Bio Data !!

20 June, 2013

நெல்லையில் புத்தகத் திருவிழா !!

நெல்லையில் புத்தகத் திருவிழா !!

என்னைக்கு தொடங்கியது . இப்போ தான் எழுத நேரம் கிடைத்ததான்னு சொல்றீங்களா?  Better late than Never என்ன நான் சொல்றது சரி தானா?இன்னும் மூன்றே நாட்கள் தான். நெல்லை வாசிகள் இன்னும் பார்க்க வில்லை என்றால் உடனே புறப்படவும். 

இந்த புகைப்படத்தில் இருப்பது என்னவென்று சொல்பவர்களுக்கு புத்தகத் திருவிழா நடக்கும் இடத்தில் களை கட்டிக் கொண்டிருக்கும் "உணவுத் திருவிழா" விலிருந்து அருமையான கம்மங் கஞ்சி  வழங்கப்படும். 

கண்டு பிடிக்க வில்லை என்றால் கடைசியில் விடை சொல்கிறேன்.

சென்னையிலும் மதுரையிலும் புத்தகக் கண்காட்சியை பார்க்கும் போது எல்லாம் நம்ம ஊரில் எப்போ எப்போ என்று மனசு கிடந்து அடித்துக் கொள்ளும். ஒரு மாசம் முன்னதாக அறிவிப்பை கண்டவுடன்  ரகசியமாக டப்பாங்கூத்து ஒன்று போட்டு விட்டது. 

முதலில் இதை ஏற்பாடு செய்த அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட். !!!
மாவட்ட ஆட்சியாளர் ஒரு புத்தகப் பிரியர் என்று அறிந்தேன். தன்னை வாசிப்பினால் மகிழ்வித்த புத்தகங்களுக்கு மறு மரியாதை செய்திருக்கிறார் இந்த விழாவை ஏற்பாடு செய்ய உதவிக் கரம் நீட்டுவதன் மூலம். ஆரம்ப நாளன்று போயிருந்தேன். ஒரு சிறு வருத்தம். மூன்றே பெண்கள் தான் இருந்தோம்.. அடுத்த அடுத்த நாட்களில் பெண்களும் இருந்தார்கள்.

"மாதொருபாகன்" வாசித்ததில் இருந்து பெருமாள் முருகன் அவர்களின் தீவிர ரசிகை ஆகி விட்டதால் அவரது புத்தகங்கள் ரெண்டு வாங்கினேன். அவரது நாவல்களின் பெயரே வாசிக்கத் தூண்டுவதாய் இருக்கிறது. 

அநேகம் பள்ளிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வருகிறார்கள். சந்தோஷமாக இருந்தது. மாலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாளர்கள் திகட்ட திகட்ட விருந்து தருகிறார்கள். திரு இறைஅன்பு அவர்களும் திரு சைலேந்திர பாபு அவர்களும் வருகை தர இருக்கிறார்கள். தவற விட்டு  விடாதீர்கள். 


புத்தகங்களை பற்றி எழுதிக் கொண்டு இருக்கும் போது இடையில் என்ன படம்னு பார்க்கிறீர்களா? இது நெல்லை மாவட்ட ஆட்சியாளர் எடுத்த புகைப்படம். இதைப் போல அவர் எடுத்த புகைப்படங்கள் ஒரு ஸ்டால் முழுவதும் வைத்து இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு பின் நடந்தாலும் தித்திக்கும் விருந்தை அளிக்கிறது நெல்லை புத்தகத் திருவிழா !!

தமிழ் வளர்ச்சி பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவராய் இருந்து இதில் முக்கியப் பங்காற்றும் "மயன் " கட்டுமானப் பணியின் உரிமையாளர் திரு ரமேஷ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!! ஒரே ஒரே கேள்வி மட்டும் உங்களிடம்.  எங்கே இருந்து  கிடைக்கிறது உங்களுக்கு மட்டும் இதற்கெல்லாம் நேரம்.இதற்கு மேல் "நீங்கள்" "உங்கள்" என்று உன்னை அழைக்க முடியாது "குட்டி"  பல புத்தகப் பிரியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் !!

30 May, 2013

அழகை அதிகரிக்க சில வழிகள் !!!


நான் சமீபத்தில் கேட்ட ஒரு கருத்து "அழகாக"  இருந்ததால் இங்கே பகிர்கிறேன்.

நாம் வீடு கட்டும் போது ஜன்னல்கள் வைத்து கட்டுகிறோம். ஏன் ? நல்ல காற்றோட்டம்  இருப்பதற்காக. நல்ல திரை சீலைகள் போடுகிறோம்  வீட்டை அழகு படுத்த..

அதைப் போலவே நமது உடலில் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. அவை தான் அழுகையும் சிரிப்பும். நாம் அழ வேண்டிய நேரத்தில் அழவும்  சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரிக்கவும் செய்தால் அழகாக இருப்போம். சிறு குழந்தைகள் எல்லாமே அழகு தான். காரணம் அவை அழுவதற்கோ சிரிப்பதற்கோ தயங்குவதில்லை. ஆனால் நாம் எங்கே அழுதால் நம்மை பலவீனமாய் நினைத்து விடுவார்களோ என்று அழுகையை அடக்கிக் கொள்கிறோம் . சரி அழுவதற்கு தான் தயக்கம் என்றால் சிரிக்கவாவது செய்கிறோமா என்றால் அதவும் இல்லை.

எனக்கு வாய் விட்டு சிரிப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும் நான் சிரிப்பை மறந்து பல கால ம் ஆனதால். சிரிப்பில் சில வகை இருக்கும். பிறருடைய குறைகளை நக்கலாய் சொல்லி விட்டு அவர்களே பலமாக சிரிப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள். இன்னும் சிலர் தன குறைகளை சொல்லி தானே சிரிப்பார்கள். இவர்கள் எங்கே மற்றவர்கள் சொல்லி விடுவார்களோ என்று தன குறைகளை தானே முந்தி சொல்பவர்கள். ஆனால் பிறர் ஏதாவது சொல்லி விட்டால் சுருங்கி விடுவார்கள். இன்னும் சிலர் நமட்டு சிரிப்பாய் சிரிப்பார்கள். அதன் அர்த்தம் அவரவர் வசதிக்கேற்ப. இன்னும் சிலர் மட்டுமே உள்ளத்திலிருந்து சிரிக்கிறார்கள்

நம் உள்ளத்தின் ஜன்னல்களான  அழுகையையும், சிரிப்பையும் விரியத் திறந்து வைப்போம்.  அதைப் போலவே பிறர் அழும்போதோ  சிரிக்கும் போதோ விமர்சிக்காமல் இருப்போமே. நீங்களே முயற்சி செய்து பார்த்து சொல்லுங்களேன் அழகை அதிகரிக்க இதுவும் ஒரு வழி  தான என்று. 

25 November, 2012

"தே............வதை"



முதன் முறையாய்
தொண்டை நரம்புகள் புடைக்க
என்னைப் பார்த்து நீ
"தே .................!" என்று கத்திய போது
பதறிப் போனேன் .
நான் "தேவதை" என்று
நிரூபிக்கத் துடித்தேன்.

தவறி மலக் கிடங்கினுள்
முழுமையாய் விழுந்து
எழுந்ததைப் போல
குன்றிப்   போனேன்.

என்னைப் பெற்றவர்கள் வளர்ப்பின்
எச்சத்தின் மிச்சங்களால்
உறக்கத்தில் கூட
உதறி எழுந்தேன்.

காலச் சக்கரம்
சுழன்று ஓடியது.

இன்றும் கோபம் கொப்பளிக்க
குரல் தடிக்க அழைக்கிறாய்
"தே ....................!"
என்னைப் பெயர் சொல்லி
அழைத்தது போல்
இயல்பாய் திரும்புகிறேன்.

17 November, 2012

செல்லம்







நீ இருக்கும் போது

உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்

அருகில் நீ இல்லாத போது

உன் நினைவுகளுடன்.

அண்டை நாடுகளை மிஞ்சி விடுகிறது

என் மீதான உன் ஆக்கிரமிப்பு


 உன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத படி இம்மாம் தொலைவு போய் இருக்கியேடா செல்லம்

14 November, 2012

உழைப்பின் சின்னம்

அன்றொரு நாள் , நான் சாலையில் கண்ட வயதானவர் தான் இந்த கவிதையின் கருவானவர். நல்லா வந்த மாதிரி இருக்குதேன்னு பத்த்ரிகைகளுக்கு அனுப்பினேன், மெயிலில் தான், ஹார்ட் காப்பி அனுப்புவதில் படு சோம்பேறியான நான் , ஆனால் வந்த பாடாய் இல்லை சரி இருக்கவே இருக்குது வலைப்பூன்னு நினைச்சு போட்டு விட்டேன் . நல்லா இருக்குதா சொல்லுங்க.
                                                                                .........
ஒடுங்கிய தேகம்,
இடுங்கிய கண்கள்,
ஒட்டிய கன்னம்,
கையில் குறுந்தடி,
அரையில் அழுக்கு வேஷ்டி,
கீழே
இரு சிறு துணிப் பொதி,
வயது எண்பதிருக்கலாம் ,
அதற்கு மேலேயும் இருக்கலாம்,

உள்ளிருந்து ஏனத்துடன்
வரும் பெண்ணை
பார்த்திருந்த கிழவரை
என் பரிதாபப் பார்வை
ஊடுருவ
சுற்றுமுற்றும்  பார்த்து
குரல் கொடுத்தார்,
"கோலப் பொடிய்ய்ய்ய்ய்ய்........"

உழைப்பின் சின்னமாய்
இருந்த அவரை
கூசிக் குறுகி பார்த்த நான்
மெல்லச் சொன்னேன் ,
"இங்கிருந்து மூணாவது ,
தெக்கப் பார்த்த வீடு,
வாங்க, வாங்கணும் "
உள்ளுக்குள் சொல்லக் கொண்டேன்
"நாளையிலிருந்து கோலம் போட
பழகணும்"