Bio Data !!

16 October, 2023

நாவலின் பெயர் : 23 ஆம் படி ஆசிரியர் : ரா.கி.. ரங்கராஜன் வீ.கே. புக்ஸ் இன்ட்டர்நேஷனல் முதல் பதிப்பு : 2012 விலை ரூ 100/- இந்த கதை மிகவும் விறுவிறுப்பானது. பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்த நாவல் ஆதலால் பலரும் படித்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்போது தான் வாசிக்க வாய்த்தது. தொல் பொருள் ஆராய்ச்சி செய்யும் டாக்டர் நாகலெச்சுமி முக்கிய கதா பாத்திரம். சிவ சங்கரன் என்னும் நண்பரின் அறிவுரைப்படி அந்த குழுவில் இணைகிறான் வேணு. புகைப்படக்காரரான கிருபாகரனின் மகள் மோனி மேல் காதல். ஆனால் மோனிக்கு வேணுவுக்குப் பிறகு அறிமுகமான கிஷோர் மேல் காதல். யார் யாருடன் இணைகிறார்கள் என்பது தான் கிளைக் கதை. தொல் பொருள் ஆராய்ச்சி தான் முக்கிய கதை. ஐந்து, ஆறாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த களப்பிரர்கள் பற்றிய ஆராய்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த இடம் மட்டும் ஒரு சோற்றுப் பருக்கையாய்: “ அவனுக்கும் எதுவோ ஒன்று சிலிர்த்தது. நீண்ட நெடும் பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையில் ஒரே ஒரு ரோஜாவாக இந்த மோனி சிரித்தாள். அந்த ரோஜா என்னோடு வராது. அதைத் தாண்டி என் பயணம் இருக்கிறது. பிரிந்து போகு முன் என்னிடமிருக்கும் கடைசிக் குவளை நீரை அந்த ரோஜாவுக்கு ஊற்றி விட்டுப் போகிறேன். நான் போன பின்னரும் அது சிரித்துக் கொண்டே இருக்கட்டும். “ இது தான் உண்மைக் காதல். சேர முடியாத போது தான் காதலித்த பெண்ணின் முகத்தில் ஆஸிட் வீசும் இந்தக் கால காதலுக்கும் அந்த காதலுக்கும் எவ்வளவு வேறுபாடு. கதையின் சுவாரஸ்யத்துக்காக கனவில் வருவது நிஜத்தில் நடப்பது போல் சொல்லி இருந்தாலும் கதையின் வேகம் அபாரம்.

09 October, 2023

நாவலின் பெயர் : சிவப்பு அங்கி ஆசிரியர் : கோட்டயம் புஷ்பநாத் தமிழில் : சிவன் கலா நிலையம் பதிப்பகம். விலை : ரூ 210/- முதல் பதிப்பு : 1999 சிவப்பு அங்கி அணிந்து வரும் லூசிபர் பேயின் அட்டகாசங்கள் தான் கதை. இரட்டை பிள்ளைகளான பிரான்ஸிஸ் , பர்னாண்டஸ் இருவரில் பிரான்சிஸ் ஒரு பாதிரியார். பர்னாண்டஸ் ஒரு பெண் பித்தன். லூசிபர் பற்றிய புத்ட்தகம் முதலில் பிரான்சிஸ் கையில் கிடைத்தாலும் பர்னாண்டசுக்கே வாசிக்க வாய்க்கிறது. அதை வாசித்ததிலிருநநது உள்ளுக்குள்ளிருந்து ஒரு சாத்தான் வழிகாட்ட பர்னாண்டஸ் அதன் படி நடக்கிறான். நய வஞ்சகமாக தன் சகோதரன் பிராஅன்சிஸைக் கொன்று தான் பாதர் பிரான்சிஸாக நடிக்கத் தொடங்கி விடுகிறான். இந்த கதை வாசிக்கும் நாட்களில் OTTயில் மாவீரன் படம் பார்த்தேன்ன். அதிலும் கதா நாயகன் சத்யாவுக்கு ஒரு குரல் கேட்கும். இரண்டும் குரல்கள் தான். ஒன்று பிசாசின் குரல். மற்றொன்று சத்யாவை மாவீரனாக்க உதவும் குரல். ஏற்கனவே பெண்களின் விஷயத்தில் பலவீனனான பர்னாண்டஸை தன் திட்டத்துக்குப் பயன்படுத்துவது லூசிபருக்கு சுலபமான ஒன்றாக இருக்கிறது. பெண்ணை வசியம் செய்யும் திறமையைக் கொடுக்கிறது. ஆனால் பதிமூன்றாம் நாள் அநநத பெண்ணை தான் அனுபவித்து ரத்தம் குடித்துக் கொன்று விடுகிறது. ஆனால் இறப்பு இயல்பானதாக பிறருக்குத் தோன்றுகிறது. இப்படியே ஒவ்வொரு பெண்ணாக வசியம் செய்வது தான் கதை. கதா நாயகன் ஒரு பாதராக வருவதால் கதை சர்ச், கல்லறை, சிலுவை என கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையே சுற்றி வருகிறது. ஒவ்வொரு நிகழ்வும் நம்மில் திகில் வளர்த்து விறுவிறுப்பாக செல்லும் நாவல். சர்ச் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வின்செந்த் பாதரும் அவருக்கு உறு துணையாக வரும் ரவீநநதிரனும் தான் பைசாச வேலைகளுக்கு எதிராகப் போராடும் சக்திகள். இறுதியில் லூசிபர் பேய் வெற்றி கொண்டதா? தோற்றுப் போய் ஓடியதா?பர்னாண்டஸ் தான் பிரான்சிஸ் பாதரோட உருவத்தில் நடமாடிக் கொண்டிருந்தான் என்பதைக் கண்டு பிடித்தார்களா? அப்படி என்றால் பர்னாண்டசுக்கு தக்க தண்டனை கிடைத்ததா? அறிந்து கொள்ள "சிவப்பு அங்கி" நாவலைத் தேடி படியுங்கள்.
Disclaimer : நான் எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது. ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் நான் ரசிக்கும் விஷயங்களை என் நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வேன். வேறு எந்த சட்ட திட்டங்களுக்க்கும் கட்டுப்பட்டு நான் எழுதுவதில்லை. பதிவு எழுதும் போது என்னைப் போலவே வாசிப்பில் ஈர்ப்பு இருப்பவர்களை அது காந்தம் போல் இழுத்து வந்து என்னிடம் சேர்த்து விடும். அ்து பெரும் நிறைவு.

28 September, 2023

நாவலின் பெயர் : வடலிவிளை செம்புலிங்கம் ஆசிரியர் : கலைமாமணி தாமரை செந்தூர் பாண்டி சிவகாமி புத்தகாலயம் விலை ரூ 320/- கதை நாயகன் செம்புலிங்கம் பண்டார நாடாரின் இரண்டாவது மனைவியின் மகன். அவள் பேச முடியாதவள். மூத்த மனைவிக்கு குழந்தை இல்லாததால் செம்புலிங்கத்தை தன் மகன் போலவே வளர்க்கிறாள். இருவத்தோரடி ஆழமுள்ள கிணற்றை சவாலை ஏற்று அவன் தாண்டுவதை வாசிக்கும் போது நமக்கே அவனை பார்க்கணும் போலிருக்குது. " வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் பார்க்காதவர்கள் அந்தப் பாய்ச்சலைப் பார்த்து புரிந்திருப்பார்கள். நடுக் கிணற்றில் சட்டெனக் கிணற்றுக் குருவி ஒன்று உள்ளிருநநது மேலே பறந்ததைக் கண்ணுற்ற செம்புலிங்கம் அதையும் கையில் பிடித்த படியே பாய்ந்து கிணற்றைக் கடந்து ஒன்றரையடி தூரத்தில் வெளியே குதித்து நின்றான்." என்கிறார் ஆசிரியர். ஒரு திருட்டில் செம்புலிங்கத்தின் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டு மலை மீதுள்ள காட்டில் மறைந்திருக்கிறான். பன்ணையார், தன் மீது மிகுந்த அன்பு கொண்ட சுந்தரி என்ற பெண்ணிடம் அத்து மீறியதைக் கண்டித்திருக்கிறோமே என்பதை மறந்து அவரிடம் உதவிக்கு செல்வதை பயன்படுத்தி பண்ணையார் பழி வாங்கி விடுகிறார். அதன் பின் அவர் வற்புறுத்தலின் பேரில் போலீஸ் அவன் பெயரை இணைக்கிறது. சில நேரங்களில் பிரச்னையை தீர்க்க நாம் எடுக்கும் முயற்ச்சியே பிரச்னையை பெரிதாக்கி விடும் என்பதை நமக்கு உணர்த்தும் இடம். சந்தர்ப்ப சூழலால் திருடனாகி விட்டாலும் பெண்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான். அவர்களை உடன் பிறந்தவர்களைப் போலவே நடத்துவான். கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் சில சமயங்களில் நடந்து கொள்வான். ஒரு இடத்தில் மோர் விற்ற இரு பெண்கள் கொஞ்சம் தெனாவெட்டாக பேசியததம் ஆவர்கல் காதுகளில் உள்ள பாம்படத்தைக் கழற்றி அவற்றில் ஒன்றால் அவர்களின் ஆளுக்கொரு காதினை இணைத்து பூட்டி ஊருக்குள் போகும்வரை பேசக் கூடாது என அனுப்பி விடுவான். ஒரு முறை வந்த வண்டிகளை கொள்ளை அடிக்க நிறுத்திய போது அவை ஒரு அனாதை இல்லத்துக்கு செல்வதாக அறிந்ததும் கொள்ளை அடிக்காதது மட்டுமல்ல உடன் போய் பத்திரமாக சேர்க்கிறான். வழியில் " நான் தான் செம்புலிங்கம்" என்று கூறிக்கொண்டு பொய்யாக வந்து கொள்ளை அடிக்க முயலும் சிலரிடமிருந்தும் காக்கிறார். ஒரு இரவில் செம்புலிங்கம் பசி மிகுந்து களக்காடு "சி" னா "த" னா என்பவர் தோட்டத்தில் இளநி வெட்டி குடித்து விட்டு படுத்திருக்கும் போது அவர் வந்து அன்பாய் பேசீ வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பதினேழு வயதிலேயே கணவனை இழந்த அவர் தங்கை பார்வதியின் கண் வலைக்குள் மாட்டிக் கொள்கிறார் செம்புலிங்கம். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் உடல் வலைக்குள்ளும். செம்புலிங்கம் " ஜாதி என்னல ஜாதி" என்று மிராசுதார் ஒருவரிடம் கேட்பதாக ஒரு நிகழ்வு வருகிறது. சுதந்திரத்துக்கு முந்திய கால கட்டத்தை சேர்நநத செம்புலிங்கம் அன்்று கேட்ட கேள்விக்கு இன்று வரை விடை கிடைத்த பாடில்லை. இன்றும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் " ஜாதி என்னல ஜாதி?" காருண்யா அம்மையார் ஒருவர் செம்புலிங்கத்தை அன்பு செலுத்தி திருத்த முயல்கிறார். அவருடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். காவல் அதிகாரியிடம் அவன் சரணடைந்தால் குறைந்த தண்டனையுடன் விடுவிக்க வேண்டும் என்று வாதாடுகிறார். கதையில் வரும் செம்புலிங்கம் ஒரு ஹிந்து. காசி ஒரு கிறிஸ்தவன். துரைவாப்பா ஒரு முஸ்லிம். பெயருக்கு பின் ஜாதியை நிலை நாட்டியே பழகிய அந்தக் காலத்திலேயே ஜாதி மத வேறுபாட்டை துறந்து எறிந்தவர்கள். அந்த காலத்தில் செம்புலிங்கத்தை " தென்னகத்து ரா்பின் கூட்" என்று அழைத்திருக்கிறார்கள். இந்த நூலுக்கு 1997 ஆம் ஆண்டுக்கான தினத்தந்தியின் உயரிய விருதான அமரர் சி.பா.ஆதித்தனார் விருது கிடைத்திருக்கிறது. ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தைப் படிக்கலாம்.

27 September, 2023

நிழல் இளவரசி ஒரு மொழி பெயர்ப்பு நாவல். நாம் காதல் இணையாக ஷாஜகானையும் மும்தாஜ் ஐயும் தான் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த கதை ஷாஜகானின் மகள் ஜஹனாராவும் நஜ்பத்கானும் கொண்ட காதலை ஊடுபாவாக கொண்டது. மும்தாஜ் இன்னொருவனின் மனைவி என்றதுமே அவர்கள் காதலின் தீவிரம் வலு இழக்கிறது. இருந்தும் தாஜ்மஹால் ஒரு வரலாற்று சின்னமாய் இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் ஜஹனாரா தன் பாட்டி இருக்கும் இடம் சென்று அங்கு பெர்ஷிய நாட்டு கலை வடிவில் அமைக்கப்பட்ட சமாதியை பார்த்து அதை அடிப்படையாய் வைத்து தாஜ்மஹல் கட்டும் போது பல யோசனைகளை சொல்லியதாக படிக்கும் போது அவளது பங்கு சரித்திரத்தில் பெண் என்பதால் மறைக்கப்பட்டதோ என ஐயம் எழுகிறது. நஜ்பத்கான் மேல் ஆசை கொண்ட ஜஹனாராவின் தங்கை அவள் மேல் உள் ள நல்லெண்ணத்தை அழிப்பதற்காக தனது அக்காவிற்கும் அப்பாவிற்குமே தொடர்பு இருப்பதாக வதந்தி பரப்புவதை பார்க்கும் போது இன்று மட்டுமல்ல என்றுமே பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று தோன்றுகிறது. நஜ்பத்கானுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தாலும் ஜஹனாராவின் மேல் கொண்ட அன்பில் மிகவும் நேர்மையாய் இருப்பதும் அவள் அழைத்தால் மட்டுமே அவளைச் சென்று பார்ப்பதும் , யாருமறியாமல் பெற்றெடுத்த அவர்கள் மகனை தான் பொறுப்பெடுத்து வளர்ப்பதும், தந்தையின் விருப்பத்திற்கிணங்க திருமணமே செய்யாமல் அரச காரியங்களில் அவர் இறுதி காலம் வரை அவருடனே இருப்பதும், தன் மேல் மிகுந்த அன்பு காட்டும் ஔரங்கசீப்பின் போக்கு பிடிக்காத காரணத்தாலேயே அவன் எவ்வளவு வற்புறுத்தியும் அவனோடு போகாமல் இருக்கும் போதும் ஜஹனாரா மேல் நமக்கு அன்பு அதிகரிக்கிறது. எனக்கு மிகவும் பிடித்து படித்த ஒரு நாவல்

13 September, 2023

நாவலின் பெயர் : மரணங்கள் மலிந்த பூமி ஆசிரியர் : செங்கை ஆழியான் கவிதா வெளியீடு விலை ரூ 100/- முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005. பெயரைப் பார்த்ததும் எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நமக்கு பக்கத்து நாடான இலங்கை.ஆம். இலங்கை தான் கதைக் களம்.. இரண்டு பக்க நியாயங்களை சொல்லி வந்தாலும் கதை நெடுக இத்தனை பேரை பலி கொடுக்க நேரிட்டதே என்ற ஆதங்கம் ஒலிக்கிறது. யாழ்ப்பாண மாநகரத்தையும் வெளிக் கிராமங்களையும் பிரித்த படி நீண்டு செல்கின்ற பெர்லின் சுவர் இராணுவ வேலி யாழ்ப்பாணத்தின் சோகத்தைக் கதை கதையாக சொல்கிறது. காங்கேசன் துறையிலிருந்து வீடு வாசல்களை எல்லாம் ஒரே இரவில் இழந்து ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக ஓடி வந்தவர்களை மறுபடியும் அத்தனையும் விட்டு விட்டு சாவகச் சேரிக்கு ஓட விடுகிறார்கள். அங்கிருந்து அடுத்து எங்கோ?? போகும் போது சுவாமிநாதன் அதிக விலை கொடுத்து வாங்கிய பியர் பாட்டிலை விட மனசில்லாமல் காருக்குள் எடுத்து வைக்கிறார். செல்லும் வழியில் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து வாட்டும் மரண விடாயில் குழந்தைகளுக்கு அந்த பியரைக் கொடுத்து தாகம் தீர்க்கிறார். கொடுமை?? பத்து மாதம் தன்னைக் கருவில் சுமந்த தாய்க் கிழவியை இராசையா தூக்கி வரும் போது “என்னை இப்படியே போட்டுட்டு ஓடிப் போடா” என்று கிழவி சொல்வது நெஞ்சை குறு வாள் கொண்டு குத்திக் கிழிக்கிறது. கதை நெடுக இலங்கைத் தமிழில் எழுதப்பட்டு இருப்பதால் முடிக்கும் போது நமக்கு அது மிகவும் பரிக்கயமான மொழியாகிறது. உயிரின் பெறுமானம் தெரிந்தவர்கள் ஆயிரக் கணக்கில் இரவோடிரவாக வெளி நாடுகளுக்கு ஓடி விட்டார்கள். தெரிந்தவர்களிலும் மண்ணின் மீதுள்ள பாசம் மிகுந்து அங்கே இருந்தவர்கள் வெளியேற்றப் பட்டார்கள். “ ஓடு என்றால் ஓடுவதற்கும் வா என்றால் வருவதற்கும் நாமென்ன மந்தைகளா. எங்கேயாவது மாறி மாறி இருப்போம்” என்று ஒரு குரல் வேகமாக ஒலிக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. யாழ்ப்பாணத்தை நான்கு லட்சம் மக்களுக்காகத் தன் மடியில் தேக்கி வைத்து நன்னீரை கிணறுகள் மூலம் பாலாகத் தருகிற மாதா. இந்த பூமியில் பூகம்பங்கள் எட்டியும் பார்ப்பதில்லை. பெருஞ் சூறாவளிகள் தாக்கிக் காவு கொண்ட வரலாறு இல்லை என்று தன் தாய் நாட்டின் மீது கொண்ட பாசத்தை வர்ணிக்கிறார் ஆசிரியர். மக்கள் கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்கிறார்கள். ஆடுகளும் நாய்களும் பூனைகளும் அலமந்து பார்க்கின்றன. யுத்த பூமியின் பரிதாபத்தை நன்கு உணர முடிகிறது. அங்கே இருப்பவர்கள் காலியாக இருக்கும் வீடுகளைக் கொள்ளையிடுகிறார்கள். வீதியெங்கும் அவலக் குரல்கள். அல்லல்பட்டு அவலமாக ஓடிக் கொண்டிருந்த மக்களிடம் தம் கை வரிசையைக் காட்டிய திருடர்களும் இருந்தனர். தான் விட்டு வந்த மாட்டையும் கன்றையும் கூட்டி வரச் சென்ற போது எதிரே ஒருவன் அதை தன் மாடு கன்று என கூட்டி வரும் அவலமும் நடந்தது. ஆரம்பத்தில் போரிட்டவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் மெச்சிக் கொண்டவர்கள் கூட பெரும் இடப் பெயர்வோடு தம் பேச்சுகளை மாற்றிக் கொண்டார்கள் என்கிறார் ஆசிரியர். என்னைக் குலை நடுங்க வைத்த ஒரு நிகழ்வும் வந்தது. “ வடக்கு வீதியில் ஏறியவர் கோயில் சுவருடன் குப்புறக் கிடக்கின்ற ஒரு சடலத்தையும் சுற்றி இரண்டு நாய்கள் நிற்பதையும் காகங்கள் வேலியில் அமர்ந்து அவதானிப்பதையும் கண்டார். நாய்கள் மெதுவாக உறுமிய போது சடலத்தின் ஒரு கரம் அதைத் துரத்தும் பாங்கில் அசைத்தது. உயிர் இருக்கிறது” என்கிறார். எத்தகைய நிலை. இந்த நாவலில் ரசித்த வரிகள் எழுத முடியாது. என்னை பாதித்த வரிகள் வேண்டுமானால் எழுதலாம். “ எங்கட எத்தனை பிள்ளைகள் வாழ்கிற வயதில துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டும் உடலில் குண்டுகளைக் கட்டிக் கொண்டும் இந்த நாட்டின் இன வாத வன்செயல்களுக்கு பாதையைத் திறந்து விட்டது. இந்த பூமியில் இருக்கின்ற எல்லாத் துப்பாக்கிகளும் வெடிக்காது போய் விட வேண்டும். ஷெ;ல்கள் குண்டுகள் கண்ணிகள் எல்லாம் அவற்றை செய்தவர்களோடு செயலிழந்து போகக் கடவது” புரட்சிக்காரி சுகந்தி , அவள் தோழி மாலதியின் மரணம் நம்மை உலுக்கி விடும். இனி ஒரு யுத்தம் வேண்டாம். ஒருவர் மற்றவரது உரிமைகளை மதிப்போம். சமாதானமாய் வாழ்வோம். அதை வீடுகள் தொடங்கி நாடுகள் வரை நீட்டிப்போம். புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது மனம் கனத்துப் போனது நிஜம். நாம் எத்தகைய நிலையில் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்றும் ஒரு எண்ணம் மின்னல் போல் வந்து போனது. *************************************************************************************************************************