Bio Data !!

30 May, 2013

அழகை அதிகரிக்க சில வழிகள் !!!


நான் சமீபத்தில் கேட்ட ஒரு கருத்து "அழகாக"  இருந்ததால் இங்கே பகிர்கிறேன்.

நாம் வீடு கட்டும் போது ஜன்னல்கள் வைத்து கட்டுகிறோம். ஏன் ? நல்ல காற்றோட்டம்  இருப்பதற்காக. நல்ல திரை சீலைகள் போடுகிறோம்  வீட்டை அழகு படுத்த..

அதைப் போலவே நமது உடலில் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. அவை தான் அழுகையும் சிரிப்பும். நாம் அழ வேண்டிய நேரத்தில் அழவும்  சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரிக்கவும் செய்தால் அழகாக இருப்போம். சிறு குழந்தைகள் எல்லாமே அழகு தான். காரணம் அவை அழுவதற்கோ சிரிப்பதற்கோ தயங்குவதில்லை. ஆனால் நாம் எங்கே அழுதால் நம்மை பலவீனமாய் நினைத்து விடுவார்களோ என்று அழுகையை அடக்கிக் கொள்கிறோம் . சரி அழுவதற்கு தான் தயக்கம் என்றால் சிரிக்கவாவது செய்கிறோமா என்றால் அதவும் இல்லை.

எனக்கு வாய் விட்டு சிரிப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும் நான் சிரிப்பை மறந்து பல கால ம் ஆனதால். சிரிப்பில் சில வகை இருக்கும். பிறருடைய குறைகளை நக்கலாய் சொல்லி விட்டு அவர்களே பலமாக சிரிப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள். இன்னும் சிலர் தன குறைகளை சொல்லி தானே சிரிப்பார்கள். இவர்கள் எங்கே மற்றவர்கள் சொல்லி விடுவார்களோ என்று தன குறைகளை தானே முந்தி சொல்பவர்கள். ஆனால் பிறர் ஏதாவது சொல்லி விட்டால் சுருங்கி விடுவார்கள். இன்னும் சிலர் நமட்டு சிரிப்பாய் சிரிப்பார்கள். அதன் அர்த்தம் அவரவர் வசதிக்கேற்ப. இன்னும் சிலர் மட்டுமே உள்ளத்திலிருந்து சிரிக்கிறார்கள்

நம் உள்ளத்தின் ஜன்னல்களான  அழுகையையும், சிரிப்பையும் விரியத் திறந்து வைப்போம்.  அதைப் போலவே பிறர் அழும்போதோ  சிரிக்கும் போதோ விமர்சிக்காமல் இருப்போமே. நீங்களே முயற்சி செய்து பார்த்து சொல்லுங்களேன் அழகை அதிகரிக்க இதுவும் ஒரு வழி  தான என்று. 

25 November, 2012

"தே............வதை"



முதன் முறையாய்
தொண்டை நரம்புகள் புடைக்க
என்னைப் பார்த்து நீ
"தே .................!" என்று கத்திய போது
பதறிப் போனேன் .
நான் "தேவதை" என்று
நிரூபிக்கத் துடித்தேன்.

தவறி மலக் கிடங்கினுள்
முழுமையாய் விழுந்து
எழுந்ததைப் போல
குன்றிப்   போனேன்.

என்னைப் பெற்றவர்கள் வளர்ப்பின்
எச்சத்தின் மிச்சங்களால்
உறக்கத்தில் கூட
உதறி எழுந்தேன்.

காலச் சக்கரம்
சுழன்று ஓடியது.

இன்றும் கோபம் கொப்பளிக்க
குரல் தடிக்க அழைக்கிறாய்
"தே ....................!"
என்னைப் பெயர் சொல்லி
அழைத்தது போல்
இயல்பாய் திரும்புகிறேன்.

17 November, 2012

செல்லம்







நீ இருக்கும் போது

உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்

அருகில் நீ இல்லாத போது

உன் நினைவுகளுடன்.

அண்டை நாடுகளை மிஞ்சி விடுகிறது

என் மீதான உன் ஆக்கிரமிப்பு


 உன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத படி இம்மாம் தொலைவு போய் இருக்கியேடா செல்லம்

14 November, 2012

உழைப்பின் சின்னம்

அன்றொரு நாள் , நான் சாலையில் கண்ட வயதானவர் தான் இந்த கவிதையின் கருவானவர். நல்லா வந்த மாதிரி இருக்குதேன்னு பத்த்ரிகைகளுக்கு அனுப்பினேன், மெயிலில் தான், ஹார்ட் காப்பி அனுப்புவதில் படு சோம்பேறியான நான் , ஆனால் வந்த பாடாய் இல்லை சரி இருக்கவே இருக்குது வலைப்பூன்னு நினைச்சு போட்டு விட்டேன் . நல்லா இருக்குதா சொல்லுங்க.
                                                                                .........
ஒடுங்கிய தேகம்,
இடுங்கிய கண்கள்,
ஒட்டிய கன்னம்,
கையில் குறுந்தடி,
அரையில் அழுக்கு வேஷ்டி,
கீழே
இரு சிறு துணிப் பொதி,
வயது எண்பதிருக்கலாம் ,
அதற்கு மேலேயும் இருக்கலாம்,

உள்ளிருந்து ஏனத்துடன்
வரும் பெண்ணை
பார்த்திருந்த கிழவரை
என் பரிதாபப் பார்வை
ஊடுருவ
சுற்றுமுற்றும்  பார்த்து
குரல் கொடுத்தார்,
"கோலப் பொடிய்ய்ய்ய்ய்ய்........"

உழைப்பின் சின்னமாய்
இருந்த அவரை
கூசிக் குறுகி பார்த்த நான்
மெல்லச் சொன்னேன் ,
"இங்கிருந்து மூணாவது ,
தெக்கப் பார்த்த வீடு,
வாங்க, வாங்கணும் "
உள்ளுக்குள் சொல்லக் கொண்டேன்
"நாளையிலிருந்து கோலம் போட
பழகணும்"

01 October, 2012

புறப்படு பெண்ணே புவியசைக்க !!

புறப்படு  பெண்ணே புவியசைக்க
புரிந்தவன் கணவனானால்
காத்திரு கண்ணசைக்க.
இல்லையெனினும்  செயல்படு!
இன்னும் சிறிது காலமாகலாம்
புரிதல் தொடங்க.

"அனைவரின் " அங்கீகரிப்பும்
அன்பும் அரவணைப்பும்
எதிர் நோக்காதே !
சிறு எதிர்ப்பின்
எதிர்வினை கூட
உன்னை சுருங்கச் செய்யலாம் .

அளவிலா அன்பின்
அடிநாதம் ஆராயாதே!
எதிர்ப்பும் ஏன்  வந்ததென
ஏங்கிப் போகாதே .
இரண்டும் ஆகிப் போகும்
உன் குறை வளர்ச்சியின் காரணமாய் .

குருவியின் தலையோன்றே
குறிக்கோளாய்
உன் வலிமைகளனைத்தும்
குவிந்தால் தான்
பற்றியெரியும் தீக்காடாய்
பாலியல் துன்பம் பதற்பதறாய்.

புறப்படு பெண்ணே புவியசைக்க!
பிறப்பதல்ல பூப்பது தான்
உன் திறமை.
நிலம் கீறி வெளியேறி
நின்று நெடுக உயிர் தாங்கி
வெம்பி விடாமல் வந்தால் தான்
பூப்பூக்கும் உன் வலிமை
புவியசைக்கும் புறப்படு....