழுப்
போல் நெளியும் கரிய நிற சிறிய வெள்ளாட்டுக் குட்டி.. அதை ஒரு கிழவன், வழியில் ஒரு மனிதன்
கொடுத்ததாக சொல்லி தன் கிழவியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறான்.. கிழவி பூனை ஏற்கனவே
வளர்த்தவள். அதை பூனாச்சி என்று அழைப்பதால் வெள்ளாட்டுக் குட்டியையும் பூனாச்சி என்றே
அழைக்கிறாள்.
இரவில் அழும் குட்டியை
தன் வீட்டிலுள்ள வெள்ளாட்டிடம் பால் குடிக்க விட முதலில் ஏமாந்து பால் சுரந்த ஆடு புரிந்து
கொண்டு பூனாச்சி குடிக்க வந்தால் சுரக்காது இருந்து விடுகிறது. அதை “ கள்ள மடி” என்கிறார்
ஆசிரியர்.
வெள்ளாடு என்றால்
இரண்டு மூன்று குட்டி போடும். செம்மறி ஒரு சமயம் ஒரு குட்டி தான் போடும் போன்ற நான்
அறியாத தகவல்கள் பல கிடைத்தன இந்த கதையை வாசிக்கும் போது.
“வாயிருப்பது மூடிக்
கொள்ளத்தான் . கையிருப்பது கும்பிடு போடத்தான். காலிருப்பது மண்டி இடத்தான். முதுகிருப்பது
குனியத்தான். உடலிருப்பது ஒடுங்கத்தான். ராசாங்கத்திடம் எப்படி நடக்க வேண்டும் என்பதை
எல்லோரும் நன்றாகவே கற்றிருந்தார்கள்”” இதைச் சொல்வதன் மூலம் எளியோரின் வேதனையை நம்
கண் முன்னே கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.
“ செம்மறிக் குட்டிகளை
அவளுக்குப் பிடிக்கவில்லை. அவை எப்போதும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே இருக்கின்றன.
வெள்ளாடுகளைப் பார் எப்போதும் தலை நிமிர்த்திக் கொண்டு தான் இருக்கின்றன.” எவ்வளவு
நுண்ணிய அவதானம். சிந்தித்து பார்த்தால் செம்மறி ஆடுகள் சோகம் ததும்பும் கண்களை உடையவை
தான்.
“குனிவைத் தளை
என்று உணராமல் வாழும் பாக்கியம் பெற்றவை செம்மறிகள் “ என்கிறார்..
ஒடை அடிப்பது என்னும்
புது சொல்லை படித்தேன். காளைகளை காயடிப்பது எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவும்
அது போலத்தான் போலும். ஆனாலும் மனிதர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள். எனக்கும் கொடூரமாய்
ஒரு எண்ணம் தோன்றியது. பச்சிளம் குழந்தகளை பாழ் பண்ணும் மனிதர்களுக்கு இதையே தண்டனையாய்
கொடுக்கலாமோ? ஓரிருவருக்கு கொடுத்தால் போதும். எல்லாம் ஒழுங்காகும்.
கதைக்கு ஊடாக சமுதாய
அக்கரையை பிறர் பேச வைப்பார். அப்படித்தான் “ சனம், எல்லாத்தையும் அழிச்சு அழிச்சு கையில
வழிச்சு வழிச்சு வாயில் போட்டுக்குது. அப்புறம் சனத்தை தவிர வேறெது இங்க வாழ முடியும்.
கடசியா சனமுந்தான் வாழ முடியுமா? “ என்று அக்கிழவி பெருமூச்சு விட்டாள் என்கிறார்..
பிரபஞ்சம் எல்லோருக்குமானது.
நமது வசதிக்காக காடு, பறவைகள் , விலங்குகளை அழிக்கிறோம் என்ற ஆதங்கம் புரிகிறது. பஞ்சத்தின்
கொடுமையை அவர் விவரிக்கும் போது பதறுகிறது. ஜனத்தின் வலி நம்மை உணற வைக்க பக்கம் பக்கமாய்
எழுத வேண்டியதில்லை. ஒரு 140 பக்கங்கள் போதும். அது இதில் இருக்கிறது.
20 November, 2021
ஜெயமோகனின் "வெண்கடல்" சிறுகதையிலிருந்து."பெண்ணடியாளுக்க வலியைக் கண்டா ஆணாய் பிறந்ததே பாவம்னு தோணிப் போயிரும்." என்றான் குமரேசன். "ஆணுக்கு அந்த மாதிரி வலி இல்லையா" என்றேன். "இல்லையே!இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக் கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே" என்றார் அப்பு அண்ணா.
இதைப் படித்ததும் என் சிந்தனை. ஆண்களுக்கு சிறு வயதிலேயே வலி தாங்கும் மன வலிமை இருக்கிறது. என் பேரனுக்கு அப்போது எட்டு வயது இருக்கும். நாங்கள் ராஜஸ்தான் வந்த புதிது. குளிர் காலங்களில் காலை பதினோரு மணி போல பார்க்கில் விளையாட விட்டு நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் விளையாடிய பிள்ளை தரையிலமர்ந்து தன் முழங்காலில் முகத்தை புதைத்த படி இருக்கிறான்.
ஏதோ சந்தேகம் வர பக்கத்தில் போய் பார்த்தால் அழுது கொண்டிருக்கிறான். நெற்றியில் புருவத்துக்கு அருகே காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது. பதறிப் போனேன். இதுவே பெண் பிள்ளையாக இருந்தால் இரத்தம் கண்டதும் நடுங்கி பாட்டியிடம் ஓடி வந்திருக்கும்.
ஆனால் அதே குழந்தை வளர்ந்து பெண்ணானதும் எவ்வளவு வலி தாங்குகிறது. பூப்பெய்துவது சிலருக்கு பூப்போல முடிந்து விடும். சிலருக்கோ மாதா மாதம் ரண வேதனை. அருவருப்பு. தனது உடலே நாறிப் போனது போல் ஒரு உணர்வு. பக்கத்தில் இருப்பவர்களுக்கு அந்த நாற்றம் தெரிந்து விடுமோ என்னும் பதைபதைப்பு.
அடுத்து திருமண உறவு. சுத்தமின்மையை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத பெண்ணாய் இருந்தால் பரவாயில்லை. அதுவே தூய்மை பேணும் பெண்ணாய் இருந்தால் இரவில் வியர்வை கசகசப்போடு தன் மனம் உடன்படாத நேரத்திலும் தன்னை நெருங்கும் கணவனை சந்தோஷப்படுத்த வேண்டிய வலி. ஈடுபாடு குறைந்ததை கண்டு பிடித்து விட்டால் "வேற எவனையாவது நினைச்சுக்கிட்டு இருக்கியா" என்னும் கூர்வாள் பாயும். உன் வாடையும் நசநசப்பும் தான் தாங்க முடியலன்னு சொல்லவா முடியும்.
அடுத்து பிரசவம். சொல்லவே வேண்டாம். மறு ஜென்மம். இப்போ ஆப்பரேஷன் பண்ணி சுலபமா குழந்தையை எடுத்திடுறாங்கன்னு சொல்றாங்க. ஆனால் அதற்காக நடு முதுகில் போடப்படும் ஊசி நகரும் போதெல்லாம் உறுத்தும்.
குழந்தை பிறந்து பால் கொடுக்க இயலாமை ஒரு வலி என்றால் ஏதோ காரணங்களால் பால் இருந்தும் கொடுக்க முடியாமை பெருவலி. அதைத்தான் இந்த கதையில் சொல்லி இருக்கிறார். பால்கட்டை எடுக்க அட்டைகளை மாரில் வைத்து கட்டும் ஒரு முறையை சொல்லி இருக்கிறார். அவை வலி தெரியாமல் உறுஞ்சி விடும். பின் அந்த அட்டைகளை அழித்து விடச் சொல்லும் போது அப்பெண் சொல்கிறாள் "ஆற்றிலேயே விட்டிடுங்க. என்ன இருந்தாலும் அவை என் பாலைக் குடித்தவை" இந்த வரியில் நொறுங்கிப் போனேன் நான்.
வயதாகி தீட்டு நின்றாலும் நிற்பதில்லை வலி சிலருக்கு. எத்தனை குழந்தைகளை தாங்கிய கருப்பை தளர்ந்து நெகிழ்ந்து வெளியே வந்து விடுகிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் கூச்சம். ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் சொல்லும் போது அதை வெட்டி நீக்க வேண்டிய அவசியம். முடியாத சமயத்தில் வெளியே சொல்ல முடியாத வேறொரு தீர்வும் இருக்கிறது.
இப்பொழுது முதல் பாரா படியுங்கள். ஆசிரியர் சொன்னது எவ்வளவு சரியென்று தெரியும். பெண் எவ்வளவு வலியும் தாங்க கூடியவள் அவள் முடியவில்லை என்று சொன்னால் அது மனதின் வலியின் பிரதிபலிப்பு எனப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டின் பெண் முடியவில்லை என்று சொன்னால் சகித்துக் கொள்பவர்களின் சதவீதம் கூட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவு.
நாங்கள் இருக்கிறோம் எனச் சிலர் சொல்வீர்கள். அந்த ஒரு சிலர் போதாது. அனைத்து பெண்களுக்குமே அந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும்.
30 October, 2021
# புத்தக விமர்சனம்
இந்திய இலக்கியச் சிற்பிகள்.
எழுத்தாளர் லா.ச.ரா பற்றி எழுதியவர் லா.ச.ரா.சப்தரிஷி
இன்று லா.ச.ரா அவர்களின் ஜன்ம தினமும் இறப்பு தினமும். எத்தனை பேருக்கு இப்படி அமையும்.
இது சாகித்ய அகடமி வெளியீடு. விலை ₹50/-
பதினைந்து தலைப்புகளில் எழுதி உள்ளார். இதன் கூடுதல் சிறப்பு மகனே தந்தையைப் பற்றி எழுதுவது.
அவருடைய மொத்த புத்தகங்களையும் மனப்பாடம் செய்தவர் போல ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் அது எந்த எந்த கதையில் எந்த விதமாக வருகிறது என்று ஒரு ஆய்வு மாணவரைப் போல குறிப்பிடுகின்றார்.
"லா.ச.ரா பற்றி நான்" என்பது முதல் தலைப்பு. அதில் அங்கங்கே ஆங்கில சொற்றொடர்களை ஆங்கில எழுத்துக்களிலேயே சொல்லி இருப்பது லா.ச.ரா வின் தனித்துவத்தைப் பிரதிபலித்தது.
லாசரா அவர்கள் கதைக்கான தலைப்பைத் தீர்மானித்துக் கொண்டு தான் எழுதத் தொடங்க வேண்டும் . சில சமயங்களில் தலைப்புக்கே கதையை மேலே தள்ளிக் கொண்டு போகும் சக்தி உண்டு என்பாராம்.
லாசராவை பிடிக்காதவர்கள் லாசராவைப் படிக்காதவர்கள். அவர் எழுத்தை புரிந்து படித்து உள்ளே இறங்கி விட்டோமானால் அவரை வெளியேற்றுவது கடினம். அவர் எழுத்தின் மயக் அப்படிப்பட்டது என்கிறார் நூலின் ஆசிரியர்.
லாசரா அவர்கள் அவருடைய எழுத்தில் தான் பேசுவதாக நினைப்பதில்லை. அவர் மூலமாய் அவர் எழுத்து மூலமாய் அவர் மூதாதைகளே பேசுவதாய் நம்புகிறார்.
சப்தரிஷி அவர்கள் "எல்லா வார்த்தைகளையும் இந்த கதையிலேயே போட்டு விட்டால் அடுத்த கதைக்கு என்ன செய்வீங்க" என்பாராம். அதற்கு லாசரா "உலகத்திலே எல்லோருமே மூச்சு விடுகிறோம். காத்து தீர்ந்தா போய் விட்டது" என்பாராம்.
"அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்துக் கொள்கையில் மார் மேல் மார்பு அழுந்தித் திணறுகையில் அவள் தொண்டையிலிருந்து புறா முனகல் வெளிப்படுகையில் .............இப்படியே தொடர்கிறது. இவர் சொல்லின் செல்வர் அல்லாமல் வேறெவர்?
அவர் எழுதிய புத்தகத்தின் பெயரான சிந்தா நதியை " ஸிந்தா நதி" என்கிறார்கள். நதி ஸிந்தாமல் இருக்குமா? அது சிந்தா நதி ( Chindha nathi) சிந்தனை நதி என்பாராம்.
லாசரா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டாராம்." சாவே உன்னை ஏற்கிறேன். ஏனெனில் எனக்கு வேறு வழி இல்லை. நீ நியதி. உன்னுடன் என்றுமே சமாதானமாக முடியாது. நீ பலவான். ஆனால் நியாயவான் இல்லை' என்றாராம். உண்மை தானே. வேற வழியில்லை. சாவை ஏற்றுத் தானே ஆக வேண்டும்.
கவிஞர் வாலி அவர்கள் லாசரா பற்றி இப்படி சொல்லி இருக்கிறார். " லாசரா இலக்கிய உலகின் பிதாமகர்.அவர் ஆஞ்சநேயர். அவருக்குத் தன் பலமே தெரியாது. வார்த்தைகள் வரிசையா வந்து அவர் வீட்டு வாசலில் நின்று லாசரா நம்மைப் பற்றி பேசாரா என ஏங்கும்."
எழுத்தாளர் பிரபஞ்சன் லாசராவை "சொல் வலை வேட்டுவன்" என்கிறார். லாசராவின் எழுத்துகளைப் பற்றி பல எழுத்தாளர்கள் பேசியதும். இறுதியில் அவரே தன் எழுத்து பற்றி பேசியதும் வாசிக்க வாசிக்க திகட்டாதவை.
30.10.1916 இல் பிறந்த லாசரா தான் எழுத ஆரம்பித்து மிகச் சரியாக எழுபத்தி ஐந்தாம் வருடத்தில் 30.10.2007 இல் மறைந்தார். தனது மனைவி ஹேமாவதியுடன் 62 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இவருக்கு நான்கு மகன்களும். ஒரு மகளும் உள்ளனர்.
்என்னைப் பின்னிருத்திக் கொண்டு முடிந்த வரை லாசராவின் வார்த்தைகளிலேயே சொல்லி இருக்கிறேன் என்கிறார் சப்தரிஷி.
இந்த புத்தகம் வாங்கி பொக்கிஷமாக நம் வீட்டில் வைக்கப் பட வேண்டிய ஒன்று.
