29 April, 2025
#குழந்தை ஓவியர்கள்
"இன்று பல குழந்தைகள் திறமை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக ஓவியத் திறமை. ஆனால் பெற்றோர்கள் உடனே ஒரு வகுப்பில் கொண்டு சேர்க்கத் துடிக்கிறோம். அதனால் இயல்பான கற்பனை வளர்ச்சி தடைப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பதே குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவது தான். பூ தன் சந்தோஷத்துக்காகப் பூப்பது போல " என்றார் குழந்தைகள் புத்தகங்களில் ஓவியம் வரையும் தோழர் கார்த்திகா.
ஓவியர் கார்த்திகா
" குழந்தை வரைவது முதலில் தன் சொந்த சந்தோஷத்துக்காக.
பத்து வயது வரையில் தன் போக்கில் வரைய விட்டு விட வேண்டும். பின் டெக்னிக் பழகிக் கொள்ளும்.
வண்ணங்கள் கொடுக்கும் அதே மகிழ்வை கருப்பு வெள்ளையும் குழந்தைகளுக்கு கொடுக்கும். ஓவியங்கள் தொடங்குவது கிறுக்கல்களில். " என்றார்.
" குழந்தைகளுக்கான சங்கம் ஒரு காலத்தில் பொது சமூகத்தில் பெரும் பங்கு ஆற்றிக் கொண்டு இருந்தன. இப்பொழுது தொய்வடைந்துள்ளன.
குழந்தை இலக்கியம் எழுதுபவர்கள் பெரும் பொறுப்புணர்ச்சியோடு எழுதணும். தவறான தகவல்களைச் சொல்லி விடக் கூடாது.
குழந்தைகளை விமர்சிக்கப் பழக்கணும். அந்த விமர்சனங்களை பெரியவர்கள் பொறுணர்வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்." என்றார் எழுத்தாளர் உதய ஷங்கர்.
(தொடரும்)
28 April, 2025
மாநிலச் செயலாளர்.சாலை செல்வம், பாண்டிச்சேரி. மாநில செயற்குழு உறுப்பினர் கமலாலயன்,
மாநில துணைப் பொருளாளர். கார்த்திகா கவின் குமார். எழுத்தாளர் உதய ஷங்கர் முன்னெடுக்க நிகழ்வு நடந்தது.
நாறும்பூநாதன் , கரிசல் குயில் இருவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு நிகழ்வு தொடங்கியது.
வாண்டு மாமா நம் சிறு வயதில் கேள்விப்பட்ட பெயர். அவரது நூற்றாண்டு இந்த ஆண்டு.
இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவை 1) வாண்டு மாமாவைக் கொண்டாடுவோம் 2)
தலை சிறந்த நூறு சிறார் புத்தகங்கள். இந்த வரிசை பிபிசி தொகுத்து அளித்தது. Alice in wonderland இதில் இரண்டாவது புத்தகமாக உள்ளது. நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் நடந்த கதை. அப்போதைய அரசை எதிர்த்து இந்த கதையில் வருகிறது. இந்த புத்தகங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
தமிழ் ஹிந்துவில் பணியாற்றும் ஆதி வள்ளியப்பன் மிகச் சிறந்த உரை ஆற்றினார்.
" கண்ணை மூடிக் கொண்டு நான் எழுதுவது தான் சிறந்ததுன்னு நினைச்சோம்னா நாம் தொடங்கின இடத்திலேயே தான் நிற்போம்.முன்னேற வாய்ப்பில்லை" என்று அழுத்தமாகச் சொன்னார்.
வாண்டு மாமா, தான் கதைகள் எழுத எடுத்துக் கொண்ட விஷயங்களுக்கு back ground work நிறைய பண்ணி இருக்கிறார். கிட்டத்தட்ட 200 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் .இவர் ஒரு சிலவற்றைத் தவிர்த்து, கை வைக்காத விஷயமே இல்லை எனலாம் . பாட்டில் மட்டும் கை வைக்கவில்லை. புதினம் அபுதினம் ரெண்டும் எழுதி இருக்கிறார்.
சரியாக ஆவணப்படுத்தப்படாததால் இன்றைய குழந்தைகளுக்கு வாண்டு மாமா பற்றி தெரியாமல் போய் விட்டது.
அடுத்து ஆர் வெங்கட்ராமன் இளையோருக்கான விஷயங்களை நிறைய எழுதினார். இவர் எழுதிய "ஒரு நாள் போதுமா" என்ற கதை கலைமகளைச் சேர்ந்த " கண்ணன்" பத்திரிகையில் வெளி வந்த்தாகச் சொன்னார் .
பேராசிரியர் ப்ரியதர்ஷினி அருமையான ஒரு வாழ்த்துரை வழங்கினார். பள்ளி, கல்லூரிகளில் உடை, கட்டி இருக்கும் கயிறு போன்றவற்றின் மூலமே ஜாதியம் எப்படி வளர்கிறது என வருத்தத்தோடுசொன்னார். அவர் சொன்னதில் ஒரு கருத்துஎனக்கு ரொம்ப பிடித்தது.
நாம் ஒரு பட்டம் வாங்குறோம்னா அதில் 30 க்கு மேற்பட்டோர் பங்கு உண்டு. ஆசிரியர், பள்ளியில் பணி புரிபவர், பள்ளி டிரைவர் உட்பட. நாம் பெற்றது பல. அதை எவ்வழியிலாவது திருப்பிக் கொடுக்கணும் என்றார். அதற்கு இந்த கதை சொல்லல் ஒரு வழிமுறை.
(தொடரும்)
நாம சின்ன பிள்ளைகளா இருக்கிறப்போ நிறைய கதை கேட்டிருப்போம். எனக்கு குமார்னு ஒரு அண்ணன் உண்டு. பெரியப்பா பையன். திருச்சி. வங்கிப்பணி். கொரோனா பாதிப்பால் இரண்டாம் அலையில் இறந்து போனாங்க. எனக்கு சின்ன வயசுல அவங்களைப் பார்த்ததை நினைச்சால் பாண்ட் ஷர்ட் வெள்ளையில் போட்டு இடையில் கருப்பு பெல்ட்டுடன் அழகான தோற்றம் தான் ஞாபகம் வரும். வாசற் படியில் உட்கார்ந்து , சவுண்ட் எஃபெக்ட்டோட அவங்க சொன்ன கதைகள் அவ்வளவு இனிக்குது இப்போ நினைச்சா?
இப்போ குழந்தைகளுக்கு கதை சொல்ல யாருக்கு ஆர்வம் இருக்குது. ஆனால் அந்த கதைகள் அவர்கள் வாழ்க்கையை எவ்வளவு செம்மைப் படுத்தும் . அதனால் அந்த பணியை நாங்கள் ஒரு சிலர் கையில் எடுத்திருக்கிறோம். தமிழ்நாடு அளவில் பல மாவட்டங்களிலும் நடக்கிறது. மறுபடியும் வீடியோ எடுத்தால் குழந்தைகளின் கண்ணுக்கு சிரமம் அளிக்கும் என்பதால் ஆடியோவில் கதை சொல்லி பதிந்து வாட்ஸ் அப் குழுவில் அனுப்புவோம். இதில் சேரச் சொல்லி என் அன்புத் தம்பி அருண் எனக்கு அழைப்பு விடுத்த போது இது இவ்வளவு சந்தோஷம் தரும் அனுபவமாக இருக்கும் எனத் தெரியாது. நம் நேரத்தைப் பயன்படுத்த கூடுதலாய் ஒரு வழி என்று நினைத்துத் தான் சரி என்று சொன்னேன்.
இது தொடங்கி மூன்று வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் தான் நெல்லைக் கிளை புத்துணர்வுடன் இயங்கத் தொடங்கி இருக்கிறது. தம்பிகள் தேவர்பிரான், அருண் பாரதி, சேது பாலா, தங்கை ப்ரியதர்ஷினி நெல்லையில் முக்கிய பொறுப்பு எடுத்து நடத்துகிறார்கள்.
இந்த ஆண்டு மாநில மாநாடு நெல்லையில் நேற்று நடந்தது. "சிறார் எழுத்தாளர், கலைஞர்கள் மாநில மாநாடு" இந்த கலைஞர்களில் கதை சொல்லிகள், குழந்தை புத்தகங்களுக்கு படம் வரைபவர்கள் எனப் பலர் இருக்கின்றனர்.
சமீபத்தில் நெல்லையில் வன்முறை பள்ளி மாணவர் அளவில் புகுந்து விட்ட நிலையில் இது அவசியத் தேவையாகிறது. குழந்தைகள் அளவிலேயே வாழ்வை நேர்ப்படுத்தி விட்டோம் என்றால் இளைஞர்கள் ஆன பின் கவலைப்பட வேண்டியதில்லை.
இதை வாசிக்கும் உங்களில் யாருக்காவது உங்கள் குழந்தைகளையோ பேரப் பிள்ளைகளையோ (எந்த மாவட்டம் ஆனாலும் சரி) சேர்த்து விட நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் செல்லிலிருந்து கண்களுக்கு விடுதலை கொடுத்து செவிகளுக்கு வேலை கொடுக்கலாம். நிகழ்வை பகுதி பகுதியாக பகிர்கிறேன்.
(தொடரும்)
22 April, 2025
அனைவருக்கும் இனிய புத்தக தின நல் வாழ்த்துகள்.!!
என்னைப் பொறுத்த வரை இது என் பிறந்த நாளை ஒத்தது.
இன்று ஒரு நல்ல விஷயம் ஒன்று உங்களுக்குச் சொல்கிறேன்.
என்னைப் பல நாள் தொடர்பவர்களுக்கு என் தோழி சுபாவை நன்குத் தெரிந்திருக்கும்.
நெல்லையைச் சேர்ந்தவர். நான் படித்த பள்ளியிலேயே எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின் படித்தவர். ஹலோ FM எனக்கு ஒரு சில கண் பார்வை அற்றவர்களை அறிமுகம் செய்தது. அதில் நிலைத்து இருக்கும் நட்பு இவர்களுடையது மட்டுமே.
பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். அன்றைய நாட்டு நிலவரம் அவர்களுக்கு அத்துபடி. பல நேரங்களில் எனக்கு ஒரு இயல்பான தோழியிடம் பேசும் உணர்வே இருக்கும்.
அவர்களிடம் ஒரு சிறந்த பழக்கம் இருந்தது. தனக்கு தோன்றும் பல கருத்துகளை சிலவற்றை உரை நடையிலும் சிலவற்றை கவிதை நடையிலும் சிந்தித்து யாரோடய உதவியோடாவது அதை நோட்டில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இது பல வருடப் பழக்கம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதைகளை புத்தக வடிவில் கொண்டு வந்த போது அவர்களுக்கும் அதை செய்யலாமே என்று தோன்றியது. ஆனால் ISBN எல்லாம் இல்லாத ஒருவர் என் சொந்த தேவைக்காக போட்டுக் கொடுத்ததால் , இன்னும் சிறப்பாக செய்யலாம் என யோசித்தார்கள்.
அது இப்போது ஒரு பதிப்பகம் மூலம் நிறைவேறி இருக்கிறது. முதலில் E- book ஆக வந்தப்போ நான் முக நூலில் தெரிவித்தேன். இப்போ hard copy ஆக புத்தக வடிவில் வந்து விட்டது.
இதில் வெள்ளுவன் அவர்கள் அணிந்துரை எழுத நான் முன்னுரை எழுதி இருக்கிறேன். பின் பக்க அட்டையில் பதிய சுபாவைப் பற்றியும், இந்த புத்தகத்தைப் பற்றியும் எழுதிக் கொடுத்து இருக்கிறேன்.
இவர்கள் இரண்டாவது மகன் பிறந்த பிறகு கண் பார்வை இழந்ததால் ப்ரெயிலி முறை அறியாதவர்கள். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்தில் புத்தகம் போடுவது இன்னும் கொஞ்சம் சுலபமாகலாம். தொடர்ந்து எழுதுங்கள். என்னால் முயன்ற உதவி செய்கிறேன் என்று ஊக்குவித்திருக்கிறேன்.
"எனக்குத் தெரிந்ததெல்லாம் இருட்டு மட்டும் தான். நான் புரிந்மு கொண்ட அளவில் கருத்துக்களைச் சொல்லி இருக்கிறேன்" என்று சொன்னார்கள்.்இவர்கள் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று.
இந்த செய்தியை " உலக புத்தக தினமான" இன்று உங்களுக்குச் சொல்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.
உலக புத்தக தின நல் வாழ்த்துகள்.
21 April, 2025
புத்தகத்தின் பெயர்: கா நா சு நாவல்கள் .
மீடியா மாஸ்டர்ஸ் மூலம் வெளியீடு விலை 150 ரூபாய்
முதல் பதிப்பு 2011
காநா சு படைப்புலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பாளி. குறைந்த அளவிலேயே எழுதினாலும் அவை தவிர்க்க முடியாதவை. தன் முன்னுரையில் நூறு பக்கங்களில் எழுத முடியாதவற்றை ஐந்நூறு பக்கங்களில் எழுத முடியாது என்கிறார்.
நான்கு குறுநாவல்களின் தொகுப்பு. முதல் நாவல் "பெரிய மனிதன்" இதில் வருபவன் உலகம் தன்னை வெற்றி பெற்றவனாக நினைத்தாலும் தான் தோல்வியுற்றதாகவே எண்ணுகிறான். " தன் கதையை கருப்பு மசியில் நல்ல காகிதத்தில் தங்கக் குல்லா அணிந்த பேனாவினால் எழுத உட்கார்ந்ததாகச்" சொல்கிறார். தன்னைப் பற்றிய உண்மை தனக்கே கசந்தாலும் தன் வாழ்க்கையை சொல்லத் தொடங்குகிறார்.
வாழ்க்கையில் வெற்றி என்பது அவரவர் மனதுக்கு தக்கபடி வியாக்கியானம் செய்து கொள்ளலாம் என்கிறார் ஓட்டை காரில் பயணித்தாலும் நடந்து செல்பவனை விட அவன் வெற்றி பெற்றவன் தானே.
தன்னைவிட வயதில் மூத்த , ஒரு குழந்தையுடன் இருக்கும் விதவைப் பெண்ணை இளவயதில் மணந்து கொள்கிறார் . மந்தையில் ஆடாக இருப்பது சுலபம் என்று பலர் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் தன் தனித்தன்மையை நிரூபித்துக் கொள்ள எந்த திருமணம் செய்தோமோ அதனாலேயே தன் வாழ்க்கையை தானே பாழ் செய்து கொண்டோமோ என பின்னாளில் வருந்துகிறார் அந்த பெரிய மனிதர்.
ஆனால் மீனாட்சி தன் சூட்சும புத்தியால் அவரே அறியாத மனோபாவத்தை, அவர் தன்னை காதலித்து மணக்கவில்லை என்பதை கண்டுபிடித்து விடுகிறாள். உலகத்தில் உள்ள பணத்துக்கு எல்லாம் ஈடானது காலத்தின் ஒரு துளி . இதைச் சரிவர புரிந்து கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
வேண்டாதோர் அதிகரிக்க அதிகரிக்க ஊரில் ஒரு மனிதனின் பெரிய மனிதத் தன்மை வளரத் தொடங்கி விடுகிறது என்கிறார். Vice Versa என்றொரு வார்த்தை பிரயோகம் உண்டு. இதனால் அது. அதனால் இது . அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. பெரிய மனிதத் தன்மை அதிகரிக்க வேண்டாதோரும் அதிகரிப்பர். வேண்டாதவர் அதிகரிக்க பெரிய மனிதத் தன்மை அதிகரிக்கும்.
அனுபவத்தால் வரும் வார்த்தைகள் அங்கங்கே அழகாக வந்து விழுகின்றன. " தண்டனையிலிருந்து தப்பி விட்டவன் குற்றத்தின் சுமையை இரண்டு மடங்காக அனுபவிக்கிறான் என்று தான் தோன்றுகிறது "
"வாழ்ந்தவர் கெட்டார்" என்ற இரண்டாவது நாவலில் மனிதனின் சராசரி மனநிலையை மண்டையில் தட்டியது போல் சொல்லி இருப்பார். "சாளரத்தின் வழியாக தர்மப் பத்தினிகள் தங்கள் நாயகர்களைத் தான் பார்த்தார்களோ அல்லது ஆசை கண்களோடு கள்ளக்காதலர்களைத் தான் பார்த்தார்களோ. தம் சொந்த நாயகர்களைத் தான் பார்த்தார்கள் என்று நினைத்துக் கொள்வோமே அதில் நமக்கென்ன நஷ்டம்" என்கிறார்.
ஆனால் பெரும்பாலும் மனிதர்கள் அடுத்தவரை தவறு இழைப்பவர்களாக நினைத்துப் பார்த்துத் தானே திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள் .
கதையில் மம்மேலியார்கள் என்ற ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பற்றிச் சொல்கிறார். ஆடம்பரமாக பெரிய மனிதர்கள் மாதிரி வாழப் பழகிய பின் வறுமையில் மாட்டியும் அந்த பழக்கத்தை விட முடியாதவர்கள். ஏதோ ஒருவர் இருவர் இதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் அவர்களும் ஏதோ குற்றம் செய்தவர் போல் பதுங்கி இரவில் வாழ்வார்கள்.
ஒரு காட்சியில் ரகு, ரகுவின் தோழன் மம்மேலியார். மம்மேலியார் தனது அன்றைய குடித் தேவைக்கு தன்னை எதிர் பார்க்கிறார் என்று தெரிந்தே உடன் சென்று வாங்கிக் கொடுக்கும் ரகுவின் தோழன். தன் தந்தை சேர்த்து வைத்த சொத்தை முழுவதும் அழித்து பழம் பெருமை பேசித் திரியும் மம்மேலியார். தனக்கு மம்மேலியார் மேல் உள்ள கோபத்தில் " நீ வாழவே தகுதியற்றவன்" என்ற சொற்களை உதிர்க்கும் ரகு. அந்த நேரத்தில் அங்கு வந்த ரயிலின் முன் குதித்து உயிர் துறக்கிறார் மம்மேலியார். அவருடைய சாவுக்கு யார் காரணம்.
பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்த மம்மேலியாரா? கெடுதல் என்று தெரிந்தே அவரை அளவுக்கு அதிகமாக குடிக்க அனுமதித்த ரகுவின் தோழனா? கடுமையான வார்த்தைகளை உதிர்த்த ரகுவா? நிகழ்வு நடந்த இடமா? சாவின் நேரம் வரும்போது எல்லாம் கூடி வரும்.
" ஆட்கொல்லி" என்றொரு குறு நாவல். பணக்காரரிடம் பணம் சேருகிறது. ஏழைகளிடம் படிப்படியாக பணம் குறைகிறது. ஆனால் இந்த ஏழைமை மனிதனாக ஏற்படுத்திக் கொண்டதுதான். கிட்ட நெருங்கினால் ஒட்டிக்கொள்ளும் என்பது போல் பயப்படுகிறான்.
கதை சொல்லி தன் மாமா ஆசிரியராக இருந்த பள்ளியிலேயே படித்தாலும் எந்த பாடமும் மாமாவிடம் படித்ததில்லை. தனக்கு எந்த விஷயத்தில் சந்தேகம் வந்தாலும் மாமாவுக்கும் அதே இடத்தில் சந்தேகம் வந்துவிடும் என்கிறார். ஆசிரியர் மாமா எத்தகைய ஆசிரியர் என்பது தெள்ளத் தெளிவாகி விடுகிறது.
" பணத்தாசை இல்லாமல் கடவுள் பக்தி மட்டும் உடையவர்கள் பரம ஏழைகளாக இருப்பதை பார்க்கிறோம்" என்கிறார். உண்மைதானா என்ற கேள்வி எழும்புகிறது. பரம ஏழை எப்படி பணத்தாசை இல்லாமல் இருக்க முடியும்.
வெங்கடாசலம் என்ற கதை நாயகனின் மாமா , மாமியின் குணாதிசயங்களை அலசுவதிலேயே பெரும் கதைப் பகுதி போவதால் எனக்கு இந்தக் கதை அவ்வளவு ரசிக்கவில்லை.
" நளினி" என்பது நான்காவது கதை. நாயகன் சீதாராமன் தன் குடும்பம் உயர எவ்வளவு உதவும் என்றாலும் தன்னைவிட புத்திசாலியான பெண்ணை மணக்க விரும்பவில்லை என்கிறான். காலமாற்றத்தால் நல்ல முயற்சி. தன்னைவிட புத்திசாலி பெண்ணை மணக்க ஆண் தற்போது தயாராக இருக்கிறான். ஆனால் தன்னிடம் மட்டும் முட்டாளாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். நாயகி நளினியை ' எவ்வளவு சாமர்த்தியசாலி ஆனாலும் ஒரு அயோக்கியனுடன் வாழ தான் விரும்பவில்லை " என்ற தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். இதனாலேயே இத்தகைய எழுத்தாளர்கள் காலம் கடந்தும் நிற்கிறார்கள்.
20 April, 2025
என்னைப் போலவே நட்பைத் தேடுபவர் ஒருவர் சமீபத்தில் எனக்கு அறிமுகமானார். பெயர் விஜயலக்ஷ்மி. "கரிசல்" என்றொரு வாட்ஸ்அப் குரூப்பில் நானிருக்கிறேன். அதில் அட்மின் வாரம் ஒரு கதை சொல்ல நாங்கள் எல்லாம் கதை பற்றிய எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம். அதில் நான் வேடிக்கையாக " நானும் கணக்கு டீச்சர் தான்" என்று ஒரு கமென்ட் போட்டேன். ஆம் நான் B.Sc B.Ed கணிதம் படித்ததை இப்படித் தானே நினைவு படுத்திக் கொள்ள முடியும்.
மதுரையிலிருந்து ஒரு நாள் ஒரு தோழி அழைத்தார். அவர் 70+ வயதுடையவர். என் எண்ணை கரிசல் குழுவிலிருந்து எடுத்து அழைத்தார். எனக்கு அறிமுகம் இல்லாதவர். " என்னோட கணிதம் படித்த ஒரு மாணவியை நாங்கள் தேடிக் கொண்டு இருக்கிறோம். உங்க நெல்லை அருகில் உள்ள பணகுடியில் தான் கணித டீச்சராகப் பணி புரிந்தார். நீங்களும் கணித டீச்சர் என்று போட்டு இருந்ததால் அழைத்தேன். நீங்கள் முயற்சி பண்ண முடியுமா? ' எனக் கேட்டார்.
நானும் பல வகைகளில் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் அந்த தோழி பள்ளி ஆட்டோகிராஃபிலிருந்து அவர்களின் முகவரியைத் தேடி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். " நம் பள்ளி மாணவிகள் சந்திக்க இருக்கிறோம். உன்னிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த கடிதம் கண்டதும் கவரில் உள்ள என் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்" என எழுதி அனுப்பி இருக்கிறார்.
தேவ நேசம் என்ற பெண் பெயரை தேவ நேசன் என்ற ஆணாக நினைத்து தேடிய பணகுடி போஸ்ட் உமன் அதை அலட்சியப்படுத்தாமல் தேடியவர்களை அலைபேசியில் அழைத்து " இந்த முகவரியில் இப்படி ஒரு ஆண் இல்லை" என்னும் போது தான் பெண் ஆணாக மாறிய தவறு புரிந்திருக்கிறது. " எனக்கு 72 வயது. என்னுடன் படித்த தோழியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். அவர் தேவ நேசன் அல்ல தேவ நேசம்" என்றதும். அந்த பெண் விசாரிக்கிறேன் என்றிருக்கிறார்.
அரசு ஊழியர்கள் சரியாக வேலை பார்ப்பதில்லை என்று ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது.
ஆனால் இந்த போஸ்ட் உமன் விசாரித்து அந்த பெண் ஓய்வுக்குப் பிறகு ஊர் மாறிச் சென்று விட்டதாகவும், ஆனால் அவர்களுடைய பெரியப்பா வீடு பக்கத்தில் இருப்பதாக விசாரித்து அறிந்து, அவர்களிடம் இந்த கடிதத்தைக் கொண்டு கொடுத்து அந்தத் தோழிகள் பேசிக் கொண்டார்கள்.
வேலை இல்லாமல் நான் என் பழைய தோழிகளைத் தேடிக் கண்டுபிடித்து தொடர்பு கொள்வதாக ஒரு எண்ணம் என் வீட்டில் இருக்கும் போது என்னைப் போலவே ஒருவர், என்னை விட வயதில் பெரியவர் , நோயினால் அதிகம் நகர முடியாமல் படுக்கையில் இருப்பவர் , விடா முயற்சியோடு தேடி ஒரு தோழியைக் கண்டு பிடித்து விட்டது ஒரு ஆச்சர்யம்.
கடிதம் எழுதும் மரபு மறைந்து வரும் இக்காலத்தில் ஒரு சாதாரணத் தபாலை "இந்த முகவரியில் சம்பந்தப்பட்டவர் இல்லை" எனத் தூக்கிப் போட்டு விடாமல் அழைத்துப் பேசி சம்பந்தப்பட்டவரின் உறவினர் மூலம் கண்டு பிடித்து கடிதத்தைச் சேர்த்தவர் ஒரு அரசு ஊழியர். இது இரண்டாவது ஆச்சர்யம்.
இவர்கள் ஒரு புறம் தேட , கல்வி அதிகாரி ஒருவர் இன்னொரு புறம் தேட எப்படியோ தோழர்கள் இணைந்து விட்டார்கள்.
ஒரு திரைப்படத்தில் சிவாஜியும், கே ஆர் விஜயாவும் பல ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தொலைபேசியில் பேசியதை உணர்வு பூர்வமாகப் பார்த்து கண்ணீர் விட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். பழைய உறவுகள் கிடைத்த சந்தோஷத்தை இளைய தலைமுறையால் புரிந்து கொள்ள முடியுமா? சந்தேகம் தான்.
நான் அவர்களிடம் நானும் என் தோழியைத் தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னதும் அவள் சம்பந்தப்பட்ட ஒரு தகவலையும் விசாரித்துச் சொன்னார்கள்.
தரும்புரியில் கல்வித் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றதாகச் சொல்லும் என் தோழி செந்தமிழ் செல்வியையும் , ஒரு வருடமே ஆனாலும் என்னோடு B.Ed படித்து பின் தகவலே தெரியாமல் போன தோழி சுசிலாவையும் யாராவது கண்டு பிடித்து தாங்களேன்.
18 April, 2025
# நேசக் கூட்டின் திறவுகோல்.
எழுதத்தூண்டிய தலைப்பைத் தந்த நண்பர் நவாஸுக்கு நன்றி.
எனக்கு கல்லூரி நாட்களில் வாசித்த ஆட்டோகிராஃப் ஒன்று ஞாபகம் வருகிறது. அட்சர சுத்தமாய் வார்த்தைகள் ஞாபகம் இல்லை. ஆனால் கருத்து நினைவில் உண்டு.
"என் இதயக் கதவை உனக்காகத் திறந்து வைத்தேன். உன் வரவுக்காகக் காத்திருந்தேன். நீ நுழைந்ததும் கதவைப் பூட்டி சாவியை ஜன்னல் வழியே கடலில் எறிந்தேன். இனி வெளியேறுதல் என்பது உனக்குமில்லை. எனக்குமில்லை. "
இது தான் ஆட்டோகிராபின் சாராம்சம். இது அந்த வயதில் இருக்கும் அதிகப்படியான பொஸசிவ்நெஸ் . ஒருவர் கிடைத்து விட்டால் அவரை முழுவதுமாக தமக்கே என வைத்துக் கொள்ளத் துடிக்கும் ஆர்வத்தின் உச்ச பட்ச வெளிப்பாடு.
ஆனால் வயது அதிகமான பின் எனக்குத் தோன்றுவது அந்த நேசக் கூட்டின் திறவுகோலை நாம் நேசிப்பவரிடமே கொடுத்து வைத்து உனக்கு எப்போது என்னை விட்டு விலகத் தோன்றுகிறதோ அப்போது கதவைத் திறந்து நீ போகலாம் . என்ற உரிமையைக் கொடுத்து வைத்தால் நாமும் நாம் நேசிப்பவரும் சுதந்திரமாக சுவாசிக்கலாம். அழுத்தமற்ற அன்பை அனுபவிக்கலாம். நம் நேசக் கூட்டின் திறவுகோலை நாம் நேசிப்பவரிடமே கொடுத்து வைப்போம்.
இது அனேகமாக நேசிப்பவரை நம்மிடமே இருத்தி வைக்கும்.
14 April, 2025
எழுத்தாளர் நாறும்பூநாதனைப் பற்றி சொல்ல விட்டுப் போன சில விஷயங்கள். மனிதாபிமானம் மிகுந்த ஒரு மனிதரைப் பற்றி நாம் அறிந்தவற்றை விட்டு விடாமல் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என நினைப்பதாலேயே பல பதிவுகள். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நட்பாக இருந்த உதயசங்கர் சார் பேசும் போது அவர் மனிதர்களை எவ்வளவு மதித்திருந்திருக்கிறார் நேசித்திருந்திருக்கிறார் என்பது புரிந்தது.
->அவர் மகன் திலக் பேசும் போது " எங்க அப்பா வீட்டைக் கவனிக்காம வெளியே அதிகம் போனதாக ஒரு சிலர் சொல்றாங்க. அவர் எங்களுக்கும் செய்ய வேண்டிய எல்லாம் செய்தார். என் அப்பா எல்லாவற்றையும் சரியாகத் தான் செய்தார். அவரைப் பற்றி யாராவது தவறாகச் சொன்னால் நிச்சயம் 100% சொல்பவர் தான் தவறானவராக இருக்க வேண்டும்" பெற்ற பிள்ளை சரியாகப் புரிந்து கொண்ட பிறகு வேறென்ன வேண்டும்.
-> நாதன் சாருடைய அண்ணன் மணி ஒரு விஷயம் சொன்னார். நாதன் காரை மிக நிதானமாக ஓட்டுவாராம். ஒரு முறை எல்லோரும் போய்க் கொண்டிருந்த போது காரை ஒரு ஓரமாக நிறுத்தினாராம். எதற்கென்றால் பறந்து வந்து காரின் வைப்பரில் ரெக்கை மாட்டிக் கொள்ள படபடத்துக் கொண்டிருந்த ஒரு பட்டாம்பூச்சியை எடுத்து பறக்க விட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தாராம். இவர் மனிதர்களிடம் அன்பாக இருந்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
-> ஏழை எளியவர்களிடம் பழகியதைப் போலவே அவரால் அதிகாரிகளிடமும் பழக முடிந்திருக்கின்றது. அதனாலேயே வலு குறைந்தவர்களுக்குத் தேவையானதைப் பெற்றுத் தர முடிந்திருக்கிறது.
-> சட்ட மன்ற உறுப்பினர் திரு அப்துல் வஹாப் தன் பேச்சில் குறிப்பிட்டது போல பாழடைந்து பல சமூக குற்றங்கள் நடக்கச் சாதகமான இடமாக இருந்த மேடைப் போலீஸ் ஸ்டேஷனை , பல அரசு அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் அழைத்துச் சென்று காட்டி இன்று அழகு மிகுந்த ஒரு இடமாக மாற்றியதில் பெரும் பங்கு நாறும்பூநாதன் சாருடையது.
-> இயக்குநர் சுகா அவர்கள் கண்ணீரை தடுக்க முடியாமல் பேசிய போது நம்மாலும் கண்ணீருக்குத் தடை போட முடியவில்லை. அவர் உதவி செய்த சிலருடைய பெயர்களை குறிப்பிடுகின்றோம் ஆனால் பிறருக்குத் தெரியாமல் பலருக்கு உதவி செய்து இருக்கிறார்.
-> ஓவியர் பொன் வள்ளி நாயகத்துக்கு மிகுந்த ஆதரவாக இருந்து நெல்லையில் சாகித்திய அகடமி விருது பெற்றவர்களின் புகைப்படங்களை வரைந்து நெல்லை புத்தக கண் காட்சியில் வைத்தது முதல் சென்னை அண்ணா நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைப்பது வரை பெரும் உறுதுணையாக இருந்திருக்கிறார் நாறும்பூநாதன்.
நம் முயற்சியில் நாம் முன்னேறுவதைப் பார்த்தே பொறாமைப்படுபவர்களின் ்மத்தியில் பலருடைய திறமைகளை கண்டறிந்து அவர்கள் வெளியுலகத்துக்குத் தெரிய பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்.
அரசு அதிகாரி ரேவதி அவர்கள் பேசும் போது தனக்கு அவர் தந்த ஊக்கத்தால் தான் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டதாக குறிப்பிட்டார். அவர் பேச்சில் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம் நம் அனைவருக்கும் பயன் படக் கூடியது. " யாரையாவது சந்திக்க வேண்டும் என நினைத்தால் உடனே சந்தித்து விடுங்கள். யாரிடமாவது பேச வேண்டும் என்று தோன்றினால் உடனே பேசி விடுங்கள். ஏனென்றால் தள்ளிப் போடுவதால் தவற விட நேரிடும். நாளை அவர் இல்லாமல் போய் விடலாம் என்றார்.உண்மை.
தொகுத்துச் சொன்னால் நாறும்பூநாதன் தன்னை அறுத்து ஒறுத்து அடுத்தவருக்கு உதவி இருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் அடுத்தவர் உயர உதவி இருக்கிறார். இறந்து போன பலரையும் உயிரோடு வைத்தவர் என்று பேசினார்கள். ஆம் மறந்து போயிருக்கக் கூடிய பலரைப் பற்றிய தகவல்களைத் தேடிச் சேர்த்து ஆவணப்படுத்தி இருக்கிறார். சிறந்த கம்யூனிஸ்ட் என்பவர் முதலில் சிறந்த மனிதராக இருக்க வேண்டும். அந்த வகையில் தோழர் நாறும்பூநாதன் ஒரு மிகச் சிறந்த கம்யூனிஸ்ட். அவர் தெய்வத்தை நம்பாதவராக இருந்திருக்கலாம்
ஆனால் தெய்வ குணம் நிறைந்தவராக இருந்திருக்கிறார்.
போற்றுவோம். பின் தொடர்வோம்.
09 April, 2025
"வார்த்தை" என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. பைபிளில் " வார்த்தை மனுவானார். நம்மிடையே குடி கொண்டார்" என்று வருகிறது. மற்ற மதங்களிலும் மந்திரங்கள் என்பது திருப்பித் திருப்பி சொல்லப்பட்ட வார்த்தைகளால் வலு பெற்றது. நல்லவற்றையே பேச வேண்டும். ஏதோ தீய ஒன்றைச் சொல்லும் போது வானிலுள்ள தேவதைகள் "ததாஸ்து" என்று சொல்லி விட்டால் "அப்படியே ஆகட்டும் என்ற அவற்றின் ஆசீர்வாதத்தால் தீயவை நிகழ்ந்து விடும் என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
வார்த்தை என்பது அவ்வளவு சக்தி வாய்ந்தது. ஆனால் பலர் அதை அறியாமல் மோசமான வார்த்தைகளை உச்சரிப்பதை நாகரீகமாக எண்ணி , திரைப்படங்களிலும், பாடல்களிலும், சோஷியல் மீடியாக்களில் கமென்ட்டுகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
இந்த அவசர உலகில் வார்த்தைகள் கூட சுருங்கி ஸ்மைலிகளாகி விட்டன. ஒரு முழு வார்த்தையை ஒரு எழுத்து உணர்த்தி விடுகிறது. "K" என்று மட்டும் சொல்வது நாம் ஒரு விஷயத்துக்கு உடன்படுவதாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரு விஷயத்தை நாம் சொல்லும் விதமே அதை எதிரிலிருப்பவர் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கவும் காரணமாகி விடும். வார்த்தைக்குச் சமமாய் அதைச் சொல்லும் தொனியும் முக்கியம் வாய்ந்தது. முக்கியமாக அலை பேசியில் பேசும் போது நம் தொனியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இன்று திருமணத்துக்கும் நிச்சயத்துக்கும் இடையே மண மக்கள் அதிகம் பேசிக் கொள்வதாலேயே பல விஷயங்கள் புரிந்து இருவருக்குமிடையே திருமணம் ஒத்து வராது என்று தெரிந்து திருமணங்கள் நிறுத்தப் படுகின்றன. விவாகரத்துக்கு அது பரவாயில்லை தான்.
அதிகம் பேசாதவர்கள் நல்லவர்கள் என்ற கருத்து நம்மிடையே இருக்கிறது. அவர்கள் நினைப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போகும். அதனால் எனது விருப்பம் பேசா மடந்தைகளைக் காட்டிலும் லொட லொடப்பவர்களே.
29 March, 2025
நெஞ்சுக்கும்
வயிற்றுக்குமிடையே
வட்டமிடும்
பட்டாம்பூச்சியின்
மென்னி திருகி
இளங் காதலின்
பரவசத்தை
புதைத்து மூடிய
மிதப்பில்
என்னை யாருமினி
ஏங்கி அழ விட
முடியாது.
உதடு பிதுக்கி
புலம்ப விட
முடியாது.
கண்ணீர் முட்ட
கலங்க வைக்க
முடியாதென
இறுமாந்திருந்தேன்.
தோற்றுப் போய்
பட்டாம்பூச்சிப்
படபடப்பு
இளங் காதல்
பரவசத்தை
பிரசவிக்க
உணர்ந்தேன்
காதலென்பது
முற்றாய்
அழிக்க முடியா
அணுக்களென.
# அழுகை பலமா பலவீனமா?
நம் அடிப்படைக் குணங்கள் சிறு வயதிலேயே வெளிப்பட்டு விடும். நான் பொதுவாகவே அவ்வளவு சீக்கிரத்தில் அழுது விட மாட்டேன். அழுகை நம் பலவீனம் என நினைப்பேன்.
என் சின்ன வயதில் , அனேகமா எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும். அப்போ நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். அதன் பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அழுகை பலமா பலவீனமா என்று.
எங்க வீட்டுக்கு எதிரே ஒரு மாரி அம்மன் கோயில் உண்டு. தசரா சமயங்களில் அங்கிருந்து கிளம்பும் தேரை வேடிக்கை பார்க்க என் தோழிகளோட குடும்பந்தோட போவேன். என் தங்கை என்னை விட இரண்டு வயது இளையவள். மூத்தவர்களின் கொடுக்கு தானே இளையவர்கள். அவளும் என் கூடவே வருவாள்.
ஒரு நாள் தேரைப் பார்த்துக் கொண்டு பின்னாலேயே போய் விட்டோம். அது நாலு தெரு சுத்தி வரும். வீட்டுல ரொம்ப நேரம் தேடி இருக்காங்க. திரும்பி வந்ததும் அப்பா கதவைத் திறக்க மாட்டேன்னுட்டாங்க.
எனக்கு எப்படியும் திறந்து விட்டுடுவாங்கன்னு தெனாவட்டு. அது இரவு நேரம். என் தங்கை "அப்பா இனி செய்ய மாட்டேன்னு" ஒரே அழுகை. கொஞ்ச நேரத்தில் கதவைத் திறந்து அவளை மட்டும் உள்ளே கூட்டிக்கிட்டு" கல்லுளி மங்கி அழுகை வருதா பாரு" ன்னு என்னைப் பார்த்து ஒரு முறை முறைச்சு சொல்லிட்டு போயிட்டாங்க.
நான் வாசல்ல உட்கார்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் என்னையும் உள்ளே கூட்டிக்கிட்டாங்கன்னு வையுங்க. இப்போ சொல்லுங்க அழுகை பலமா பலவீனமான்னு.
என்ன நான் சொல்லணுமா? அது இன்னும் புரியாமத் தானேங்க தலைப்பே கொடுத்திருக்கிறேன்.
Hotstar இல் "A Thursday" என்றொரு ஹிந்தி படம் பார்த்தேன்.
படத்தின் இயக்குநர்: Behzad Khambata.
பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்பை பேசிப் பேசியே கடந்து போகிறோம். ஆனால் அப்படி, தான் பள்ளிக்கு சென்று வரும் வழியில் வானில் கடைசியாக தனியாக இருக்கும் ஒரு பெண் குழந்தை டிரைவர் மற்றும் ஒருவரால் சீரழிக்கப்பட. குழந்தையின் தாய் பல வருடங்கள் அலைந்தும் காவல் துறையின் நேர்மை அற்ற போக்கினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை.
பாதிக்கப்பட்ட பெண் ( யாமி கௌதம்) வளர்ந்து, நடத்தும் ஒரு ப்ளே ஸ்கூலுக்கு அதே டிரைவர் ஒரு குழந்தையை அழைத்து வருவதைப் பார்த்து பதினாறு குழந்தைகளுடன் அந்த டிரைவரையும் தற்செயலாக மாட்டிக் கொண்ட ஒரு வேலைக்காரப் பெண்ணையும் சேர்த்து அறையில் அடைத்து வைத்து போலீஸின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறாள்.
குழந்தைகளுடன் பேசும் போது முகத்தில் ஒரு குழைவும் அடுத்த நொடி இறுக்கமுமாக அந்த பெண் நடிப்பில் தூள் பரத்துகிறாள். அதே போல் பிரதம மந்திரியாக வருபவரும் ( டிம்பிள் கபாடியா) அழகும் கம்பீரமுமாக நம்மை கவர்ந்து விடுகிறார்.
வயிற்றில் குழந்தையுடன் பதட்டத்தோடும் பொறுப்போடும் வளைய வரும் காவல் துறை அதிகாரியாக வரும் பெண்ணும் ( Neha Dhupia) நம் மனதை விட்டு நீங்க வெகு நாளாகும்.
இது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பால் நேரும் விளைவை விளக்கும் படமாதலால் முக்கியமான கதா பாத்திரங்களை எல்லாமே பெண்களாக படைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
அதுல் குல்கர்னியும் கரண்வீர் ஷர்மாவும் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திரிக்கிறார்கள்.
குழந்தைகளை விடுவிக்க குற்றவாளி பிரதம மந்திரியிடம் வைக்கும் கோரிக்கை பெண் குழந்தைகளைப் பெற்ற அத்தனை பேருக்கும் ஏன் எல்லோருக்குமே சரியெனவே தோன்றும்.
தவற விடக் கூடாத ஒரு நல்ல படம்.
# தடுமாறிய தருணங்கள்.
அழகான தலைப்பு.
தடுமாறாத மனிதன் யாரு?
தடுமாறப் பயந்து இயங்காத மனிதன் வெற்று மனிதன். அவனை விட விழுந்து விழுந்து எழுபவன் எவ்வளவோ மேல்.
ரொம்ப வருஷங்களுக்கு முன்னால திருச்சியில ஒரு நெருங்கின சொந்தத்தோட திருமணத்துக்கு போனேன் தனியாக. திருச்சிக்குள்ள ஒரு லோக்கல் பஸ்ஸில் ஏறினேன் . உட்கார இடம் கிடைத்த சந்தோஷம். எனக்கு பொதுவாகவே மூணு பேர் அமரும் சீட்டில் நடுவில் உட்காரப் பிடிக்காது. சான்ட்விச் ஆகிடுவோம். அன்று சரியான கூட்டம். வேற வழியில்லை. நடுவில் மாட்டிக் கொண்டேன்.
அமர்ந்த கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கிறக்கி விட்டது. அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் என் அருகில் இருந்த பெண் மெல்ல என் கைப்பையைத் திறந்து பர்ஸை எடுத்து மூடியும் விட்டு இறங்கி விட்டாள்.
நான் இறங்கினதும் அங்கே ஒரு பரிசுப் பொருள் விற்கும் கடை இருப்பது தெரிந்து வாங்கச் சென்றேன். பரிசுப் பொருளைத் தேர்ந்து எடுத்து விட்டேன். பணம் கொடுக்கத் தேடினால் பர்ஸைக் காணோம்( இப்போ அந்த பிக் பாக்கெட் காரங்க எல்லாம் என்ன வேலைக்குப் போயிருப்பாங்க. இது ஜீபே யுகமாச்சே. )
என் பதற்றத்தைப் பார்த்து கடைக்காரர் "எல்லா பொருளையும் எடுத்து வெளியே வச்சு பொறுமையாத் தேடுங்க"ன்னார். இல்லை பறி போய் விட்டது. அப்போ அந்த கடைக்காரர் செய்த விஷயம் தான் பதிவு எழுதத் தூண்டியது.
"நீங்க கொண்டு போங்க. திரும்பி வரும் போது பணம் கொண்டு வந்து கொடுங்க"ன்னார். வெளியூர்க்காரப் பொண்ணான என்னை எது அவரை நம்பத் தூண்டியது. இன்று இது நடக்க வாய்ப்பிருக்கிறதா?
அந்த தடுமாறிய தருணத்தில் அவர் எனக்குத் தெய்வமாகத் தோன்றினார். "அங்கே பணம் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை. ஊருக்குத் திரும்பிப் போக பணம் தரேன். மொத்தமா மணி ஆர்டர் பண்ணிடுங்க"என்றார்.
நான் திருமணம் முடிந்து என் அக்காவை அழைத்து விஷயத்தைச் சொல்லி பணம் பெற்றுத் திரும்பும் போது கடையில் கொடுத்து ஊருக்குத் திரும்பினேன்.
அவ்வளவு அருமையான உலகத்தில் வாழ்ந்த நாம் இப்போ பார்ப்பது என்ன! எவரொருவரையும் சந்தேகக் கண்ணோடே பார்க்கிறோம். ஏமாந்து விடக் கூடாது என்று எப்போதும் உஷாராகவே இருக்கிறோம்.
காலம் மாறிப் போச்சா?
கெட்டுப் போச்சா?
24 March, 2025
# சுட்டு விடும் நிஜங்கள்.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிள்ளை வாழாமல் தனித்திருப்பது இன்று நம் கண் முன்னே காணும் வருத்தமான நிஜம்.
குடும்பத்தில் ஆண்கள் பெண்களை அடிப்பதும், அராஜகம் பண்ணுவதும் அன்று வழக்கமாய் இருந்தது. தன் தாய் கஷ்டப்படுவதை பார்த்து வளர்ந்த பெண் குழந்தைகள் நாம் ஆரம்பத்திலேயே இடம் கொடுத்து விடாமல் துணிச்சலாய் இருக்க வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் எதிர்த்து நிற்பது இன்று பல விவாகரத்துகளுக்குக் காரணம் என்பது சுட்டு விடும் நிஜம்
அன்று பெண் குழந்தைகள் கணவரையோ அவர் குடும்பத்தையோ குறை சொல்லி பெற்றவரிடம் வந்தால் "இது பெரிய விஷயமில்லை அனுசரித்து வாழ்" என்று சொல்லிக் கொடுத்தார்கள். இன்றோ " கண்ணின் மணி போல் நாங்கள் பிள்ளையை வளர்த்தது இவர்கள் கஷ்டப்படுத்தவா. முடிஞ்சா பாரு இல்லைன்னா வந்திடு " என்பது இன்றைய பெற்றோரின் போதனையாய் இருப்பதும் விவாகரத்துகளுக்கு ஒரு காரணம் என்பது சுட்டு விடும் நிஜம்.
வரவுக்கேத்த செலவு செய்யணும் என்பது போய் வானளவு ஆசை வளர்த்து திருமணத்தை ஹெலிகாப்டரில் நடத்துவோமா கப்பலில் நடத்துவோமா என்று யோசிப்பதும், தன் அளவில்லாத ஆசைகளை தீர்க்கக் கூடியவனையே திருமணம் செய்ய காத்திருப்பதும் திருமணமாகாத முதிர் கன்னிகளும் இளைஞர்களும் பலரிருக்கக்
காரணம் என்பது சுட்டு விடும் நிஜம்.
திருமணமாகுமுன் தன் சகோதரிகள் திருமணத்துக்காகவும், தனக்குத் திருமணமான பின் தன் மனைவி மக்களுக்காகவும் உழைப்பது தன் கடமை என நினைத்து வாழ்ந்த தன் தந்தையர் கதை கேட்ட இளைஞர்கள் ஆரம்பத்திலேயே சுதாரிப்பதாய் நினைத்து பொறுப்பவர்களாய் மாறிப் போவதும் அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கு ஒரு காரணம் என்பது சுட்டு விடும் நிஜம்.
வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது கணவன் சொல்வதையே வேத மந்திரமாய் நினைக்கும் பெண்ணை தாயாய் பார்த்து வளர்ந்த ஆணின், பொருளாதாரத்தில் தன்னைத் தாங்கிப் பிடிக்க வேலைக்குச் செல்லும் பெண் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதைப் புரிந்து கொள்ளாத, ஏற்றுக் கொள்ளாத ஈகோவும் பல விவாகரத்துக்களுக்கு காரணம் என்பதும் சுட்டு விடும் நிஜம்.
இப்படி சொன்ன சிலவும் சொல்லாத பலவும் சுட்டு விடும் நிஜங்கள்.
22 March, 2025
Amazon prime ல சுழல் பார்த்தேன். ஆமா சுழல் 1 பார்த்து ரொம்ப நாள் ஆகிட்டதால அதை மறுபடியும் பார்த்திட்டுத் தான் சுழல் 2 பார்த்தேன்.
கண்டிப்பா பாருங்க ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க.
பல விஷயங்கள் பிடித்திருந்தாலும் பிடிக்காத ஒண்ணு ரெண்டு விஷயங்களும் இருக்குது. அதையும் சொல்றேன்.
பிடித்த விஷயங்கள்:
கோயில் திருவிழாவை மிகவும் சிரமப்பட்டு நிறைய பேரை வைத்து ஷீட் பண்ணி இருக்கிறாங்க. பாராட்டுகள். சூரசம்ஹாரம் நேரில் போய் பார்க்காத பலருக்கும் பார்த்த திருப்தி கிடைக்கும். வேஷம் கட்டியவர்கள் கடைசி நாள் ஏன் கடலில் முங்கி தன் வேஷம் கலைக்கிறாங்கங்கிறதுக்கான காரணம் ரொம்ப சூப்பர். தான் என்ற அகந்தை தானே பல பிரச்னைகளுக்கும் காரணமா இருக்குது. அதை வேஷத்தோடு சேர்த்து கரைக்கத்தான் என்கிறார்கள்.
அந்த தம்பி கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இரண்டிலும் கலக்கி இருக்கிறாங்க. கூடவே லாலும். கதிர் நடிப்பு underplay. வரம்பு மீறாத மெல்லிய காதல் இரண்டிலுமுண்டு.
எடுத்துள்ள கரு மிகவும் வலுவானது. இன்றைய தேதிக்கு இன்றியமையாதது.
சிறு குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல். நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்களால் தான் இது நடக்கிறது. அவர்களை நம்பி நாம் குழந்தைகளை விடுவதால்.
போட்டோகிராஃபி ரொம்ப அருமை. முக்கியமாக கடலில் படகில் வரும் சேஸ் மிக அருமையாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
பிடிக்காத விஷயம். ஏற்கனவே ஆண்கள் படத்தில் நடத்தும் வன்முறை மிக அதிகமாக இருப்பதாக என்னைப் போன்ற பலர் எண்ணும் இச்சமயத்தில் இந்த சீரிஸில் பெண்கள் பெண்கள் மேலேயே நடத்தும் வன்முறை மிகவும் அதிகம்.
பெண்கள் பெண்களை நெஞ்சிலேயே எட்டி மிதிப்பதாக வரும் போது நமக்கு குலை நடுங்கி விடுகிறது.
மொத்தத்தில் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டிய நல்ல வெப் சீரீஸ்
17 March, 2025
இரவானால்
உன் கரங்களின்
அணைப்புக்குள்
கற்பனையாய்
அடங்கி விடுகிறேன்.
புரண்டு படுக்க
முடியாமல் நீ
என்னைப் புறம்
தள்ளுவதில்லை.
பாரமாய்
அழுத்துகிறேனென
புலம்புவதுமில்லை.
அணைப்பைக்
கொண்டு
கலவியில் முடிக்க
என் அலுத்த உடலை
அவசரப்படுத்துவதில்லை.
அகால வயதில்
கரு தாங்கி , அலமந்து
கூனிக் குருகி
பெண் மருத்துவரின்
பார்வைக் குறுவாளின்
பலி ஆக வேண்டியதில்லை.
இரவானால்
உன் கற்பனை
அரவணைப்பில்
அற்புதமாய்
உறங்கி விடுகிறேன்.
06 March, 2025
#இயற்கையின் மனிதாபிமானம்
நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே இயற்கையின் மனிதாபத்தினால் தான்.
இந்த பதிவின் முடிவில் நீங்களும் என் கருத்துக்கே வந்து விடுவீர்கள்.
இயற்கை என்பது ஐந்து முக்கிய பகுதிகள் கொண்டது. அவை நிலம், நீர், காற்று, வானம், அக்னி.
நிலம் தன் உடலை குலுக்கிக் கொண்டு கொஞ்சம் சரிந்தால் நிலச் சரிவு. இன்னும் கோபம் அதிகம் கொண்டால் பகலில் சரியாமல் இரவில் மக்கள் உறங்கும் போதே சரிந்து அப்படியே கபளீகரம் பண்ணும்.
நீர் :நிலம் தாய் என்றால் கடல் என்பது தாயின் தாய். அம்மம்மா. அவ்வளவு எளிதில் கோபப்படாது. தன்னிடம் வரும் பேரப் பிள்ளைகளிடம் அலை அலையாய் விளையாடும் அம்மம்மா கோபம் அதிகரித்தால் சுனாமியாய் வந்து மொத்தத்தையும் சுருட்டிச் செல்லும்.
வானம்: அந்த அம்மம்மாவின் தங்கையான சின்னப் பாட்டி மழை அன்பாய் மழை பொழியா விட்டாலும் சிக்கல். எக்கச் சக்கமாய் பெய்தாலும் சிக்கல்.இந்த மழையை சரியான அளவில் , நேரத்தில் தந்து நம்மைக் காப்பது வானம்.
சூறாவளியாய் காற்று அச்சுறுத்தாமலும் , அடர் நெருப்பாய் பரவி காடுகளைக் கூட விட்டு வைக்காமல் பஸ்பமாக்காமலும் நம்மைக் காக்கும் அப்பாவாய், அண்ணனாய் காற்றும் நெருப்பும்.
இப்போ சொல்லுங்க நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே இயற்கை மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதால் தானே.
நாம் மனிதாபத்தோடு நடந்து இயற்கையை கோபப்படுத்தாமல் பாதுகாத்து நாமும் பாதுகாப்பாய் இருப்போம்.
04 March, 2025
பட்டாம்பூச்சி மென்னி திருகி
நெஞ்சுக்கும்
வயிற்றுக்குமிடையே
வட்டமிடும்
பட்டாம்பூச்சியின்
மென்னி திருகி
இளங் காதலின்
பரவசத்தை
புதைத்து மூடிய
மிதப்பில்
என்னை யாருமினி
ஏங்கி அழ விட
முடியாது.
உதடு பிதுக்கி
புலம்ப விட
முடியாது.
கண்ணீர் முட்ட
கலங்க வைக்க
முடியாதென
இறுமாந்திருந்தேன்.
தோற்றுப் போய்
பட்டாம்பூச்சிப்
படபடப்பு
இளங் காதல்
பரவசத்தை
பிரசவிக்க
உணர்ந்தேன்
காதலென்பது
முற்றாய்
அழிக்க முடியா
அணுக்களென.
27 February, 2025
#என் ஜன்னலுக்கு வெளியே
என் ஜன்னலுக்கு வெளியே நான். என்ன ஆச்சர்யமா இருக்குதா? ஒரு கால கட்டத்தில் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டு ஜன்னலில் அமர்ந்து எங்க வீட்டை அதாவது "என் ஜன்னலுக்கு வெளியே" இருந்து எங்க வீட்டை பார்க்க நேர்ந்தது.
சொல்றேன் சொல்றேன். இருங்க. என் காதல் திருமணத்தால் எங்க வீட்டுக்குள் எனக்கு அனுமதி இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கருவைச் சுமக்கத் தொடங்கி விட்டேன்.்
எல்லோருக்கும் மசக்கை காலத்தில் ஏதாவது சாப்பிடணும்னு தோணும்ல எனக்கு எங்க அம்மாவைப் பார்க்கணும் பேசணும்னு ஏக்கம் வந்திடுச்சு.
நானும் என் கணவரும் நாகர்கோவிலில் இருந்து பாளையங்கோட்டை வருவோம். என் கணவர் அவர் நண்பர் வீட்டுக்கும். நான் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுக்கும் செல்வோம்.
நான் அமர்ந்திருக்கும் ஜன்னலுக்கு வெளியே எங்க அம்மா நடமாடுறது தெரியும். பார்த்துக் கொண்டே அழுதபடி அமர்ந்திருப்பேன். என் குழந்தை வயிற்றுக்குள் உருண்டபடி "அழாதே" ம்மான்னு எனக்கு ஆறுதல் சொல்லும்.
கொஞ்ச நேரத்தில் கிளம்பி என் கணவரின் நண்பர் வீட்டில் மதிய உணவை முடித்துக் கிளம்பி விடுவோம்.
எங்க அம்மா என்னைப் பார்க்கலைன்னு நான் நினைச்சிருந்தேன். ஆனால் பார்த்த அவர்கள் நான் போனதும் எதிர் வீட்டுக்குப் போய் " நானே வேணாம்னு ஒதுக்கின பிள்ளையை நீங்க எப்படி உள்ளே ஏத்துறீங்க" ன்னு சண்டை போட்டு இருக்கிறார்கள்.
எதிர் வீட்டு அம்மாவை சந்திரிகா அம்மான்னு அழைப்போம்.்மஞ்சள் பூசி நெற்றி நிறைய குங்குமம் வைத்து சுருள் சுருளான முடியில் எப்போதும் கோடாலி முடிச்சு போட்டு இருப்பார்கள். அவர்கள் ஒரே வார்த்தையில் " எங்க வீட்டுக்கு வர்ர பிள்ளையை நாங்க எப்படி வராதேன்னு சொல்ல முடியும். " னு முடிச்சிட்டாங்க.
ஒண்ணும் சொல்ல முடியாமல் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. இன்னொரு சந்தர்ப்பத்தில் ஜன்னலுக்கு வெளியே இருந்து பார்த்தவள் வீட்டுக்கு உள்ளேயே போனேன். அப்போதைய அனுபவம் திகில் அனுபவம். இதே போல் பொறுத்தமான தலைப்பு வரும் போது சொல்றேன்.
வர்ட்ட்டா!!!
நெஞ்சின் நினைவலைகள்
நான் நேற்று எழுதிய பதிவை தொடர்வதற்கு வசதியாய் தலைப்பு.
வயிற்றில் குழந்தை உருவாகி ஏழாம் மாத இறுதி. எனக்கென்னவோ இந்த பிரசவத்துக்கு அப்புறம் நம்ம கதைக்கு மங்களம் பாடிடுவாங்கன்னு ஒரு அழுத்தமான நம்பிக்கை.
அதனால் கடைசி முயற்சியாக சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திக்க முடிவு செய்தேன். பெண் சிங்கம் தானே பார்த்துக்குவோம்னு ஒரு மெத்தனம்.
அப்பவும் என் கணவரும் அவர் நண்பரும் 'நீ அழுதுகிட்டே தான் வந்து நிற்கப் போறே போக வேண்டாம்னு ' தான் சொன்னாங்க. நான் தான் கேட்கலை. எங்க வீட்டுக் கதவை படுக்கும் போது தான் அடைப்போம். திறந்த வீட்டுல எதோ போல நுழைந்து விட்டேன்.
நேரா எங்க அம்மா கிட்ட போய் எங்க கிறிஸ்தவ முறைப்படி முழங்கால் போட்டு 'அம்மா என்னை மன்னிச்சுக்கோங்கன்னேன். அம்மா காலைப் பிடித்துக் கொண்டேன்.
அம்மா காலை உதறி நான் எது போல் நுழைந்தேனோ அதையே வசைச் சொல்லாக்கி வீட்டை விட்டு வெளியேறினார்கள். நான் அழ என் தங்கைகள் ஏதாவது சாப்பிட்டுட்டு போ என அழ நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.
இது தான் நடக்கும் என எதிர்பார்த்த என் கணவர் ' இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் ' என்றார். அவருக்கு அன்பு மனைவி அழுவதும் சகிக்க முடியவில்லை. இந்த நிலையில் மகளைப் பார்த்தும் மனம் இறங்கவில்லையே என்ற கோபம். வசதியான வீட்டுப் பிள்ளையை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டோமே என்று தன் மீதே கோபம். எல்லாம் சேர்ந்து என் மீதே கோபம் பட்டார்.
என் வயிற்றுப் பிள்ளைக்கு தாய் படும் பாடு சகிக்கவில்லை போலும். உரிய காலம் வரை உள்ளிருக்க பொறுமை இல்லை.
என்ன செய்தாள்?
நெஞ்சில் நினைவலைகள் ஆர்ப்பரிக்கின்றன .
15 February, 2025
# ரயில் பயணங்களில்.
நான் முதன் முறையாக பெங்களூருக்கு டிரெயினில் வந்தேன். கன்ட்டோன்மென்ட்டில் இறங்கினால் டிராஃபிக்கில் வீட்டுக்கு வருவது ரொம்ப சிரமம் என்பதால் ஹோசூரில் இறங்கி அங்கிருந்து Cab பிடித்து பெங்களூர் வந்தேன். பஸ் டிக்கெட்டை விட ரயில் டிக்கெட் குறைவு தான். அதனால் cab க்கு சேர்த்து எல்லாம் சரியாகத் தான் வரும். ஹோசூரில் இருந்து பஸ்ஸில் வந்து விடலாம். லக்கேஜ் அதிகம் என்பதால் சிரமப்படும் என்று மாற்றி யோசித்தேன்.
ரயிலில் எந்த ப்ளாட்ஃபார்ம் , நம்ம கோச் எங்கே நிற்கும் என பல சந்தேகங்கள் வரும் என்பதால் என் கணவருக்கு டிரெயின் பிடிப்பதில்லை. எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருப்பதாலும் நெடுந் தொலைவு நிறுத்தாமல் செல்வதால் சிறுநீர் அடக்குவது போன்ற தொந்தரவுகள் இருப்பதாலும் எனக்கு பஸ் பிடிப்பதில்லை. அதனால் நான் தனியா வரும் போது ரயிலைத் தேர்வு செய்தேன்.
இப்போ ரொம்ப வசதி வந்துட்டுது. Where is my train என்னும் ஒரு app ஐ பதிவிரக்கம் செய்து வைத்திருப்பதால். அது ஒரு சர்வ ரோக நிவாரணி. அதில் நாம் எங்கிருந்து எங்கு செல்கிறோம் என்பதைக் கொடுத்தவுடன் கீழே வரும் ரயில் எண்களில் நமக்கானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் பிளாட்ஃபார்ம் எண், நம்ம டிக்கெட்டில் உள்ள கோச் நிற்கும் இடம், இன்னும் எவ்வளவு நேரத்தில் ரயில் வந்து சேரும் என்பது போன்ற தகவல்கள் எல்லாம் வந்திடுது. ரயில் நிலையத்திலும் அறிவிப்பார்கள். இருந்தாலும் அங்கே இருக்கும் பேரிரைச்சல் ஒரு தொந்தரவு.
அப்படி ப்ளாட்ஃபார்ம் தேர்ந்தெடுத்து வந்த பிறகு ரயில் நிலையத்திலேயே ரயில் வருவதற்கு கொஞ்ச நேரம் முன்பு கோச் நிற்கும் இடத்தை டிஸ்பிளே செய்கிறார்கள். அதற்கு முன்னாலும் நாம் தெரிந்து கொள்ள ஒரு வசதி இருக்கிறது.
ப்ளாட்ஃபார்மில் தரையில் பார்த்தீங்கன்னா கொஞ்ச தூரத்துக்கு ஒரு இடத்தில் 10/18 இது போல் எண்கள் பெயின்ட் பண்ணி வச்சிருப்பாங்க. இதில் தண்டவாளம் தெற்கு வடக்காக இருந்தால் 10 என்பது தெற்கு நோக்கி செல்லும் ரயிலுக்கான கோச். 18 என்பது வடக்கு நோக்கி செல்லும் ரயிலுக்கான கோச் ( இதை எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள் கமென்ட்டில் சொல்லுங்கள் 1ஆஆ.) நிற்குமிடம் கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கலாம்.
ஏறிய பின்னே பார்த்தால் யாரும் யாருக்காகவும் பெர்த் மாற்றிக் கொள்ள முடியாத படி ஒரே மூத்த குடிமக்கள் கூட்டம். பாவம் பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக அலைகிறார்கள். ஏறிய கொஞ்ச நேரத்தில் அது ஏஸி கோச் என்பதால் ஒரு பெண் மருத்துவர் வந்து ரயிலில் எழுதி வைத்திருந்த எண்ணைக் காட்டி ஏதும் அவசரம்னா இதில் கூப்பிடுங்க என்று சொல்லிச் சென்றார்கள்.
இந்த app இல் கீழே ஒரு கேள்வி கேட்பார்கள். அதில் காட்டும் பிளாட் ஃபார்ம் எண் சரிதானா இல்லை மாறி இருக்கிறதா வென. அதில் ஆம் இல்லை என்பதைத் தேர்வு செய்தால் பிற பயணிகளுக்கு உதவியாக இருக்கும் எனச் சொல்கிறார்கள். ரயில் புறப்படப் போகும் நேரத்தில் ஓடி வந்து ஏறுபவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னதாகவே வந்தவர்கள் சொல்லும் இந்தப் பதில் உதவியாக இருக்கும். சில நொடிகள் இதற்காக செலவு செய்யலாம்.
இறங்கு முன்னும் app இல் இன்னும் எவ்வளவு நேரத்தில் நாம் இறங்கணும் என்பதைத் தெரிந்து கொண்டு தயாராகிக் கொள்ளலாம். நம் பிள்ளைகள் அழைக்க வரணும்னா தகவல் சொல்லி விடலாம். அழைப்பதற்காக apo இலேயே அலார்ம். வைத்துக் கொள்ளலாம். பல வசதிகளையும் செய்து தந்திருக்கும் ரயில்வே துறைக்கு ஒரு "ஓ" போடுவோம்.
11 February, 2025
Happy hugs day
இன்று "அணைத்தல் தினமாம்"
மீட்டாவிடம் அணைத்தலுக்கு ஒரு படம் கொடு என்றால் இப்படி ஒரே நிறத்தில் உடை உடுத்தி அணைத்துக் கொண்டிருக்கும் இருவரின் படத்தைக் கொடுத்தது.
இது மட்டுமா அணைத்தல். நம்மைக் கண்டதும் ஓடி வந்து நம் கரங்களை இறுகப் பிடித்துக் கொள்வதும் ஒரு வகை அணைத்தல் தானே. உடல்கள் இணைவது மட்டுமா அணைத்தல் கரங்கள் இணைவதும் தானே. அது அன்பு கொண்ட இருவருக்கும் கொடுக்கும் பலமே அலாதி ஆனது.
நெருங்கி வர முடியாத தூரத்தில் பார்வைகள் ஒன்றோடொன்று பரிதவிப்போடு பற்றிக் கொள்வதும் அணைத்தல் தான். அது தரும் பலமும் நம்பிக்கையும் வேறு நிலை.
பார்க்கவும் முடியாத தூரத்தில் இருக்கும் போது குரல்கள் கவ்வுக் கொள்வதும் அணைத்தல் தான். அது ஒருவருக்கு கொடுக்கும் தைர்யம் சொல்லிப் புரியாது.
இதையெல்லாம் மறந்து பலரும் தலையோடு கால் வரை இணைவதை மட்டுமே அணைத்தல் என்கிறோம். ஐம்புலன்களாலும் அணைக்க முடியும். அணைப்போம்.
Happy hugs day.
06 February, 2025
அவர்களுன் பசிக்கு எங்கள் பெண் குழந்தைகளா இரை
நாங்க படிக்கிறப்போ ஆண்களுக்குத் தனிப் பள்ளி. பெண்களுக்குத் தனிப் பள்ளி. ஆண்கள் பள்ளியில் ஆண்கள் மட்டுமே ஆசிரியர்கள். பெண்கள் பள்ளிக்கு பெண்கள் மட்டுமே. அதில் சில நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது.
நாங்கள் படித்த அந்த பள்ளிகள் இன்றும் அதே போல் தான் இருக்கின்றன. பெண்கள் பள்ளி முடிந்து வரும் பெண் குழந்தைகளைப் பார்க்க அத்தனை பேர் அணி வகுத்து நிற்பாங்க. நாம தனியா சாலையில் போறோம்னு வையுங்க. தூரத்துல நாம யாரென்றே தெரியாத ஐந்தாறு பையன்கள் நிற்கிறாங்கன்னா திடீர்னு அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பாங்க. நம்ம பேரு கூட தெரியாது. என்ன சொல்லி எல்லோரும் ஒண்ணு போல திரும்புறாங்கன்னு ஆச்சர்யப்படுவேன்.
இப்பல்லா தெரியுது. பேர் எல்லாம் தெரிய வேண்டுவதில்லை. சைட் வருது, ஃபிகர் வருதுன்னு ஒன்றல்ல எத்தனையோ பேர் வச்சிருக்காங்கன்னு. அதில் யாரோ ஒருவன் திமிர் எடுத்து hurting ஆ கூட கமென்ட் சொல்லுவான். இன்னொரு ரசனை மிகுந்தவன் " இந்த ஹிப்புக்கும் லிப்புக்கும் சொத்த எழுதி கொடுக்கலாம்" னு சொல்லுவான். அவன் கொடுக்க முடிந்த சொத்து சாரி சொத்தை பல்லில் மட்டும் தான் இருக்கும். அத்தனையோட முடிஞ்சு போயிடும்.
நான் கேள்விப்பட்ட அதிக பட்ச வன்முறை தன்னை மதிக்காமல் முறைத்துக் கொண்டு half skirt இல் சைக்கிளில் சென்ற ஒரு பெண் குழந்தையின் தொடையில் ஒருவன் புது ப்ளேடால் சைக்கிளில் பக்கத்தில் போய் கீறி விட்டான் என்பது தான்.
ஆனால் இன்று வன்முறை பெண் குழந்தைகள் மேல் தலை விரித்தாடுகிறது. நான் மேலே சொன்னவன் ரவுடி என்று அறியப்பட்டவன். இன்று ஆசிரியர்கள் என்றழைக்கப்படுபவர்கள் மாணவர்கள் என்றழைக்கப்படுபவர்கள் கூட்டு சேர்ந்து இழைக்கும் அநீதி சொல்லி மாளாது. படிப்பறிவில் முன்னேறி இருக்கும் நாம் ஏனோ நாகரீகத்தில் பின் தங்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம்.
பழையபடியே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாய் பள்ளிகள் அமைத்து அவரவர் இனத்தைச் சேர்ந்தவர்களையே ஆசிரியர்களாகப் போடுங்கள். இரண்டு பெண் குழந்தைகளைத் தாங்கிய வயிறைப் பெற்றவளாய் சொல்கிறேன். ஆண்களின் பசிக்கு எங்கள் பெண் குழந்தைகளை இரையாக்காதீர்கள்.
புண்ணியமாகப் போகும்.
05 February, 2025
#மீண்டு வந்தேன்.
சொர்க்கம், நரகம் என்ற இரண்டு இருக்கிறது என்பதை பலர் நம்புகிறோம். நாங்கள் கிறிஸ்தவர்கள் அந்த ரெண்டுக்கும் நடுவில் உத்தரிக்கிற ஸ்தலம்னு ஒண்ணு இருப்பதாகவும் நம்புகிறோம். இங்கே இருப்பவர்கள் தன் தவறுகளுக்கான பரிகார காலம் முடிந்ததும் மோட்சம் செல்வார்கள் என்பது நம்பிக்கை. சிலர் அந்த நம்பிக்கை இல்லாமலும் இருக்கிறோம். அப்படியே இருந்தாலும் "கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்"
ஒரு பன்னிரண்டு வருடங்கள் இருக்கும். அப்போ எனக்கு சர்க்கரை வியாதி கண்டுபிடிக்கப் படவில்லை. மிக அதிகமாக இருந்திருக்கும் போல. இரண்டு கால் பாதங்களும் தீயாய் எரியும். வெறெந்த தொந்தரவும் இல்லாததால் இதற்கான காரணத்தைத் தேடாமல் பெரிய துவர்த்தை (டவலை) நனைத்து காலைச் சுற்றி வைப்பேன். கொஞ்சம் எரிச்சல் குறையும்.
வெளியூரில் இருக்கும் என் மகளை இரவு நேரத்தில் போனில் அழைத்து " என்னால தாங்க முடியல. செத்துடலாமான்னு இருக்கு " ன்னு அழுதிருக்கிறேன். அப்போ என்னை பலப்படுத்திக்க இப்படி நினைத்தேன். " வாழும் காலத்தில் நாம் செய்த தவறுகளுக்கு , இறந்த பிறகு நரகம் என்ற ஒன்று இருக்கிறதா அதற்கு போய் விடுவோமோ என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் நாம் செய்த தவறுகளுக்கான தண்டனையாக இதை ஏற்றுக் கொள்வோம். " இப்படி நினைத்த பின் எனக்குத் தாங்க சக்தி கிடைத்தது.
ஒவ்வொரு முறை உடல் நோவால் அவதியுறும் போதும் " நான் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்குப் பரிகாரமாக இந்த வேதனையை ஒப்புக் கொடுக்கிறேன். என்னையும் என் குடும்பத்தையும் என் பிள்ளைகளையும் அவர்கள் குடும்பத்தையும், என் பேரப் பிள்ளைகளையும் காப்பாற்று" என்று பிரார்த்திப்பேன். போதும் போதும்லிஸ்ட் பெருசா போகுதுன்னு சொல்றீங்களா?
மீண்டு விடுவேன்.
உடல் நோவைத் தாங்க பலம் கிடைக்கும். இது முதல் முறை மீளல். இதன் பின் பல முறை விழுவதும் எழுவதுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது.
03 February, 2025
#நம்பிக்கை
என் வாழ்வு கட்டமைக்கப்பட்டதே நம்பிக்கை என்னும் சாளரங்களால் தான். எத்தனை எத்தனை செயல்கள். வாழ்வின் எல்லாவிதமான ஏற்ற தாழ்வுகளையும் கடந்து இன்று ஒரு வெற்றிகரமான பெண்மணியாக ஓய்வை நிம்மதியாக கழித்துக் கொண்டு இருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்கிறேன். நான் எழுதுவதைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போட்டு விடலாம். அவ்வளவு நிகழ்வுகள்.
நான் பிறந்த தினத்தன்று அடைந்த மகிழ்வின் உச்சத்தில், ஒரு வீடு வாங்கி தன் பெயரில் பத்திரம் பதிந்திருக்கிறார் எங்க அப்பா. இதைச் சொல்வதற்கு காரணம் இருக்குது. கடைசியில் சொல்றேன். எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடித்த மகள் நான். மூன்றும் பெண்ணாய்ப் போனதால் என்னை ஆண் பிள்ளை போலவே வளர்த்தார்கள்.
என் அப்பா கல்லூரிப் பேராசிரியர் . அம்மா பள்ளி ஆசிரியை. அம்மா, அப்பா இல்லாம தனியா வெளியே போக மாட்டாங்க. அது அவர்களது முப்பத்தெட்டு வயது வரை தான். ஏன்னா அதன் பிறகு தனியே மட்டு்ம் தான் போனாங்க.
ஆம் அப்போ அம்மாவுக்கு 38. அப்பாவுக்கு 41. இருவரும் மயங்குகிறாள் ஒரு மாது படம் பார்த்திட்டு வந்து படுத்தாங்க. எங்களை அதிகம் அழைத்துச் செல்ல மாட்டாங்க. நடு இரவு மூன்று மணிக்கு ப்ரெயின் ஹெமரேஜ் ஆகி மருத்துமனைக்கு எடுத்துச் சென்ற ஒரு மணி நேரத்தில் இறந்து போனாங்க எங்க அப்பா.
அந்த இறப்பை "அப்பாவுக்கு அஞ்சலி" என்று பதிவாக்கி இருக்குறேன். வேறொரு சந்தர்ப்பத்தில் அதைப் பதிகிறேன்.
எங்க அம்மாவுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலாயிற்று. நடு வயதுப் பெண்மணி மூன்று பெண் குழந்தைகளுடன். தன் வேலையை மட்டுமே ஊன்றுகோலாய் பிடித்து மூவரையும் வளர்த்தார்கள். அப்பா இறக்கும் போது அம்மா கணிதத்தில் B.Sc. B Ed.
அதன்பிறகு M A(Eng) M.Sc ( maths) M. Ed என்ற மூன்று முதுகலைப் பட்டம் பெற்றார்கள். மூன்று பெண் குழந்தைகளுமே வளர்ந்து அரசு உத்யோகத்துக்கு வந்தோம்.
அது எழுதிய அளவிற்கு எளிதானதல்ல. அம்மா எண்பது வயது வரை சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போனார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் வீட்டை வாங்கி விட வேண்டும் என்று பக்கத்து வீட்டுக்காரர் முயற்சி செய்தார். ஆண்கள் இல்லாத குடும்பம் என்று ஒரு இளக்காரம். அம்மா இறக்கும் வரை, அந்த வீட்டை அவர் வாங்கும் நிலைக்கு கொண்டு வந்திடாதீங்கன்னு சொல்வாங்க. அதற்கு காரணம் இருந்தது. ஒரு பொதுச் சுவர் சார்ந்த தகராறில் அவர் பயன்படுத்திய கடினமான வார்த்தைகள்.
அம்மா இறந்து ஏழாண்டுகள் கழித்து வீட்டுக்கான மதிப்பை மூன்று பாகங்களாக்கி என் ஓய்வில் கிடைத்த பணத்தை இரு தங்கைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்கள் சம்மதத்தோடு வீட்டை என் பெயரில் பதிவு செய்தேன். அம்மா காலத்துக்கு பிறகு எப்படியும் வீட்டை வாங்கி விடலாம். பெண் பிள்ளைகள் தானே. ஆளுக்கொரு பக்கம் இருப்பார்கள் என்ற ஆசையில் இருந்தவர் ஏமாந்து போனார்.
எங்க அப்பா எனக்கு என்னுடைய பதினைந்து வயதுக்குள் என் வாழ்நாளுக்குத் தேவையான தன்னம்பிக்கையை கொடுத்துப் போயிருந்தார்கள்.
நம்பிக்கை தானேங்க வாழ்க்கை. அது ஒண்ணைமட்டும் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்று விடலாம்.
02 February, 2025
# எண்ணச் சிதறல்கள்
சில நேரங்களில் சிலர் சொல்லும் சில வார்த்தைகள் நமக்கு ரொம்ப பிடித்துப் போகும். அதே வார்த்தைகள் வேறொருவர் சொல்லும் போதோ வேறு சந்தர்ப்பத்தில் சொல்லும் போதோ அந்த அளவு பாதிப்பை உண்டாக்காது போகலாம். அப்படியான ஒரு விஷயம் இதோ!!
ஒரு பேட்டி. பிக் பாஸ் அருண் ( இவர் கண்ணம்மா புருஷன் என்றும் குறிப்பிடப்படுகிறார் பாரதி கண்ணம்மாவில் நடிப்பதால் 😀) , அவருடைய பெற்றோர் அவர் மணக்கப் போகும் அர்ச்சனா இவர்கள் பங்கேற்கிறார்கள்.
அருண் தன் பெற்றோரிடம் தான் அர்ச்சனாவை அவர்கள் சம்மதத்தோடு மணக்க விரும்புவதாகச் சொல்கிறார். இதை உணர்வு பூர்வமாக கவனிக்கும் அர்ச்சனா " நாம் விரும்பும் ஒருவரிடம் ஒரு நாளைக்கு 30 செகன்ட் பேச முடிந்தால் கூட அந்த நாளின் மீதி நேரத்தை ( அதாவது 23 மணி 59 நிமிடம் 30 நொடி) அடுத்த நாளின் அந்த 30 நொடியை நினைத்துக் கடந்து விடலாம். ஆனா பிக் பாஸ் போனா அது கூட முடியாதே என்பது தான் என்னை ரொம்ப வருத்தியது" னு சொன்னாங்க.
காதலின் வலிமையை இதை விட அழகா சொல்ல முடியாதுன்னு தோணுச்சு. அந்த 30 நொடி கிடைக்கப் பெற்றவர் அதிர்ஷ்டசாலிகள்.
அருணின் அப்பாவும் கலகக்காரராகவே இருக்கிறார். "அவர் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீங்க" ன்னு கேட்டதும் " எந்தக் காதலைப் பற்றி என்றார். அதற்கு அருணும் அர்ச்சனாவும் கொடுத்தது ரொம்ப க்யூட் expression.
27 January, 2025
ஒருவர் மேல் நமக்கு முழு நம்பிக்கை வந்து விட்டால் "அவர் செய்தால் சரியாக இருக்கும்" என்று நம்புவோம். அவர் செய்வது நமக்கு உடன்பாடு இல்லை என்றால் கூட மறுத்துச் சொல்லாமல் அவர் செய்வதன் காரணம் நமக்குப் புரியவில்லை என்று பொறுமையாய் அமைதியாய் இருப்போம். அதற்கு நமக்கு அவர் மேலும், அவர் செயல் திறன் மேலும், அவர் நேர்மை மேலும் முழு நம்பிக்கை வர வேண்டும். அப்பொழுது அந்த உறவு சுமுகமாய் போகும்.
அந்த காலத்தில் திருமணங்கள் அப்படித் தான் நடந்தன. கணவன் மனைவிக்கு இடையே அதிக வயது வித்தியாசம். படிப்பில் வித்தியாசம். பக்குவத்தில் வித்தியாசம். கண்ணை மூடி நம்பினார்கள். சில நேரங்களில் நம்பியவர் தவறு செய்தாலும் சகித்துச் சென்றார்கள். இப்போ அந்த வித்தியாசம் நிரவப்பட்டு குறைந்து போனதால் ஒருவருக்கு மற்றவர் மேல் முழு நம்பிக்கை இல்லை. அதனாலேயே பிணக்கு. பிரிவு.
நான் நம் முன்னோர் முழு நம்பிக்கை வைத்தது சரி என்றோ தவறு என்றோ வாதிட வரவில்லை. காரணங்களை சிந்திக்கிறேன்.
பிள்ளைகளுக்கு பெற்றவர் மேலேயே அந்த நம்பிக்கை வைக்க முடிவதில்லை. காரணம் அவர்களை விட தமக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறார்கள். வெகு சிலவாய் ஒரு சில இடங்களில் பெற்றோரே குழந்தைகளுக்கு துரோகமும் இழைக்கின்றனர். தன்னம்பிக்கை மிகுந்துள்ள அவர்களுக்கு ஒரு நேரத்தில் யாருமில்லாமல் நிர்க்கதியாய் நிற்பது போன்ற உணர்வு வரும்.
இன்று யாரோ ஒருவர் மேலாவது வருத்தமோ கோபமோ சலிப்போ வராமல், அவர் சொன்னால்/ செய்தால் சரியாகத் தான் இருக்கும், என்ற நம்பிக்கை வைக்க முடிந்தால் பிறவிப் பயன் அடைந்து விட்டோம் என்று அர்த்தம்.
என்ன நான் சொல்றது. அப்படிப்பட்ட ஒருவரையாவது சம்பாதித்து விட வேண்டும்.
அது முடியாததாலேயே பலரும், முக்கியமாய் பெண்கள் கடவுள் மேல் நம்பிக்கை வைக்கிறோம். அவர் செய்தால் சரியாய் இருக்கும். இல்லை அவரே சரி செய்வார் என்ற நம்பிக்கை தான் பல பெண்கள் சாவை நாடாமல் வாழ்வதற்கு முக்கிய காரணம்.
24 January, 2025
வட இந்தியப் பெண்கள் பொதுவாகவே நன்றாகத் தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். வீட்டு வேலைக்கு வரும் பெண் கூட லிப்ஸ்டிக் இல்லாமல் ஒரு நாள் கூட வர மாட்டாள். அதற்கு வீட்டு ஆண்களும் ஒத்துக் கொள்வார்கள்.
நம்ம பக்கத்துல வயிறு தெரியாம சேலை கட்டு, ஷால் போடாம வெளியே போகாதே எனப் பல கட்டுப்பாடுகள் பார்க்கும் போது நான் நினைத்தேன் "பரவாயில்லையே, ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ், லோ கட் நெக் எனப் போட்டு அவர்கள் ரொம்ப சுதந்திரமாக இருக்கிறார்களே என்று.
நான்கு வருடங்கள் வட இந்தியாவில் இருந்தப்போ தான் தெரிந்தது அவர்கள் சுதந்திரம் ஆடை அளவில் தான் என்று. ஆணை மகிழ்விக்க பெண்கள் அழகாக இருக்கணும் அதைத் தாண்டி அவர்கள் சிந்திப்பதை அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்ட பலர் இருந்தனர்.
இப்போ அதுக்கும் வேட்டு வச்சிடுவாங்க போலிருக்குது. அலகாபாத் கும்ப மேளாவில் அழகிய ஐஸ்வர்யாக் கண்களுடன் பாசி மணி விற்றுக் கொண்டிருந்த பெண்ணை ட்ரென்டாக்கி விட்டு , போறவங்க வாரவங்க எல்லாம் வீடியோ எடுத்து, அவர்கள் வீட்டு ஆண்கள் அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்லும் படி செய்து விட்டார்கள் .
இனி அந்த முகத்தில் பழைய சிரிப்பு வர அந்தப் பெண் எவ்வளவு போராட்டங்களைக் கடக்கணுமோ??
விட்டிடுங்க. அழகிய விஷயங்களை ரசிப்பதோட நிறுத்திக்கோங்க. அடுத்த கட்டத்துக்குப் போய் அவர்களை உலகப் பிரபலங்கள் ஆக்கி விடும் போது அவர்களுக்கு உள்ள சுதந்திரமும் பறி போகலாம்.
நாவல் முறி மருந்து.
ஆசிரியர் : எஸ். செந்தில் குமார்.
தோழமை வெளியீடு.
விலை ரூ 250.
முதல் பதிப்பு : டிசம்பர் 2009
****
குழந்தைகள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து விளையாடும் "ராஜா ராணி " விளையாட்டோடு கதை தொடங்குகிறது. ஒருவனுக்கு காய்ச்சல் என்பதால் அந்த வாரம் அவர்கள் வீட்டிலும் அவனுடைய பெரியப்பா வீட்டிலும் கறி எடுக்கவில்லை என்னும் போது வாழும் கலையை நாம் எங்கிருந்து கற்பிக்கத் தொடங்க வேண்டும் என்பது புரிகிறது.
ராமசாமியும் கந்தசாமியும் அண்ணன் தம்பி். ஒற்றுமையாக ஒன்றாக குடும்பமும் தொழிலும் நடத்திய இடத்தில், கந்தசாமி தான் நிலம் வாங்கிய விஷயத்தை தாயிடம் சொல்லவில்லை என்ற காரணத்தால் புகைந்த பகை அவர் குடும்பத்தோடு வேறு இடம் சென்றதில் முடிகிறது. ராமசாமியின் மனைவி செல்லம்மாள் " பாவி மனுஷன் செத்த வீடு மாதிரி செய்து விட்டுப் போயிட்டானே" என வருந்துகிறாள். வீடு அமைதியாக இருப்பதே மனுசனுக்கு நோய் என்று நினைக்கிறாள்.
கூட்டுக் குடும்பமாக துணி வியாபாரம் செய்தவர்கள் பிரிந்த பிறகு அவர்களுக்குள் ஏற்படும் போட்டி. உறவுகளுக்குள் முறைப் பிள்ளைகளுக்கு இடையே ஏற்படும் மெல்லிய காதல் அதன் வெளிப்பாடு , கோபத்தால் பிரிந்தவர்கள் மரணங்களால் இணையும் போது அவர்களுக்கிடையே இருக்கும் தயக்கத்தின் வெளிப்பாடு, சாங்கியம் என்ற பெயரில் உறவுகளைக் கட்டி வைத்திருந்த முறைகள், என்று அன்று இருந்து இன்று இல்லாமலாகிப் போன உறவுகளின் பிணைப்பு போன்வற்றை கதையில் அழகாகச் சொல்லி இருக்கிறார்.
இள வயது நண்பர்கள் பெண் சுகம், கோயில் திருவிழாக்களுக்கு நடனம் ஆட வரும் பெண்களிடம் சில்லறைச் சில்மிஷம், சிகரெட், குடி என தீய செயல்களில் எவ்வளவு இயல்பாக கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பதை சில இடங்களில் சொல்லி இருக்கிறார். " உன் நண்பர்கள் யாரென்று சொல். நீ யாரென்று நான் சொல்கிறேன் " என்பது தான் நினைவுக்கு வந்தது.
சந்தையில் உள்ள கடைகளில் நடக்கும் நிகழ்வுகளை வாசிக்கும் போது நாமும் சந்தையில் ஒரு கடை போட்டு அமர்ந்து பார்ப்பது போலிருக்கிறது. ரங்கம்மாள் காலையில் கடை தொடங்க வரும் போது அந்த இடத்தில் யாரோ ஒருவர் மலம் கழித்து வைத்திருப்பதைச் சொல்லும் போது ஒரு பெண்மணி தனி ஆளாக உழைக்க என்ன என்ன சிரமங்களை எல்லாம் கடக்க வேண்டி இருக்கிறது என்று பரிதாபமாக இருந்தது.
கதையில் எனக்குத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் திணிப்பு. ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது.
கந்தசாமி, ராமசாமி இருவரின் சகோதரி மயில். அவள் கணவர் பெயர் தங்கப்பழம். இவரைச் சில இடங்களில் தங்கப்பழம் என்றும் சில இடங்களில் தானா பானா என்றும் சொல்கிறார்கள். அதைத் தவிர்த்து கதை நெடுக ஒரே மாதிரிச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது.
ரசித்து வாசித்தது : தொடர்ந்து நிறைய தட்டான்கள் பட்டாணி மண்டைகளோடு இறக்கை விரித்துப் பறந்தது. ஆமால்ல தட்டான் மண்டை பட்டாணி போல் தான் இருக்கும்.
ஒரு மாதம் ஒரு கிராமத்துக்குப் போய் வாழ்ந்து வந்த திருப்தி கதையை வாசித்து முடிக்கும் போது எனக்குக் கிடைத்தது.
20 January, 2025
Reels நாம ரொம்ப பார்க்கிறதால அந்த வீடியோ போடுறவங்களோட பெர்சனலா ஒட்டுதல் ஆகிடுறோம். அதனாலேயே அவங்க மரணம் நம்மை ரொம்ப பாதிச்சிடுது.
சில வருஷங்கள் முன்னால உதயா சுமதி ஒரு கப்பிள். ரொம்ப அழகா வீடியோ போடுவாங்க. நிறைய பேருக்கு பிடிக்கும். உதயா திடீர்னு ஒரு விபத்துல சிக்கினதும் அவர்கள் பணத் தேவையை சொல்லி வீடியோ போட பலர் பண உதவி செய்தார்கள். இருந்தும் உதயா மரணித்துப் போனான். பண உதவி செய்ததாலேயே அந்த குடும்பத்துக்கு உரிமைப்பட்டவர்கள் போல பல தலையீடு இருந்தது. இன்றும் அந்தப் பெண் சுமதி தனியாகத் தான் இருக்கிறாள்.
இப்போது அது போலவே மற்றுமொரு மரணம். ராகுல் டிக்கி. பெண் வேடமிட்டு நடிப்பவர்கள் பல தாக்குதல்களைத் தாங்க வேண்டி இருக்கிறது. நிறைய பெண் வேடமிட்டும் நிறைய நகைச்சுவை காட்சிகளை நடித்தும் வீடியோ போடும் ராகுலும் எனக்கு மிகவும் பிடித்தவர் இன்ஸ்ட்டாவில். இவர் மனைவிக்கு வயது 21 ஆம்.
சமீப காலமாக ஒன்றரை லட்சம் இரண்டு லட்சம் போட்டு தன் பிள்ளைகளுக்கு இந்த வண்டி வாங்கித் தருபவர்கள் தங்கள் பிள்ளைகளை எமனின் கையில் பிடித்துக் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வண்டிகள் குறிப்பிட்ட வேகம் வரை தான் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். அதை மீறி வேகமாகச் செல்லத் தொடங்கினால் அதன் கட்டுப்பாட்டுக்குள் நாம் வந்து விடுவோம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நொடி தவறு ஒரு உயிர் பலி.
பிள்ளைகளை பறி கொடுத்து பெற்றோர் படும் பாடு காணச் சகிக்கவில்லை. சந்தோஷம் என்பதே துடைத்துப் போட்டாற் போலாகி விடுகிறது.
தன் பெற்றோரை சந்தோஷமாக வைக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த பிள்ளையும் இத்தகைய சோகத்தை பரிசாகத் தராது. தன்னைப் பெற்றவர்களை தான் பெற்றவர்களை மனதில் நிறுத்தியே ஒவ்வொரு முறையும் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
இறப்பு செய்தி கேட்டதிலிருந்து மனசே நல்லா இல்ல.
12 January, 2025
நாவல் : நெஞ்சில் ஒரு நெருஞ்சி
ஆசிரியர் : அய்க்கண்.
சிவா பதிப்பகம்.
விலை : ரூ 100/-
முதல் பதிப்பு : டிசம்பர் 2012.
இது ஆசிரியருக்கு மிகப் பிடித்தமான நாவல் எனச் சொல்கிறார். நாவல் உலகின் முடி சூடா மன்னராக விளங்குகிறார் அய்க்கண்.
கதை நாயகன் முத்து தாய் தந்தையை இழந்தவன். அவனுடைய ஹை ஸ்கூல் வாத்தியார் மாணிக்கம் தான் அவனை படிக்க வைக்கிறார். முத்துவும் காலையில் பேப்பர் போட்டு மாலையில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டித் தன் மேல் செலவுகளை பார்த்துக் கொள்கிறார்.
முத்துவை எதேச்சையாக சந்தித்து, பின் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பதை அறிந்து , மேலும் நெருங்க முயலும் லதா கதை நாயகி. அதை புரிந்து கொள்ளும் முத்துவின் சிந்தனை ரொம்ப உயர்ந்தது. அவளோ உயர்ந்த கோபுரம். அவனோ பள்ளத்தாக்கிற்குள் கிடக்கும் குப்பை. அவளுடைய பரிவு என்னும் காற்றில் அந்த குப்பை பறந்து போய் கோபுரத்தில் உட்கார்ந்து இருக்கிறது . இன்னொரு காற்றில் அந்த குப்பை மீண்டும் பள்ளத்தில் விழுந்து கிடக்கப் போகிறது. எவ்வளவு தெளிந்த சிந்தனை.
அந்தக் கதையின் ஆரம்பமே " அவனது நெஞ்சுக்குள் அந்த எண்ணம் நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டிருந்தது. அப்படி நடந்திருக்கக் கூடாது . அவள் சின்ன பெண் . ஆனால் அவன்?? " அப்படி ஒரு எதிர்பாராத நிகழ்வு தெளிந்த சிந்தனை உடைய இவனுக்கும் நிகழ்ந்து விடுகிறது.
லதாவின் அப்பா மகாலிங்கம் உடம்பு சரியில்லாமல் போக, வைத்தியத்துக்கு வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்ற இடத்தில், நடக்கும் இரண்டு நிகழ்வுகள் நெஞ்சை உருக்குபவை.
அங்கே ராஜா என்பவரின் மகள் ராஜி, சாமியிடம் போய்விட்டதாக சொல்லிவிட்ட தன் அம்மா, லதா தான் என்று நம்பி ஒட்டிக் கொள்ளும் ஓர் இடம் .
இரண்டாவதாக அந்த ராஜாவின் தந்தையான பண்ணையார் தான், தன் வியாபாரத்தில் நஷ்டப்பட்டு, வீட்டில் தற்கொலை செய்ய வேண்டாம் என, ஹோட்டலில் தங்கி தற்கொலைக்கு முயலும் மகாலிங்கத்தை அதிலிருந்து காப்பாற்றி பண உதவி செய்தவர் என்பது விளக்கப்படும் இடம்.
பிரபஞ்சம் மனிதர்களை எங்கிருந்து எங்கு போய் சேர்க்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. கதையின் பெயர் "நெஞ்சில் ஒரு நெருஞ்சி" நெருஞ்சி என்பது ஊவா முள் போல வலிக்காது. ஆனால் இருக்கும் இடத்தில் இறுக்கமாய் நின்று உறுத்திக் கொண்டே இருக்கும்.
அதுபோல் லதாவுக்கு நடந்த ஒரு எதிர்பாராத நிகழ்வு நெருஞ்சியாய் உறுத்தி அவள் மண வாழ்வுக்கு எப்படி இடைஞ்சலாய் இருந்து மன உளைச்சலைத் தருகிறது என அழகாக கதையை நகர்த்திச் செல்கிறார் .
காதல் என்பது அந்தக் கால காவியங்கள் போல tragedy யில் ஏங்கி ஏங்கிச் சாகிறதற்கு மட்டுமல்ல . நிஜ உலகிலே பிராக்டிக்கலாக வாழ்வதற்கும் முயற்சி செய்யணும். அதுதான் காதலின் உண்மையான வெற்றி என்று ஆசிரியர் சொன்னவுடன் பரவாயில்லை வித்தியாசமாக சிந்தித்து முடிவும் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன்.
ஆனால் முடிவு வழக்கம்போல் தியாக வாழ்வு . பன்னிரெண்டு வருஷங்களுக்கு முன் இப்படி. சிந்தித்ததும் சிந்திக்க வைத்ததும் தான் இன்று பலரை துணிச்சலான முடிவு எடுக்கத் தூண்டி இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். அது போல் பல நிகழ்வுகளை சொல்லும் குடும்ப கதைகளை எழுதுவதற்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்ற சிந்தனையும் எழுந்தது. இது அவசரயுகம்.
ரசித்து படித்தது:
" இதுவரை என்னைக் காதலனாக அடைந்ததற்காக நீ உன்னையே தாழ்த்திக் கொண்டாய். நவ் இட் இஸ் மை டர்ன். இனி உன்னை மனைவியாக அடைவதற்காக நான் என்னை உயர்த்திக் கொண்டாக வேண்டும். "
" ஒரு ஆண் தான் பார்க்கிற அழகிய பெண்களை எல்லாம் விரும்புகிற காலத்தில், பிற ஆண்கள் மனதில் கூட இடம்பெறாமல் இருப்பதே பெண்ணுக்கு கற்பு என்கிற புராண கால இலக்கணத்தை வைத்துப் பார்த்தால் இன்றைக்கு எல்லா பெண்களுமே கற்பு இல்லாதவர்கள் ஆகிவிடுவார்கள்"
"நெஞ்சில் ஒரு நெருஞ்சி" அழுத்தமான, ஆழமான கருத்தினைக் கொண்ட ஒரு நாவல்.
Subscribe to:
Posts (Atom)